being created

கிருபானந்த வாரியார்

From Tamil Wiki
Revision as of 19:01, 16 August 2025 by ASN (talk | contribs) (Para Added)
கிருபா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கிருபா (பெயர் பட்டியல்)
கிருபானந்த வாரியார்

கிருபானந்த வாரியார் (திருமுருக கிருபானந்த வாரியார்; கிருபானந்த வாரி) (ஆகஸ்ட் 25, 1906 – நவம்பர் 7, 1993) சைவ சமய அறிஞர், முருக பக்தர். சமய, ஆன்மிகச் சொற்பொழிவாளர், எழுத்தாளர். உலகெங்கும் தமிழர் வாழும் பகுதிகளுக்குச் சென்று ஆன்மிகச் சொற்பொழிவாற்றினார். பல ஆலயங்களைச் சீரமைத்து குடமுழுக்கு செய்தார். 64-வது நாயனமாராக ஆன்மிக ஆர்வலர்களால் போற்றப்பட்டார்.

பிறப்பு, கல்வி

கிருபானந்த வாரி என்னும் கிருபானந்த வாரியார், ஆகஸ்ட் 25, 1906-ல், முருகப்பெருமானுக்கு உகந்த சஷ்டி திதியில், காங்கேயநல்லூரில், புராணிகர் மல்லையதாசர் - கனகவல்லி அம்மையார் தம்பதியருக்குப் பிறந்தார். வீட்டில் இருந்தவாறே கல்வி கற்றார். ஐந்து வயது நிரம்பிய போது நூல்களைத் தாமாக படிக்கும் அளவுக்கு பயிற்சி பெற்றார். எட்டு வயதிலேயே ‘வெண்பா’ உள்ளிட்ட பல பாடல்களை இயற்றுமளவுக்குத் தேர்ச்சி பெற்றார். சித்திரக்கவிகள் இயற்றுமளவுக்குப் புலமை பெற்றார். பத்து வயதிலேயே இலக்கியம், பன்னிரு திருமுறை, புராணம் என பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் வாரியாருக்கு மனப்பாடம் ஆகியிருந்தன.

தனி வாழ்க்கை

வாரியாருக்குப் பத்தொன்பது வயது நிரம்பியபோது, மாமன் மகளான அமிர்தலட்சுமியுடன் திருமணம் நிகழ்ந்தது. குழந்தைப்பேறு வாய்க்கவில்லை.

ஆன்மிக வாழ்க்கை

தீட்சை

கிருபானந்த வாரியாருக்குக் குல வழக்கப்படி, அவருக்கு ஐந்து வயதாக இருக்கும்போது, திருவண்ணாமலை பாணிபாத்திர மடத்தில் சிவலிங்க தாரணம் செய்விக்கப்பட்டது. அதன் பிறகு குறிப்பிட்ட நன்னாளில் தந்தையார் சடாக்ஷர மந்திரத்தை உபதேசித்தார். மதுரையைச் சேர்ந்த திருப்புகழ்ச் சாமிகள், காங்கேயநல்லூருக்கு வந்தபோது, அருணகிரிநாதருடைய ஆராதனை விழாவில், முருகப் பெருமானின் ஆலயத்தில் வைத்து கிருபானந்த வாரியாருக்கு சூட்சும சடாக்ஷர மந்திரத்தை உபதேசித்தருளினார். அவரே கிருபாபந்தவாரியாரின் குருநாதர்களில் ஒருவராக அமைந்தார். பெருமணநல்லூரில் மகா சிவராத்திரியன்று பழநி, சைவ சித்தாந்த சரபம், சிவத்திரு ஈசான சிவாச்சாரிய சுவாமிகள், வாரியாருக்கு சிவாகம விதிப்படி தீட்சை கொடுத்தருளினார். அப்பொழுது வாரியாருக்கு ’வாம தேவ சிவம்’ என்ற தீட்சாநாமம் அளிக்கப்பட்டது.

சொற்பொழிவு

தந்தை மல்லையதாசர், தான் சொற்பொழிவுச் செய்யச் செல்லும் இடமெல்லாம் வாரியாரையும் உடன் அழைத்துச் சென்றார். அங்கு தந்தைக்கு உதவியாக இருந்து பின்பாட்டு பாடி, கையேடு வாசித்தார். தந்தையின் சொற்பொழிவுகளை உன்னிப்பாகக் கவனித்து பேச்சுக்கலையின் நுட்பங்களைக் கற்றுக் கொண்டார். தந்தையுடன் இருமுறை கப்பலில் பர்மா சென்று தந்தை ஆற்றிய சொற்பொழிவுகளில் பின்பாட்டுப் பாடி, மக்களின் மனம் கவர்ந்தார்.

நாளடைவில் கிருபானந்த வாரியாருக்குத் தனியாகச் சொற்பொழிவு செய்யும் வாய்ப்புகள் வந்தன. தந்தையும் அனுமதி அளித்ததால் பல்வேறு தலங்களுக்கும் ஊர்களுக்கும் சென்று ஆன்மிகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். குறிப்பாகச் சென்னையில் அவரது சொற்பொழிவுகளுக்கு மிகுதியாக வரவேற்புக் கிடைத்தது. அதனால் சென்னையிலேயே தங்கி அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று சொற்பொழிவு செய்தார்.

