தென்காசி தலபுராணம்
தென்காசி தலபுராணம் தென்காசி சைவ மடத்திலுள்ள அழகிய திருச்சிற்றம்பல தேசிகரால் பொ.யு. 19-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. இத்தலபுராணம் தென்காசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோவிலின் புராணத்தை 1928 பாடல்களில் பாடுகிறது.
பதிப்பு
தென்காசி தலபுராணத்தை ஏட்டு வடிவிலிருந்து ஆறுமுக நயினார் என்பவர் பதிப்பித்திருக்கிறார். இந்நூலிலுள்ள குறிப்புரை கொண்டு இந்நூல் பொ.யு. 1876-ல் அச்சுப் பதிப்பு கண்டிருக்கலாம் என பேராசிரியர். அ.கா. பெருமாள் குறிப்பிடுகிறார்.
ஆசிரியர்
தென்காசி கோவிலைப் பற்றிய வாய்மொழி கதைகளையும், பிற கதைகளையும் இணைத்து தென்காசி தலபுராணம் உருவானது. இதனை இயற்றியவர் அழகிய திருச்சிற்றம்பல தேசிகர். இவரைக் குமாரக் கவிராயர் என்றும் அழைப்பர். [1] அழகிய திருச்சிற்றம்பல தேசிகர் தலபுராணத்தை பொ.யு. 1841-ல் (மலையாள ஆண்டு 1016) இயற்றியுள்ளார். சில காரணங்களால் அது தடைபட பின் மீண்டும் பொ.யு. 1854-ல் அதனை முழுவதுமாக அரங்கேற்றினார்.
நூல் அமைப்பு
தென்காசி தலபுராணம் பாயிரம் உட்பட 1928 பாடல்கள் கொண்டது. இந்நூல் 30 படலங்களைக் கொண்டது. கடவுள் வாழ்த்து பகுதியில் விஸ்வநாதர், உட்பட 20 பேரை ஆசிரியர் வணங்குகிறார். இதில் அவரது சைவ ஆசிரியர்களும் அடக்கம்.[2] இதன் தொடக்கத்தில் சிறப்புப் பாயிரம்[3], கடவுள் வணக்கம், புராண வரலாறு, சங்கரலிங்கம் பிள்ளையின் சாற்றுக்கவி என மொத்தம் 43 பாடல்கள் உள்ளன.
முதல் ஐந்து படலங்கள்
- தலபுராணத்தின் முதல் பகுதியில் தென்காசி நாட்டின் இயற்கை வளம், சித்திரா நதியைப் பற்றிய வர்ணனை என 102 பாடல்கள் உள்ளன.
- இரண்டாம் படலம் தென்காசியின் நகர் சிறப்பு பற்றியது. இதில் பாண்டி நாட்டு வரலாறு, அரசர்கள், அவர்கள் கோவிலுக்கு கொடுத்த நிவந்தங்கள் விட்ட ஊரின் பெருமைகள் பேசப்படுகின்றன. தென்காசி நகரின் தல விசேஷம், தீர்த்த விசேஷம், மூர்த்தி விசேஷமும் சொல்லப்படுகின்றன. தென்காசி வீதிகள் பற்றிய குறிப்புகள், தென்காசியிலிருந்த எட்டு சைவ மடங்களின் குறிப்புகள், கோபுரச் சிறப்பு, செண்பகத் தோட்டத்தின் சிறப்பு ஆகியன பாடப்பட்டுள்ளன.
- மூன்று முதல் ஐந்தாவது படலம் முறையே தல விசேஷம், தீர்த்த விசேஷம், மூர்த்தி விசேஷம் பற்றி கூறுகிறது. தென்காசியில் கட்டப்பட்ட எட்டு பிள்ளையார் கோவில்கள் பற்றிய குறிப்புகள் தல விசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
படலம் 6 - 8
தலபுராணத்தின் ஆறாவது படலத்திலிருந்தே கதை ஆரம்பமாகிறது.
ஒரு முறை நாரதர் இந்திரலோகத்தில் இந்திரனை விஷ்ணுவிற்கு இணைவைத்துப் புகழ்ந்து பாடுகிறார். இதனை அறிந்த விஷ்ணு நாரதரின் யாழை முறித்து விடுகிறார். இதனால் சோகம் கொண்ட நாரதரின் யாழை மீட்க தென்காசி விஸ்வநாதரை தரிசித்து யாழை மீட்கும் படி விஷ்ணு சொல்கிறார். நாரதரும் சித்திரா நதியில் நீராடி. பின் கௌசீக முனிவரின் ஆசிரமம் சென்று சிவத்தத்துவங்களைக் கேட்கிறார். பின் கௌசீக முனிவரும் விஸ்வநாதனை தரிசித்து யாழை மீட்கும் படி சொல்கிறார். நாரதர் அதன் படி செய்கிறார்.
