மார்க்கண்டேயனார்
மார்க்கண்டேயனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று சங்கத்தொகை நூலான புறநானூற்றில் உள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
மார்க்கண்டேயனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். பதினாறு வயதினராக இருந்த சிவபக்தர் மார்க்கண்டேயரும் இப்புலவரும் ஒருவரே என்று சிலர் கூறுவர். ஆனால் அதற்கு ஏற்ற சான்றுகள் இல்லை. இறையனார், அகத்தியனார், வான்மீகனார், கெளதமனார் ஆகியவை இவரின் வேறு பெயர்கள்.
இலக்கிய வாழ்க்கை
மார்க்கண்டேயனார் பாடிய பாடல் சங்கத்தொகை நூலான புறநானூற்றில் 365-வது பாடலாக உள்ளது. நிலையாமையைப் பற்றிய பாடலாக உள்ளது.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- நிலையாமை: இந்நிலத்தை உரிமை பூண்டு ஆண்ட அரசர் எண்ணற்றவர். ஆனால் அவர்களில் ஒருவரும் நிலைபெற்று வாழவில்லை. பெற்ற பெருவளம் பிறர்கொள்ள மறைந்து போயினர். நிலையாமையை நினைவில் கொண்டு நிலைபேறுடையன புரிய வேண்டும் என்ற அறிவுரையாக பாடல் அமைந்துள்ளது.
பாடல் நடை
- புறநானூறு 365
(திணை: காஞ்சி) (துறை: பெருங் காஞ்சி)
மயங்குஇருங் கருவிய விசும்புமுக னாக,
இயங்கிய இருசுடர் கண் எனப், பெயரிய
வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம்,
வயிரக் குறட்டின் வயங்குமணி யாரத்து
பொன்னந் திகிரி முன்சமத்து உருட்டிப்,
பொருநர்க் காணாச் செருமிகு முன்பின்
முன்னோர் செல்லவும், செல்லாது, இன்னும்
விலைநலப் பெண்டிரிற் பலர்மீக் கூற,
உள்ளேன் வாழியர், யான் எனப் பன்மாண்
நிலமகள் அழுத காஞ்சியும்
உண்டென உரைப்பரால், உணர்ந்திசி னோரே.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Sep-2024, 19:57:07 IST