ஏழக நிலை
ஏழக நிலை பொதுவியல் திணையின் துறைகளில் ஒன்று. ஏழகம் என்பது ஆட்டுக்கிடாயில் ஏறிச் செல்வதைக் குறிக்கும். யானை, குதிரை இவற்றின் மேலன்றி ஆட்டுக்கிடாயின் மீது ஏறிப் போருக்குச் செல்லினும் வெற்றி பெறும் அரசனின் வீரத்தைக் குறிக்கும்.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல்கள்
- ஆட்டுக்கிடாயில் ஊர்ந்து போருக்குச் செல்லும் நிலையினன் எனினும் அவன் வீரமும் ஊக்கமும் குறைவுடையன அல்ல என்று பாராட்டுதல்
- ஆட்டுக்கிடாயின் ஊரும் இளையவன் ஆயினும் அரசனாக ஆளும் தகுதிமிக்கவன் என்றும் போற்றுதல்
என்று இருவகையாக இதன் இலக்கணத்தை வகுக்கின்றன
ஏழகம் ஊரினும் இன்னன் என்று அவன்
தாழ்வில் ஊக்கமொடு தகை புகழ்ந்தன்று (கொளு 10.5 )
ஏந்துபுகழ் உலகின் இளமை நோக்கான்
வேந்து நிற்றலும் ஏழக நிலையே (கொளு 10.6)
வெண்பாக்கள்
எம்மனையாம் மகிழ ஏழகம் மேற்கொளினும்
தம்மதில் தாழ் வீழ்ந்திருக்கும்மே - தெம்முனையுள்
மானொடு தோன்றி மறலுங்கால் ஏழகத்
தானொடு நேராம் அரசு (244)
வேண்டார் பெரியர் விறல் வேலோன் தான் இளையன்
பூண்டான் பொழில்காவல் என்று யரையாம் - ஈண்டு
மருளன்மின் கோள் கருது மால் வரை ஆளிக்
குருளையும் கொல் களிற்றின் கேடு (245)
பொருள்: யானை, குதிரை மேல் அன்றி ஓர் ஆட்டுக்கிடாய் மீது ஏறிச் சென்றாலும் அரசன் ஆற்றல் குறைந்ததன்று; அவனுடைய பகைவர்கள் அவனுக்கு அஞ்சித் தாழிட்டு இருப்பர்' என்பது முதல் கொளுவிற்கான வெண்பா தரும் விளக்கம்.
‘ஆட்டுக்கிடாய் மேல் ஏறி விளையாடும் இளமைப் பருவத்திலேயே அரசாட்சியை ஏற்றுத் திறம்பட ஆளும் இவனை இளையவன் என்று விலக்க வேண்டாம்; சிங்கம் குட்டி எனினும் பெரிய யானையை அழிக்கும் ஆற்றலுடையது' என்பது இரண்டாம் கொளுவிற்கான வெண்பாவின் கருத்தாகும்.
உசாத்துணை
பொதுவியல் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Mar-2025, 19:06:28 IST