நொபுரு கராஷிமா
நொபுரு கராஷிமா (Noboru Karashima) (ஏப்ரல் 24, 1933 - நவம்பர் 26, 2015) இந்தியவியலாளர். ஜப்பானைச் சேர்ந்த தமிழறிஞர், ஜப்பானிய வரலாற்றறிஞர், பேராசிரியர், எழுத்தாளர். தென் இந்திய, தெற்கு ஆசிய, இடைக்காலத் தமிழக வரலாறு சார்ந்த ஆய்வுகளில் முக்கியப்பங்காற்றியவர். தொல்தமிழக நிலவுடைமைமுறை, சாதிமுறை பற்றி ஆய்வுகள் செய்தவர். சோழர்காலகட்டத்தின் அரசியல், நிலமானியமுறை பற்றிய ஆய்வுகளுக்காக மதிக்கப்படுகிறார். தொல்லியல் ஆய்வில் புள்ளியியல் சார்ந்த ஆய்வுமுறைமைகளை வலியுறுத்தியவர்.
வாழ்க்கைக் குறிப்பு
நொபுரு கராஷிமா ஜப்பான் நாட்டில் ஏப்ரல் 24, 1933-ல் பிறந்தார். ஜப்பான் நாட்டின் டோக்கியோ பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை சிறப்புப் பேராசிரியராக இருந்தார். டைஷோ(Taisho) பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக இருந்தார்.
நொபுரு கராஷிமாவின் மனைவி டாக்காகோ (Takako).
ஆய்வு வாழ்க்கை
கராஷிமா தென் இந்திய, தெற்கு ஆசிய, இடைக்காலத் தமிழக வரலாறு, சோழர்காலகட்டத்தின் அரசியல், நிலமானியமுறை சார்ந்த ஆய்வுகளில் முக்கியப்பங்காற்றினார். தொல்தமிழக நிலவுடைமைமுறை, சாதிமுறை பற்றி ஆய்வுகள் செய்தார். தொல்லியல் ஆய்வில் புள்ளியியல் சார்ந்த ஆய்வுமுறைமைகளை வலியுறுத்தினார்.
தென்னிந்திய வரலாறு
கராஷிமா சோழர் மற்றும் விஜயநகர ஆட்சிக் காலத்தைய சமூகப் பொருளியல் அமைப்புகள் குறித்த ஆய்வுகளை, கல்வெட்டுச் சான்றுகளின் துணையுடன் நடத்தினார். இவரது ஆய்வுக்கான முக்கிய தரவுகளாகக் கல்வெட்டுகள் அமைந்தன. ஒன்றிரண்டு கல்வெட்டுகளை மட்டும் சான்றாகக் கொள்ளாமல் குவியல் முறையியலைப் பயன்படுத்தி ஏராளமான கல்வெட்டுக்களைச் சான்றாகக் கொண்டார்.
ஏராளமான கல்வெட்டுகளிலிருந்து தகவல்களை வடிகட்ட புள்ளிவிவர ஆய்வியல் நுட்பங்களைப் பயன்படுத்தி புதிய முடிவுகள் மற்றும் விளக்கங்களை அளித்தார். இது தென்னிந்திய வரலாறு சார்ந்த ஆய்வில் அவரது முக்கிய பங்களிப்பாக இருந்தது. தென்னிந்தியாவின் சுருக்கமான வரலாற்றைக் கூறும் A Concise History of South India நூலை வெளியிட்டார்.