படலம் 9 - 10
முற்காலத்தில் மலைகளுக்கு சிறகுகள் இருந்ததாக தொன்மங்கள் கூறுகின்றன. அப்போது மலைகள் பறந்து ஊர்கள் மேல் அமர்ந்து மக்களுக்கு துன்பம் விளைவித்தன. இதனால் மக்கள் இந்திரனிடம் சென்று முறையிட்டனர். இந்திரன் தென்காசி விஸ்வநாதரிடம் தன் வஜ்ராயுதத்தால் மலைகளின் சிறகுகளை வெட்டும் வல்லமையை வரமாகப் பெற்று, அனைத்து மலைகளின் சிறகுகளையும் வெட்டி வீழ்த்துகிறார். கைநாகம் என்ற மலை மட்டும் கடலின் அடியில் சென்று ஒழிந்துக் கொள்கிறது. அதனை கடலுக்கு அடியில் சென்று இந்திரன் வெட்ட முயற்சிக்கும் போது அது முடியாமல் போக அப்போது சிவன் இந்திரனிடம் கைநாகம் என்னும் அம்மலை தென்காசி கோவிலில் தவம் செய்தது என விளக்குகிறார்.
படலம் 11 - 12
சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நிகழ்ந்த போது மண்ணுலகிலுள்ள அனைவரும் அதனைக் காண இமயமலை சென்றனர். இதனால் தென்திசை பாரம் தாழ்ந்தது. அதனை சமன் செய்ய சிவன் அகத்தியரை தென்திசைக்குச் செல்லும்படி ஆணையிட்டார். அகத்தியர் சிவன் பார்வதி மணம் காணமுடியாமல் மனக்கலக்கமுற்ற போது சிவன் தென்திசையில் அகத்தியருக்கு மணக்கோலத்தில் காட்சியளிப்பேன் என வாக்குக் கொடுக்கிறார். அதன் படி அகத்தியர் விந்தய மலையை அடக்கி பொதிகை மலையடிவாரத்தில் சித்திரா நதிக்கரையில் அமர்ந்திருந்த போது பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில் உலகம்மையுடன் அகத்தியருக்கு காட்சியளித்தார்.
படலம் 13 - 14
தென்காசியை குலசேகரப் பாண்டியன் மாறன்மங்கலம் என்னும் விந்தன் கோட்டைக் கட்டி ஆண்டு வந்தான். அவனுக்கு குழந்தை வரமில்லாததால் சிவனை வேண்ட சிவனும் தன்னை பொதிகை மலையடிவாரத்திலுள்ள செண்பக தோட்டத்தில் வந்து வேண்டும் படிச் சொல்கிறார். அதன்படி குலசேகரப் பாண்டியன் சிவனையும், இருவாச்சி மரத்தின் அடியிலிருந்த பார்வதியும் வணங்குகிறான். அவனுக்கு ஆண் குழந்தைப் பிறக்கிறது. அதற்கு உலகநாதன் எனப் பெயரிட்டான். பின் செண்பக வனத்தில் ஒரு தோட்டம் அமைத்து அங்கேயே அமரனானான். அங்கே உள்ள கோவில் குலசேகரமுடையார் கோவிலாயிற்று. உலகநாதனுக்கு திருமணமாகி குழந்தையில்லாமல் சிவனிடம் வேண்ட, உமையே உனக்கு மகளாகப் பிறப்பாள்; அவள் உரிய வயது எய்தியதும் நானே அவளுக்கு மணாளன் ஆவேன் என வாக்களிக்கிறார். அதன்படியே நிகழ்கிறது.
படலம் 15 - 17
திருக்கடையூரில் வாழ்ந்த கௌசீகன் என்னும் முனிவரிடம் விஷ்ணு தென்காசிக்குச் சென்று விஸ்வநாதரை வணங்குமாறு கூறுகிறார். அவர் சொல்படி செய்த கௌசீகன் என்னும் மிருகண்டன் தென்காசியின் மருத்துவதி என்னும் பெண்ணை மணந்து மார்த்தாண்டன் என்னும் மகனைப் பெற்றான். அவனும் சிவனை வணங்கி புகழ் பெற்றான். சிவன், உமைக்கு காட்டிலிருந்த போது ஓம் மந்திரத்தை உபதேசித்தார். தென்காசிக்கு தரணி பீடம் என்ற பெயரும் உண்டு. இங்கே உலகம்மை நாற்பது முக்கோண வடிவில் அமர்ந்துள்ளாள்.
