under review

அகராதி நிகண்டு (2003 நூல்)

From Tamil Wiki
Revision as of 18:34, 27 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected the links to Disambiguation page)
நிகண்டு என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: நிகண்டு (பெயர் பட்டியல்)
அகராதி நிகண்டு (2003 ஆம் ஆண்டு பதிப்பு, உ.வே.சா. நூலகம்)

அகராதி நிகண்டு (பதிப்பு: 2003), நிகண்டு நூல்களுள் ஒன்று. ஒரு சொல் பல பெயர்த் தொகுதியாக அமைந்த இந்த நூலை உ.வே.சா. நூலகம் பதிப்பித்தது. இதன் பதிப்பாசிரியர்கள்: பேராசிரியர் ம.வே. பசுபதி, புலவர் ஞா. மேகலா, எஸ். சாயிராமன்.

வெளியீடு

அகராதி நிகண்டு என்ற தலைப்பில், உ.வே.சா. நூலகம், 1983-ல் ஒரு நூலை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, 2003-ல், ஒரு சொல் பல பெயர்த் தொகுதியாக, ’அகராதி நிகண்டு’ என்ற அதே தலைப்பில் மற்றுமொரு நூலை வெளியிட்டது. இதன் பதிப்பாசிரியர்கள்: பேராசிரியர் ம.வே. பசுபதி, புலவர் ஞா. மேகலா மற்றும் எஸ். சாயிராமன் ஆகியோர்.

அகராதி நிகண்டு நூலை இயற்றியவர் யார், அதன் காலம் என்ன என்பது பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை.

நூல் அமைப்பு

நிகண்டுகள் கொளு, ஆசிரியப்பா, சூத்திர யாப்பு, கலித்துறை வடிவிலேயே அமைய வேண்டும் என்பது மரபு. அந்த வகையில் அகராதி நிகண்டு ஒற்றையடிக் கொளுக்களால் (ஓரடியாலான விளக்கக் குறிப்பு) அமைந்துள்ளது. சில பாடல்களில் மட்டும் கூடுதல் வரிகள் இடம்பெற்றன. இரண்டு அடிகளில் ஐந்தும், மூன்று அடிகளில் இரண்டும், ஆறடிகளில் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

ஒரு சொல்லுக்கு ஒன்று முதல் பத்துப் பொருள்கள் வரை ஒரு தொடரில் கொடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வரிகள் அறுசீர் விருத்தமாக அமைந்துள்ளன. சூடாமணி நிகண்டில் உள்ள பல தொடர்கள் இந்நூலிலும் இடம்பெற்றுள்ளன. சொற்கள் வர்க்க வரிசையில் இடம்பெறுகின்றன.

இந்நூலில், சில வர்க்கங்களுக்கான சொற்களும், பொருள்களும் இடம் பெறவில்லை. சுவடி பதிப்பிக்கப்பட்டபோது அப்பகுதிக்கான ஏடுகள் கிடைக்காததால் அவை இடம்பெறவில்லை.

பாடல் நடை

தகர வர்க்கம்

தரணியென் பதுவெய் யோனுந் தரையுடன் மலையு மாமே.
தண்டென்ப குழாயே வீணை தடிபடை மிதுன ராசி.
தமமென்ப இராகு வின்பேர் சாற்றிய இருளு மாமே.
தழலென்ப செந்தீ யின்பேர் கிளிகடி கோலுஞ் சார்வாம்.
தண்டென்ப குடைக்கால் யானை சார்வழித் தடிதண்டித்தல்.
தடமென்ப கரையும் பொய்கை சாற்றிய பெருமை யொப்பாம்.
தனஞ்செய னென்ப வாயுத் தழலருச் சுனன்முப் பேராம்.
தடியென்ப துலக்கை வில்லுத் தண்டுமின் தசை உடுப்பாம்.
தளிமமே யழகு மெத்தை சயனமுங் கூறலாமே.
தண்ணடை மருதத் தூருஞ் சாற்றிய நாடு மாமே.
தத்தையென் பதுவே கிள்ளை முன்பிறந் தாளு மாமே.
தனுவென்ப வில்லே நுட்பஞ் சடமொடு முப்பே ராமே.
தனமென்ப முலைஆன் கன்றே சாற்றும்உத் திரம்பொன்னாமே.
தவிசென்ப தடுக்கு மெத்தை இலகடம் முப்பேர் சாற்றும்.
தளமென்ப சேனை சாத்து தாழிபூ விதழ்நாற் பேரே.
தண்ணமோர் கட்ப றைப்பேர் தறித்திடு மழுவு மாமே.
தளையென்ப சிலம்புங் காலிற் றளையும்ஆண் மயிருமாமே.
தட்டை வேய்தினைத்தாள் கிள்ளை தனைக்கடி கோலே முண்டம்.
தம்பமே பற்றுக் கோடு தாங்கிய கவசங் கம்பம்.
தண்மையென் பதுரு ளிர்ச்சி தாழ்வுட னெளிமை யும்பேர்.
தகடென்ப தைம்மையென்று சாற்றுவ நிலையு மாமே.
தருமரா சான்றான் புத்தன் அருக்க.... னுக்கு மாமே.
தட்டென்ப பரிசை முட்டுத் தடுத்தல் தேர் நடுவே குற்றம்.
தராவென்ப மகத் தோடு சங்கென்று முரைக்க லாமே.
தளியென்ப துனியே கோயில் சமர்த்தலம் முப்பே ராமே.
தகையென்ப தழகு பண்பு தயவொடு பெருமை நாற்பேர்.
தபுதலென் பதுவே கேடுஞ் சாவுமென் றுரைக்க லாமே.
தமிழென்ப தினிமை தீர்மை சாற்றிய கவியு மாமே.
தணணமென் பதுவே யப்பா தாவிய பதனின் சுன்றாம்.
தபனனென் பதுமார்த் தாண்டன் சாதவே தாவு மாமே.
தலமென்ப திலையி னோடு தரணியு மிருபே ராமே.
தசும்பென்ப குடமும் பொன்னுஞ் சாற்றிய மிடாவு மாமே.
தட்டலென் பதுவே கிட்டல் தடுத்த லொத் தறுத்தல் முப்பேர்.
தலையென்ப சென்னி யாதி தலைமைவா னிட்மைம் பேரே.
தவவென்ப மிகுதி யோடு சாற்றிய குறைவு மாமே.
தந்தென்ப நூலின் பேருஞ் சாற்றிய குறைவு மாமே.
தகைமையே பெருமை சொக்கு சாற்றிய வியல்பு மாமே.
தனியென்ப தொப்பின் மைப்பேர் தமியென்று முரைக்கலாமே.

மதிப்பீடு

  • அகராதி நிகண்டு, இருபதாம் நூற்றாண்டுக்குப் பின் வெளியான நிகண்டு நூலாக அறியப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Jul-2024, 18:22:04 IST