அரை நூற்றாண்டுக் காலமாக அவர் மேற்கொண்டிருந்த ஆய்வுப்பணியில் பல ஆய்வுத் திட்டங்களைப் பொறுப்பேற்று நடத்தி வந்தார். அவற்றுள் ஒன்றே, இடைக்கால சமய நிறுவனங்களை மையமாகக் கொண்ட ஆய்வு. குடிநீக்கி, குடிநீங்கா என்ற சொற்களை ஆய்ந்த அறிஞர்களின் கருத்துகளை பரிசீலித்து நொபோரு கராஷிமா குடி என்பது நிலத்தின் மீதான உரிமையினைச் சுட்டுமே தவிர குத்தகை தாரரை (tenant) குறிக்காது என்றும் குடி நீக்கி என்பது நிலத்தின் மீதான உரிமையினை நீக்குவதே தவிர குத்தகைதாரரை நீக்குவது அன்று என்றும் தம் "South Indian Society in Transition: Ancient to Medieval" என்ற ஆய்வில் விளக்கியுள்ளார். 2009-ஆம் ஆண்டில் ஜப்பானிய அரசு நல்கிய நிதி உதவியுடன் இந்த ஆய்வுத்திட்டம் அவரால் வழி நடத்தப்பட்டது. இத்திட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர்கள் எ. சுப்பராயலு, ப. சண்முகம் ஆகிய இருவரும் இணைந்து செயல்பட்டனர்.
இவ் ஆய்வுத்திட்டத்தின் ஒரு பகுதியாகச் சில கருத்தரங்குகளை நடத்தினார் கராஷிமா. இக்கருத்தரங்குக் கட்டுரைகள் சில தொகுக்கப்பட்டு 'Medieval Religious Movements and Social change : A Report On The Indian Epigraphical Study' என்ற நூலாக உருப்பெற்றது.
இடைக்காலத் தமிழக வரலாற்று ஆய்வு
நொபுரு கராஷிமா இடைக்காலத் தமிழக வரலாற்று ஆய்வில் குறிப்பிடத்தக்க பங்காற்றினார். தொல்தமிழக நிலவுடைமைமுறை, சாதிமுறை பற்றி ஆய்வுகள் செய்தார். சோழர்காலகட்டத்தின் அரசியல், நிலமானியமுறை பற்றிய ஆய்வுகளுக்காக மதிக்கப்படுகிறார். இடைக்காலத் தமிழகத்தின் வேளாண் கட்டமைப்பையும், வருவாய் அமைப்பையும் மையமாகக் கொண்டே இவரது ஆய்வுகள் நிகழ்ந்தன. அதே நேரத்தில் சமுதாயம், அரசியல் தொடர்பான செய்திகளை வெளிக்கொணர்வதிலும் ஆர்வம் காட்டினார்.
நொபுரு கராஷிமா 23 வயதிலேயே சோழ வரலாற்று ஆய்வில் ஈடுபட்டார். சோழர் ஆட்சியின் எழுச்சி, வளர்ச்சி, வீழ்ச்சியின் அடிப்படையில் சமூகக்கூறுகளையும் போக்குகளையும் புரிந்துகொள்வதற்கு ஏதுவாக சோழர் ஆட்சிகாலத்தினை நான்காகப் பகுக்கும் முறையை பயன்படுத்தினார். அதன்படி சோழர்களின் முதல் காலகட்டம்: பொ.யு. 850- 985; இரண்டாம் காலகட்டம்: பொ.யு. 985-1070; மூன்றாம் காலகட்டம்: பொ.யு. 1070-1120; நான்காம் காலகட்டம்: பொ.யு. 1120-1279. இதனை வரலாற்றுப் போக்குகளின்படி தொகுத்தளித்த நொபோரு கராஷிமா மூன்றாம் கால கட்டத்தினை சோழர் அரசு நிலைப்படுத்திக்கொண்ட காலகட்டம் என்று வகுக்கிறார். சோழர் கால கல்வெட்டுகளின் ஆய்வின் அடிப்படையில் அல்லூர் மற்றும் ஈசனமங்கலம் ஆகிய இரண்டு காவிரி டெல்டா கிராமங்களில் நிலக் கட்டுப்பாடு குறித்து கட்டுரைகள் வெளியிட்டார். இடைக்காலத் தமிழ்நாட்டில் நில உறவுகள் மற்றும் சமூக உறவுகளைப் புரிந்துகொள்ள இக்கட்டுரைகள் பெரிதும் உதவின.