படலம் 18 - 20
சிலாதர முனிவன் தென்காசிக்கு வந்தான். அவனுக்கு பாண்டியனை வயலைத் தானமாகக் கொடுத்தான். வயலை உழுத போது ஒரு பெட்டியில் ஆண் குழந்தை ஒன்றிருந்தது. சிலாதரன் அதனை வளர்த்து வந்தான். அக்குழந்தை சீக்கிரம் இறந்துவிடும் என அசரீரி கேட்டது. சிலாதரன் அக்குழந்தையை தென்காசி விஸ்வநாதரின் காலடியில் கிடத்தினான். சிவன் இவன் அழிவில்லாதவன் எனக் கூறி தன் பூதக் கணங்களுள் ஒன்றாக அமர்த்திக் கொண்டார். அவன் நந்தி என முடிச்சூட்டி பட்டமும் பெற்றான்.
படலம் 21 - 24
வச்சிரவாகு என்னும் அரக்கன் பிரம்மாவிடம் தவமிருந்து ஒரு ஆண்குழந்தையைப் பெற்று சிரும்பாசுரன் எனப் பெயரிட்டான். சிரும்பாசுரன் கட்டுபாடற்று வளர்ந்தான். ஒரு முறை தூயகண்ட முனிவன் என்பவரின் மேல் கட்டெறும்புகளைப் பிடித்துவிட்டான். இதனால் நீ கட்டெறும்பாக மாறுவாய் என முனிவர் சாபம் கொடுத்தார். வச்சிரவாகு முனிவரிடம் சாப விமோசனம் வேண்டினான். முனிவர் முகம் மட்டும் எறும்பாகட்டும் என்றார். எறும்புமுகாசுரன் காவிரியின் தென்கரையில் சிவாலயம் கட்டி சிவனிடம் வரம் பெற்றான். இவ்வரத்தால் தேவர்களுக்கு தீங்குகள் பல செய்தான். தேவர்கள் உலகம்மையிடம் முறையிட்டனர். உலகம்மை எறும்புமுகாசூரனை வரம் செய்து அவனுக்கு முக்தி கொடுத்தாள்.
இராமாயணத்தின் வாலி தென்காசியில் சிவனை வழிபட்டு சித்தி பெற்றான். வாலி ஒரு குகையில் ஆறு மாதங்கள் தங்கி விஸ்வநாதனை வழிபட்டான். பின் கடலில் நீராடி கிஷ்கிந்தைக்குச் சென்றான். கண்வ முனிவர் சிவனின் ஆனந்த தாண்டவம் காண தென்காசி வந்தார். புலியூர் என்னும் ஊரில் தங்கினார். சிவன் அவருக்கு தை அம்மாவாசை நாளன்று காட்சிக் கொடுத்தார்.
படலம் 25 - 30
மாறன் மங்கலத்தை உலகநாதன் ஆட்சி செய்துவந்தான். இவன் வழியில் வந்த குலசேகரனுக்குப் பிறந்தவன் விந்தன். விந்தன் தன் பெயரால் ஒரு கோட்டை கட்டிக் கொண்டான். விந்தனின் பேரன் செண்பகப் பாண்டியன் என்னும் பராக்கிரம பாண்டியன் சேரனுடன் போரிட்டு வென்றான்.
பராக்கிரம பாண்டியனின் அறைக்குள் முருகன் முனிவர் வடிவமெடுத்து வந்தான். அதனைத் தன் அகக்கண்ணால் கண்ட பாண்டியன் முருகனை வணங்கி நின்றான். முருகன் வள்ளி தேவானையுடன் அவனுக்குக் காட்சி கொடுத்தார். பாண்டியன் முருகனிடம் காசி விஸ்வநாதனை தினமும் காணும் பேறு வேண்டுமென்றான். முருகன் தன் வாயிலிருந்து ஒரு குளிகையை எடுத்து பராக்கிரம பாண்டியனிடம் கொடுத்தான். அக்குளிகையைக் கொண்டு தான் சொல்லும் மந்திரத்தை உச்சரித்தால் ககன மார்க்கமாக (வான் வெளியில்) சென்று காசி விஸ்வநாதரை தரிசிக்கலாம் என்றான். பராக்கிரம பாண்டியனும் அதன்படி தினமும் சென்று தரிசித்து வந்தான். ஒரு நாள் செல்லும் வழியில் மதுரை சொக்கநாதரைக் கண்டான். அவர் அவனிருக்கும் இடத்திலேயே விஸ்வநாதனை தரிசிக்கும் வழி செய்கிறேன் என்றார். அதன் படி பாண்டியனின் கனவில் தோன்றி, ”நீ இருக்கும் இடத்திலிருந்து அரைக்காத தூரத்தில் நான் குழல்வாய்மொழியுடன் இருக்கிறேன். எனக்கு கோவில் எழுப்புவாய்” என்றான். பராக்கிரம பாண்டியனும் அதன் படி தென்காசி நகரை நிர்மாணித்து அங்கே கோவிலை எழுப்பினான்.
