சேரன்
சேரன் (உருத்திரமூர்த்தி சேரன்) (பிறப்பு: 1960) ஈழத்துத் தமிழ்க் கவிஞர், நாடக ஆசிரியர். பாரதிக்குப் பின் தமிழில் தீவிரமான புரட்சிக் கவிதைகளை எழுதியவராக அடையாளப்படுத்தப்படுகிறார். இவருடைய கவிதைகள் புரட்சிகரத்தின் வெம்மையையும், காதலின் உருக்கத்தையும் பேசும் இரு எல்லைகளைக் கொண்டவை. 1980-கள் தொடங்கி இலங்கையில் நிகழ்ந்த உள்நாட்டுப் போர் குறித்த ஆவணப்படுத்தல்களைத் தன் எழுத்து, கலை, பேச்சு வழியாகச் செய்துள்ளார். சமூகம், அரசியல் சார்ந்த கட்டுரைகளை எழுதினார்.
பிறப்பு, கல்வி
சேரன் இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள அளவெட்டியில் 1960-ல் பிறந்தார். தந்தை டி.உருத்திரமூர்த்தி கவிஞர், நில அலுவலராக அரசுப்பணியில் இருந்தார். தந்தை வழியாக தமிழ்க்கவிதைகள், செவ்விலக்கியங்களின் மீது ஈடுபாடு கொண்டார். கனடா, யோர்க் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.
தனி வாழ்க்கை
சேரன் ஷேர்ரி எய்கனை (Sharry Aiken) மணந்தார். அஞ்சானி, எல்லான் இரட்டைக் குழந்தைகள்.
கனடாவின் வின்சர் பல்கலைக்கழகத்தின் சமூகவியல், மானுடவியல்துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். கனடா நாட்டின் டொரண்டோ நகரில் குடும்பத்துடன் வசிக்கிறார்.
ஓவியம்
சேரன் ஓவியத்துறையிலும் ஆர்வமுடையவர். பலருடைய நூல்கள் இவரது அட்டை ஓவியத்துடன் வெளிவந்துள்ளன.
நாடக வாழ்க்கை
அவருடைய ஆங்கில நாடகங்கள் கனடாவிலும் அமெரிக்காவிலும் அரங்கேற்றப்பட்டுள்ளன. 'What If the Rain Fails', 'Canto of War', 'Not By Our Tears' ஆகிய இவரின் ஆங்கில நாடகங்களை கனடாவின் Asylum Thetare Group தயாரித்துக் கனடாவிலும் அமெரிக்காவிலும் மேடையேற்றி வருகிறது.
இலக்கிய வாழ்க்கை
சேரனின் முதல் கவிதை 1972-ல் பிரசுரமானது. கவியரசன் என்ற பெயரிலும் கவிதைகள் எழுதினார். சிறுகதைகளும் எழுதினார். சேரன் தமிழிலும் ஆங்கிலத்திலும் பல இதழ்களில் தொடர்ந்து பத்தி எழுதியுள்ளார்.
மொழிபெயர்க்கப்பட்டவை
சேரனின் கவிதைகளும் பிற படைப்புகளும் ஆங்கிலம், ஜெர்மன், மலையாளம், கன்னடம், சிங்களம், ஸ்வீடிஷ் உட்பட இருபது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சேரனின் கவிதைகள் செல்வா கனகநாயகத்தின் மொழிபெயர்ப்பில் 'You Cannot Turn Away' (Toronto: TSAR Publishers, 2011) எனவும், லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம், சாஷா எபெல்லிங் ஆகியோரின் மொழிபெயர்ப்பில் 'In a Time of Burning' (Todmorden, UK: Arc Publications, 2013), 'The Second Sunrise' (Delhi: Navayana, 2012) எனவும் வெளியாகியுள்ளன. பவானி தம்பிராஜாவின் மொழிபெயர்ப்பில் டச்சு மொழியில் Het Verhaal Van de Zee, 2018, Liefsde Kent Geen Sleur (2018) என இரு நூல்கள் வெளியாகியுள்ளன. வங்காள மொழியில், 'நிர்பச்சிதோ கொபிதா' என்ற தலைப்பில் சோபிக் டி சர்க்காரின் மொழிபெயர்ப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் 2017-ல் வெளியானது.
விருதுகள்
- ஓ.என்.வி. குருப்பு அவர்களின் நினைவாக வழங்கப்படும் ஓஎன்வி சர்வதேச இலக்கிய விருது - 2016
மதிப்பீடு
"தமிழில் எழுதப்பட்ட அசலான புரட்சிக் கவிதைகளாக சேரனின் கவிதைகளைக் காண்கிறேன். இன்னும் குறிப்பான வார்த்தைகளில் சொல்வதானால் பாரதிக்குப் பின் தமிழில் தீவிரமான புரட்சிக் கவிதைகளை எழுதியவராக சேரனை அடையாளப் படுத்த விரும்புகிறேன் - அவரது அனைத்துப் பலவீனங்களுடன். புரட்சிகரத்தின் வெம்மையில் இருந்து தப்ப, காதலில் அடைக்கலமாகின்றன சேரனின் கவிதைகள். காதலின் உருக்கத்திலிருந்து எழுந்து புரட்சிகரத்தின் தகிப்பை நாடுகின்றன. ஒன்றைக் கொண்டு இன்னொன்றை முழுமையாக சமன் செய்துகொள்கின்றன." என எழுத்தாளர் ஜெயமோகன் மதிப்பிடுகிறார்.
நூல் பட்டியல்
- இரண்டாவது சூரிய உதயம் (1983)
- யமன் (1984)
- கானல் வரி (1989)
- எலும்புக் கூடுகளின் ஊர்வலம் (1990)
- எரிந்து கொண்டிருக்கும் நேரம் (1993)
- நீ இப்பொழுது இறங்கும் ஆறு (2000)
- உயிர் கொல்லும் வார்த்தைகள்
- மீண்டும் கடலுக்கு (காலச்சுவடு பதிப்பகம்)
- காடாற்று (காலச்சுவடு பதிப்பகம்)
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டவை
- You Cannot Turn Away (Toronto: TSAR Publishers, 2011)
- In a Time of Burning (லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம், சாஷா எபெல்லிங்) (Todmorden, UK: Arc Publications, 2013)
- The Second Sunrise (Delhi: Navayana, 2012)
உசாத்துணை
- எழுத்தாளர் சேரன் - காலச்சுவடு
- Cheran: Wandering Tales - South Parade - Interview By Rohini Mohan
இணைப்புகள்
- ரத்தம், காமம், கவிதை:சேரனின் கவியுலகு - ஜெயமோகன்
- ஈழத் தமிழர்களுடைய வாழ்வுக்கும் சாவுக்கும் சாட்சி என் கவிதைகள்! - சேரன் நேர்காணல் - விகடன்
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.