பாம்பன் சுவாமிகளுடன் சந்திப்பு

கிருபானந்த வாரியார், சென்னையில், ஒரு சமயம் சொற்பொழிவாற்றச் சென்றபோது, அருகில் உள்ள இடத்தில் பாம்பன் சுவாமிகள் தங்கியிருப்பதை அறிந்தார். நண்பர்களோடு சுவாமிகளைக் காணச் சென்றார். சுவாமிகள் அப்போது 'அசோக காலவாசம்’ என்ற தனது நூலுக்கு விளக்கவுரை ஆற்றிக்கொண்டிருந்தார். அதனைக் கேட்டு விளக்கம் பெற்றார் வாரியார்.

கிருபானந்த வாரியாரின் முதல் குருவாக அருணகிரிநாத சுவாமிகளும். இரண்டாவது குருவாகப் பாம்பன் சுவாமிகளும் அமைந்தனர். தனது இல்லத்துப் பூஜை அறையில், முருகப்பெருமான், அருணகிரிநாதர் ஆகியோரோடு, பாம்பன் சுவாமிகள் திருவுருவப் படத்தையும் வைத்து வழிபாடு செய்து வந்தார்.

பாம்பன் சுவாமிகள் சமாதியான பிறகு, திருவான்மியூரில் உள்ள அவரது சமாதிக் கோயிலுக்கு அவ்வப்போது சென்று வந்தார். அங்கு நிகழும் ’மயூரவாகன சேவன’ விழாவிலும், பாம்பன் சுவாமிகளின் குருபூஜை விழாவிலும் கலந்துகொண்டு ஆன்மிகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.

ஆன்மிகப் பயணங்கள்

பல்வேறு ஆன்மிகத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்ட வாரியார், அருணகிரிநாதருக்கு முருகன் அருள் புரிந்த தலமான வயலூருக்கு வந்தார். உடன் சென்னை திருப்புகழ் குழுவினரும் வந்திருந்தனர். திருப்புகழ்ப் பாடல்களை ஓதி, முருகப்பெருமானுக்கு வெள்ளிக் கவசம் சாத்தி வழிபட்டார் வாரியார். பின் சென்னைக்குத் திரும்பினார். அவரது கனவில் முருகப்பெருமான் தோன்றி அருள் புரிந்தார் என்பது தொன்மம்.

ஆலயத் திருப்பணிகள்

ஒரு சமயம் திருச்சி மலைக்கோட்டை விநாயகர் ஆலயத்துக்கு வாரியார் விரிவுரையாற்ற வந்திருந்தார். அப்போது அங்கு அவரை, வயலூர் முருகன் திருக்கோயில் அறங்காவலர் திருச்சி ராதாகிருஷ்ணன் செட்டியார். தனது நண்பர்களுடன் வந்து சந்தித்தார். வாரியாரிடம் அவர், “வயலூர் ராஜகோபுரத் திருப்பணி பல முறை முயன்றும் முடியாமல் நின்று விட்டது. நீங்கள் தான் தலைமை தாங்கி நடத்தி வைக்க வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார். வாரியாரும் அதற்கு ஒப்புக் கொண்டார்.

1935-ல், வயலூர் ராஜகோபுரத் திருப்பணியைத் தொடங்கினார். பல நபர்களைச் சந்தித்து, பல சொற்பொழிவுகளை நிகழ்த்தி நிதி திரட்டி அப்பணியைச் சிறப்பாக நிறைவேற்றினார். அதுவே தனியாக அவர் செய்த அவரது முதல் ஆலயத் திருப்பணி. அதற்கு முன் தனது தந்தையுடன் இணைந்து தன் ஊரான காங்கேயநல்லூர் ஆலயப் பணியை மேற்கொண்டிருந்தார். அந்த அனுபவம் அவருக்கு உதவியது.

வயலூர் ஆலயத் திருப்பணி நிகழ்வைத் தொடர்ந்து பலரும் வாரியாரைச் சந்தித்து பல்வேறு திருப்பணிகளை முடித்துத் தருமாறு வேண்டினர். அதன் படி வடலூர் சத்திய ஞான சபைப் பணியைத் தொடங்கி பல்வேறு இன்னல்களுக்கிடையே அதனை நடத்தி முடித்தார். அதே போல் அங்கு அமைக்க வேண்டிய ஸ்தூபியும் சிறப்பாக அமைய உதவினார். தொடர்ந்து மோகனூரில் அருணகிரிநாதர் அறச்சாலையையும், 1940ல் சென்னை குயப்பேட்டை கந்தசாமி கோயில் ராஜகோபுரத் திருப்பணியையும் மேற்கொண்டார். தொடர்ந்து வள்ளிமலை, காஞ்சிபுரம், திருநெல்வேலி, சமயபுரம், சிதம்பரம், கோயம்புத்தூர், திருவானைக்காவல், மதுரை, திருமோகூர், சென்னை தேனாம்பேட்டை, ஸ்ரீரங்கம், நெல்லிக்குப்பம், கும்பகோணம், சைதாப்பேட்டை, திருப்பராய்த்துறை ஆகிய ஊர்களில் உள்ள பல ஆலயத் திருப்பணிகளை மேற்கொண்டார். கோடிக்கணக்கான ரூபாய்களை வசூலித்துக் கொடுத்து பணிகள் சிறப்புடன் நிறைவேற உழைத்தார். கும்பாபிஷேக விழாக்களின் போது அந்தந்த ஆலய இறைவர்கள் மீது பல பதிகங்களைப் பாடினார். அவை பின்னர் தொகுக்கப்பட்டு 'பைந்தமிழ்ப் பாமாலை’ என்ற பெயரில் நூலாக வெளிவந்தது.