படலங்கள் அட்டவணை
| எண் | படலங்கள் | பாடல்கள் |
|---|---|---|
| 1 | நாட்டுச் சிறப்பு | 108 |
| 2 | நகரச் சிறப்பு | 116 |
| 3 | தலவிசேடம் | 62 |
| 4 | தீர்த்தவிசேடம் | 67 |
| 5 | மூர்த்தி விசேடம் | 62 |
| 6 | நாரதன் தென்காசி மான்மியம் கேட்டல் | 46 |
| 7 | நாரதன் வரம் பெறுதல் | 42 |
| 8 | நாரதன் பூசித்து கவுசிகன் உபதேசம் பெறுதல் | 71 |
| 9 | புரந்தரன் மலையின் சிறகரித்திறல் பெற்றல் | 52 |
| 10 | மைநாகம் வாழ்வு பெற்றால் | 42 |
| 11 | வச்சிராயுதம் கூர்மை பெற்றல் | 36 |
| 12 | திருமணக்காட்சி | 44 |
| 13 | குலசேகரப் பாண்டியன் மகப்பேறு அடைதல் | 44 |
| 14 | குழல்வாய்மொழியம்மை திருமணம் | 201 |
| 15 | மிருகண்டு வரம் பெறுதல் | 109 |
| 16 | தேவிக்குக் குடிலை உபதேசம் செய்து அருளியது | 29 |
| 17 | தரணிபீடச் சிறப்பு உரைத்தல் | 32 |
| 18 | சிவாதரன் மகப்பேறு அடைதல் | 19 |
| 19 | நந்தி உபதேசம் பெறுதல் | 53 |
| 20 | நந்திக்கு முடிசூட்டு விழா | 52 |
| 21 | சிரும்பாசுரன் திக்விஜயம் செய்தல் | 49 |
| 22 | சிரும்பாசுரன் சம்காரம் | 103 |
| 23 | வாலி வரம் பெறுதல் | 36 |
| 24 | கண்ணுவருக்கு ஆனந்த நடனக் காட்சி அருளியது | 49 |
| 25 | செண்பக பாண்டியன் உற்பத்தி ஆட்சி | 97 |
| 26 | செண்பக பாண்டியன் குளிகை பெறுதல் | 49 |
| 27 | செண்பகமாறன் காசி காணுதல் | 52 |
| 28 | தென்காசி திருநகர் ஆக்கியது | 51 |
| 29 | திருக்கோயில் மகிமை உரைத்தல் | 19 |
| 30 | ஆசாரவீதி உரைத்தல் | 17 |
மொழிபெயர்ப்பு நூல்
தலபுராணத்தில் ’புராண வரலாறு’ என்னும் தலைப்பில் திருச்சிறம்பல தேசிகர் ‘வட சொலான் முன்னர் தந்த சூதனைப் பணிந்து மூவாத் தமிழில் சொல்லுற்றேன்’ எனக் குறிப்பிடுகிறார். சங்கரலிங்கம் பிள்ளையும் தன் சாற்றுக்கவியில் தேசிகரைப் பற்றிக் குறிப்பிடும் போது “தென்காசி புராணத்தை வடசொல்லினின்று மொழிபெயர்த்து தந்தாயே” என்கிறார். இதன் காரணமாக தென்காசி தலபுராணம் சமஸ்கிருதத்தில் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம் என்னும் கருத்து உள்ளது. சமஸ்கிருத தலபுராணத்தை யார் எழுதினார் என அறியமுடியவில்லை.