கராஷிமா தன் ஆய்வில் பொ.யு. 11-ம் நூற்றாண்டில் நடந்த வேளாண் புரட்சியைச் சுட்டிக் காட்டினார். வளமான நிலங்களை இழந்தது வேளாண் புரட்சிக்கு வழிவகுத்து, அரசு அதிகாரிகளின் கொடுமைகளையும், பிரம்மதேயத்தையும் ஒடுக்க 'சித்திரமேழி பெரியநாடு' என்னும் கூட்டமைப்பு தோன்றக் காரணமானது என்று ஆய்ந்து கூறினார்.
செயல்பாடுகள்
நொபுரு கராஷிமா சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்தார். 1995-ல் தஞ்சாவூரில் நடைபெற்ற எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டை முன்னின்று நடத்தினார். அரசியல் தலையீடுகள் அதிகமாக இருந்ததாகக் கூறி 2010-ல் கோயம்புத்தூரில் நடைபெற்ற ஒன்பதாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளவில்லை.
பொறுப்புகள்
- 1985-இல் இந்திய கல்வெட்டு சமூகத்தின் (Epigraphical Society of India) தலைவராக இருந்தார்.
- 1996 முதல் 2000 வரை ‘Japan Association for South Asian Studies'-ன் தலைவராக இருந்தார்.
- 1989-2010 காலகட்டத்தில் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின்(IATR) தலைவராக இருந்தார்.
- உலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் தலைவராக 1989- 2010 ஆண்டுகளில் பணியாற்றினார்.
விருதுகள்
- இந்தியா-ஜப்பான் உறவுகளை மேம்படுத்தியதற்காக பத்மஸ்ரீ விருது - 2013
- பூகாகோ ஆசிய கலாச்சார விருது (1995)
- ஜப்பான் அகாடமி விருது (2003)
- பெர்சன் ஆஃப் கல்ச்சர் மெரிட் விருது (2007)
மதிப்பீடு
பேராசிரியர் கராஷிமா ஜப்பான், இந்தியா இரு நாடுகளிலும் உள்ள ஒரு தலைமுறை தமிழ் அறிஞர்கள் மீது வலுவான அறிவுசார் செல்வாக்கை செலுத்தியுள்ளார். அரசியலுக்கு அப்பாற்பட்டதாக ஆய்வுகளும் ஆய்வுமாநாடுகளும் இருக்கவேண்டும் என்பதில் தீவிரம் காட்டியவர்.
"தமிழகத்தின் வரலாற்றைப் பேரமைப்புகளின் வரலாறாகவும், பேரரசர்களின் வரலாறாகவும் எழுதிக் கொண்டிருந்த போக்கில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் விதமான வரலாற்றுத் தரவுகளைக் கண்டுபிடித்துச் சொன்னதில் இத்தொகை நூலுக்கு (A concordance of the names in Cōla inscriptions - Noboru Karashima, Y. Subbarayalu, Tōru Matsui) முக்கியமான பங்குண்டு. பெயர்களை நிலவியல் அலகுகள், சமூக அலகுகள்,நிர்வாக அலகுகள், அரசியல் அலகுகள் எனப் பிரித்துப் பேச நினைக்கும் வரலாற்றாய்வாளர்களுக்கும் சமூகவியல் ஆய்வாளர்களுக்கும் அடிப்படையான தரவுகள் இவை. இத்தகைய பணிகள் தமிழில் - மொழிக்காகவும், இலக்கியத்திற்காகவும், வரலாற்றிற்காகவும் நிலவியலுக்காகவும் - தொடர்ந்து செய்யப்பட்டிருக்க வேண்டிய பணிகள். அவற்றிற்கான முன்மாதிரி வேலை அது." என அ.ராமசாமி மதிப்பிடுகிறார்.