பலி வழிபாடு தவிர்த்தல்

அக்காலத்தில் பல ஆலயங்களில் விலங்குகளைப் பலியிட்டு வழிபடுவது வழக்கமாக இருந்தது. இதனை வாரியார் கடுமையாக எதிர்த்தார். “உயிர்க்கொலை புரிதல் பாவம்; தீது” என்றும், “ஆண்டவன் இவற்றை ஒருபோதும் விரும்புவதில்லை” என்றும் எடுத்துரைத்தார். தனது சொற்பொழிவுகளில் இது குறித்துப் பேசினார். திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் ஆயிரத்தம்மனுக்குப் பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்தின் முன் ஓர் எருமைக் கடாவை நிறுத்தி ஒரே வெட்டில் வெட்டி அறுத்துப் பலியிடுவது வழக்கமாக இருந்தது. வாரியார் அங்கு சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் உதவியுடன் அப்பலியைத் தடுத்து நிறுத்தினார்.

சொற்பொழிவும் உதவிகளும்

இந்தியா மட்டுமல்லாது இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று வாரியார் பல சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். தனது சொற்பொழிவின் மூலம் கிடைத்த நிதியைக் ஆலயங்களை எழுப்பவும், திருப்பணிகளை மேற்கொள்ளவும் பயன்படுத்தினார். ஆதரவற்றோர் ஆசிரமங்களுக்கும், தன் குரு திருப்புகழ்ச்சாமியின் குடும்பத்தினருக்கும், வறுமையில் வாடுபவர்களுக்கும் வழங்கி உதவினார்.

அருணகிரிநாதர் அறக்கட்டளை

ஒரு சமயம் வாரியாருக்குக் கனவு ஒன்று வந்தது. அதில் வாரியாரின் குருநாதரான அருணகிரிநாதர், உணவு கேட்பது போன்ற காட்சி வந்தது. அதன் உட்பொருளை உணர்ந்த வாரியார், அருணகிரிநாதருக்கு நிரந்தர நிவேதனமும், பூஜையும், வழிபாடும், சிறப்புற நடப்பதற்காக அருணகிரிநாதர் அறக்கட்டளை என்பதை ஏற்படுத்தினார்.

பெற்றோருக்குச் சமாதி

வாரியாரின் தந்தை மல்லையதாசர், மார்ச் 17, 1950ல் சிவனடி சேர்ந்தார். தந்தையின் வேண்டுகோளின்படி வாரியார், லிங்காயத்து வழிபாட்டு முறைப்படி தந்தையாருக்குச் சமாதி நிகழ்வுகளைச் செய்வித்தார். நித்திய வழிபாட்டுக்கான அறக்கட்டளைகளை நிறுவினார், ஆண்டுதோறும் நினைவு நாள் விழாவை நடத்தினார்.

அக்டோபர் 20, 1977-ல், வாரியாரின் தாயார் காலமானார். அவருக்கு, வாரியார் தமது தந்தையார் விருப்பப்படி சிவாலய நந்தி போல் தாயையும் வணங்குமாறு, தந்தையின் சமாதியில், தந்தை சமாதிக்கு எதிரே தாயும் அமர்ந்திருக்கும் முறையில் நினைவிடம் எழுப்பினார். தாயாருக்கு நித்திய வழிபாட்டுக்கான நியமக் கட்டளைகளை நிறுவி, ஆண்டுதோறும் நினைவு நாள் விழாவையும் நடத்தினார்.

தல யாத்திரை

வாரியார், முக்தித் தலங்களாகப் போற்றப்பட்டும் அயோத்தி, மதுரா, ஹரித்துவார், வாரணாசி, காஞ்சிபுரம், உஜ்ஜைனி மற்றும் துவாரகைக்குத் தல யாத்திரை சென்று வழிபட்டு வந்தார். தொடர்ந்து பன்னிரு ஜோதிர்லிங்கத் திருத்தலங்களான சோம்நாத், மல்லிகார்ஜுனர், மகாகாளேஸ்வர், ஓம்காரேஷ்வர், பைத்யநாத், பீமாசங்கர், ராமேஷ்வர், நாகேஷ்வர், காசி விஸ்வநாதர், த்ரம்யபகேஷ்வர், கேதார்நாத், கிரிஷ்னேஸ்வர் ஆகிய தலங்களுக்குச் சென்று தரிசித்து வந்தார்.








🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.