கல்வெட்டு
தென்காசி கோவிலின் தலபுராணம் விஸ்வநாதர் ஆலயத்திலுள்ள ஒரு தூணில் கல்வெட்டாகக் கிடைத்துள்ளது.[4] கல்வெட்டு கூறும் செய்தி: வடக்கே காசியிலுள்ள விஸ்வநாதரை அரிகேசரி பராக்கிரம பாண்டியன் தினமும் தரிசனம் செய்ய விரும்பினான். அவன் விருப்பத்தை நிறைவேற்ற விஸ்வநாதர் பாண்டியனின் கனவில் தோன்றி அவனிடம் தென்காசியிலேயே கோவில் கட்டும்படி சொன்னார். சிவன் கேட்டுக் கொண்டதன் பெயரில் சக ஆண்டு 1368 -ல் வைகாசி திங்கட்கிழமை அன்று கோவிலுக்கு அஸ்திவாரமிடப்பட்டது.
வாய்மொழிக் கதை
இதே போல் தென்காசி கோவில் தலப்புராணத்தை சொல்லும் ஒரு வாய்மொழி கதையும் உள்ளது. பராக்கிரம பாண்டியன் விந்தன் கோட்டையைக் கட்டி தென்காசி பகுதியை ஆட்சி செய்து வந்தான். வடகாசியிலுள்ள விஸ்வநாதரை தினமும் தரிசக்க வேண்டும் அதற்கான வழியை அகஸ்தியரிடம் கேட்டான். அகஸ்தியரும் ககன மார்க்கமாக (வான் வெளியாக) சென்று சிவனை தரிசிக்கும் குளிகை ஒன்றைக் கொடுத்தார். பாண்டியனும் அதன் படி செய்தான். பாண்டியனின் சிரமத்தைக் கண்ட சிவன் அதனை தீர்க்க வேண்டி அவன் கனவில் தோன்றி மேற்சொன்ன செய்திகளைக் கூறினார். அதன்படி பாண்டியனின் கோட்டையிலிருந்து கிளம்பிய சிற்றெறும்புகள் சென்று சேருமிடத்தில் கோவில் எழுப்பினான். அக்கோவில் தென்காசியிலுள்ள சிற்றாற்றின் கரையில் அமைந்தது.
உசாத்துணை
- தென்காசி விஸ்வநாதர் ஆலயம், அ.கா. பெருமாள், சீ. கலையரசு, பரிசல் வெளியீடு
வெளி இணைப்புகள்
அடிக்குறிப்புகள்
- ↑ தென்காசியின் கிழக்கு பகுதியில் உள்ள புலியூர் சைவ மடத்தின் தலைவர் சந்திரசேகரர். அழகிய திருச்சிற்றம்பலத் தேசிகர் சந்திரசேகரர் வழி வந்த 42 ஆவது குரு. தேசிகர் திருமடத்திலிருந்த போது தென்காசி தமிழ்ப் புலவர் சங்கரலிங்கம் பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்க தலப்புராணத்தை தேசிகர் இயற்றினார். சங்கரலிங்கம் பிள்ளை இயற்றிய 3 சாற்றுக்கவிகளில் தலபுராண அரங்கேற்றம் பற்றிய செய்தி உள்ளது.
- ↑ விஸ்வநாதர், உலகம்மை, திருநடராசர், சிவகாமி, மயேச்சுரர், தென்முகத் தெய்வம், சண்முகப் பிள்ளையார், முருகவேள், கலைமகள், நந்தி, தண்டியடிகள், சம்பந்தர், நாவுக்கரசர், திருநாவலூரார், திருவாதவூரார், அகத்தியர், அறுபத்தி மூவர், தேசிகர், அடித்தொண்டவழுதி, சைவ ஆசிரியர், சிவத்தொண்டர்
- ↑ இதனை தட்சணாமூர்த்தி தேசிகர் இயற்றியுள்ளார்.
- ↑ கல்வெட்டு விவரம் பின் வருமாறு: “... உடையார் விஸ்வநாதர் உத்தர காசியில் எழுந்தருளியிருந்த சிவாலயம் ஜுரணமாகையாலே நமக்கு தட்சிண காசியிலே ஆலயம் செய்து தர வேணும் என்று எங்களுடைய கர்த்தர் அரிகேசரி தேவர் என்ற திருநாமம் உடைய பெண்ணின் பெருமாள் பராக்கிரம பாண்டிய தேவர் இருந்தருளிய இடத்தில் உடனே சொப்பனத்தில் திரு உள்ளம் பற்றி அருளுகையாலே முன்னாள் சகாப்தம் 1368 இன் மேல் விருஷய ஞாயிற்று 10 ஆம் தேதியும் பூர்வ பட்சத்து தசமியும் சுக்கிர வாரமும் பெற்ற உத்தரத்து நாள் மீன மூகூர்த்தமாக கர்ஷனையும் செய்து தஷிண காசியாக திருப்படை வீடும் உண்டாக்கி...”
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Jun-2025, 14:09:55 IST