விவாதம்
நொபுரு கராஷிமா சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து 2010-ல் ராஜினாமா செய்ததும், அரசியல் தலையீடுகள் அதிகமாக இருந்ததாகக் கூறி 2010-ல் கோயம்புத்தூரில் நடைபெற்ற ஒன்பதாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தொடக்கவிழாவில் கலந்து கொள்ளாமல் இருந்ததும் ஆய்வு-அறிவுத்துறையில் விவாதத்திற்கு உள்ளாகியது.
மறைவு
நொபுரு கரஷிமா தனது 82-ஆவது வயதில் ஜப்பானில் நவம்பர் 26, 2015 அன்று காலமானார்.
இவரைப் பற்றிய நூல்கள்
- நொபொரு கராஷிமா நினைவுகளும் ஆய்வுகளும் (தொகுப்பாசிரியர்: ரா. பூங்குன்றன்)
நூல் பட்டியல்
தமிழ்
- சுருக்கமான தென் இந்திய வரலாறு
- தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும்
- வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம்
ஜப்பானிய மொழி
- இந்திய வரலாற்றில் கிராமச் சமூகங்கள் பற்றிய ஆய்வுகள், 1976 (பதிப்பாசிரியர்)
- இந்தியாவை அறிமுகப்படுத்தல், 1976 (பதிப்பாசிரியர்)
- சிந்துவெளி நாகரிகம், 1980 (இணை ஆசிரியர்)
- இந்திய உலக வரலாற்றுருவம், 1985 (பதிப்பாசிரியர்)
- தென்னாசியா கலைக்களஞ்சியம், 1992 (பொதுப் பதிப்பாசிரியர்)
- திராவிட உலகம், 1994 (பதிப்பாசிரியர்)
ஆங்கிலம்
- South Indian History and Society - Studies from Inscriptions AD 850-1800 (Oxford University Press) (1984)
- Towards a New Formation: South Indian Society under Vijayanagar Rule (1992)
- Kingship in Indian History
- A Concordance of the Names in Cōla inscriptions
- History and Society in South India: The Cholas to Vijayanagar. Comprising South Indian History and Society and Towards a New Formation (2001)
- A Concordance of Nāyakas: The Vijayanagar Inscriptions in South India (2002)
- Ancient to Medieval: South Indian Society in Transition (2009)
- A Concise History of South India: Issues and Interpretations(2014)
- Medieval Religious Movements and Social change : A Report On The Indian Epigraphical Study.
உசாத்துணை
- பேரா. நொபுரு கரஷிமா என்னும் தமிழியல் ஆய்வாளர் - அ.ராமசாமி எழுத்துகள்
- Tamil scholar who inspired a generation - TheHindu
- DMK govt has no locus standi to host global Tamil meet: Jayalalitha - timesofindia
- தமிழக வரலாற்றியலை பிரித்து மேய்ந்த ஜப்பானியர்: நொபுரு கராசிமா - vikatan
இணைப்புகள்
- இடைக்கால சமய இயக்கங்களும் சமூக மாறுதல்களும் - நொபுரு கரோஷிமா
- சோழர் அரசும் நீர் உரிமையும் (தொடக்க நிலை பார்வை) - கி.இரா.சங்கரன்
- Japanese professor emphasizes statistical analysis of Tamil inscriptions - tamilnet
- Life of Noburu Karashima by Prof. Subbarayalu - Part 1 | Tuno
- Life of Noburu Karashima by Prof. Subbarayalu - Part 2 | Tuno
- Life of Noburu Karashima by Prof. Subbarayalu - Part 3 | Tuno
- Life of Noburu Karashima by Prof. Subbarayalu - Part 4 | Tuno
- இரா.பூங்குன்றன் உரை - நொபுரு கராஷிமா நினைவு கருத்தரங்கம் I TuNo
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 14-Aug-2025, 19:56:39 IST
