under review

பூவை செங்குட்டுவன்

From Tamil Wiki
Revision as of 18:15, 13 September 2025 by Madhusaml (talk | contribs) (Finalised)
பூவை செங்குட்டுவன்
பூவை செங்குட்டுவன்
கண்ணதாசன் விருது

பூவை செங்குட்டுவன் (பிப்ரவரி 12, 1935 - செப்டெம்பர் 5, 2025) கவிஞர், திரைப் பாடலாசிரியர். திராவிட இயக்க பாடல்கள் பலவற்றை எழுதியவர். தமிழில் புகழ்பெற்ற பக்திப் பாடல்களின் ஆசிரியர்.

பிறப்பு, கல்வி

பூவை செங்குட்டுவன் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகாமை கீழப்பூங்குடியில் முக்குலத்தோர் குடியில் புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்தார். ராமையா அம்பலம்- லட்சுமி அம்மாள் இணையருக்கு ஆறாவது குழந்தை. ரங்கூனில் வணிகம் செய்த ராமையா அம்பலம் செல்வந்தர். செங்குட்டுவனின் இயற்பெயர் முருகவேல் காந்தி. செங்குட்டுவன் என்ற நாடகத்தைப் பார்த்து தன் பெயரை செங்குட்டுவன் என்று மாற்றிக்கொண்டார். பூங்குடியை பூவை என்ற புனைபெயர் ஆக்கிக்கொண்டார்.

கீழப்பூங்குடி திண்ணைப் பள்ளிக் கூடத்தில் ஆரம்பக் கல்வியையும், அதன்பின் ஓராண்டுகள் ரங்கூனில் உள்ள வெள்ளைச்சாமி பள்ளியிலும், சிவகங்கை மன்னர் மேனிலைப் பள்ளியிலும் பயின்றார்.

தனிவாழ்க்கை

பூவை செங்குட்டுவன் 1956ல் தன் தாய்மாமன் மகள் காந்திமதியை மணந்துகொண்டார். பூவை தயா, ரவிச்சந்திரன் என்ற இரு மகன்களும், கலைச்செல்வி, விஜயலக்ஷிமி என்ற இரு மகள்களும் உள்ளனர்.

இலக்கியவாழ்க்கை

பூவை செங்குட்டுவன் சி.என். அண்ணாத்துரை எழுதிய கல் சுமந்த கசடர் என்னும் நாடகம் வழியாக இலக்கிய ஆர்வம் கொண்டார். திராவிடர் கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளராக இருந்தார். 'தம்பி தவறிவிட்டான்' என்னும் நாடகத்தை 1957ல் எழுதினார். அந்நாடகம் சி.என்.அண்ணாத்துரை தலைமையில் வெளியாகியது.

பூவை செங்குட்டுவன் நாடகப்பாடல்கள், பக்திப்பாடல்கள், நாடகங்கள் என தொடர்ச்சியாக எழுதியுள்ளார். திருக்குறளின் 133 அத்தியாயங்களில் இருந்தும் ஒவ்வொரு பாடலை எடுத்து 'குறள் தரும் பொருள்' என்னும் தொகுப்பாக இசைப்பாடல் ஆக்கியுள்ளார். குன்னக்குடி வைத்தியநாதன் வானொலியில் ஓவியன் மகள் என்னும் நாடகத்திற்கு அனைத்துப் பாடல்களையும் பூவை செங்குட்டுவனைக் கொண்டு எழுதவைத்தார். அது தொடக்கமாக அமைந்தது.

ஆன்மிகம்

திராவிட இயக்க ஆதரவாளராக இருந்த பூவை செங்குட்டுவன் பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார். பின்னர் தீவிரமான இறை பக்தி கொண்டவராக மாறி நாலாயிரத்துக்கும் மேற்பட்ட பக்திப்பாடல்களை இயற்றினார். வானொலியில் பணியாற்றுக்கொண்டிருந்த குன்னக்குடி வைத்தியநாதன் கோரியதனால் வானொலிக்காக எழுதிய 'திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்' என்னும் பாடல்தான் பூவை செங்குட்டுவன் எழுதிய முதல் பக்திப்பாடல். அது திரைப்படத்திலும் பின்னர் இடம்பெற்று பெரும்புகழ் பெற்றது.

அரசியல்

தொடக்ககாலத்தில் சி.என்.அண்ணாத்துரை மேல் கொண்ட ஈர்ப்பால் திராவிட முன்னேற்றக் கழக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார். கட்சியின் நாடகக்குழுவில் பங்கேற்றுச் செயல்பட்டார். பின்னர் திராவிட இயக்க அரசியலில் இருந்து விலகிக் கொண்டார்.

திரை வாழ்க்கை

பூவை செங்குட்டுவனின் தந்தை ஊரில் ஒரு திரையரங்கை நடத்திவந்தார். அங்கே பார்த்த திரைப்படங்களால் ஈர்க்கப்பட்டு 1956ல் சென்னைக்கு பாடலாசிரியராகும் பொருட்டு கிளம்பிச் சென்றார்.

வானொலிக்காக எழுதிய திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் என்ற பாடலை 1967-ல் வெளிவந்த கந்தன் கருணை படத்துக்குப் பயன்படுத்தலாம் என்று கண்ணதாசன் பரிந்துரைத்தமையால் கே.வி. மகாதேவன் இசையமைத்த அப்படத்தில் அப்பாடல் இடம்பெற்றது. அதன்பின் வா ராஜா வா (1969) என்னும் படத்திற்கு இசையமைத்த குன்னக்குடி வைத்தியநாதன் எல்லா பாடல்களையும் பூவை செங்குட்டுவன் எழுதச்செய்தார்.

பூவை செங்குட்டுவன் ஏறத்தாழ 1400 திரைப்பட பாடல்கள் எழுதியுள்ளார். இரண்டு படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார்.

புகழ்பெற்ற பாடல்கள் (உதாரணத்திற்கு)

  • திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் (கந்தன் கருணை)
  • தாயிற் சிறந்த கோயிலுமில்லை (அகத்தியர்)
  • ஏடு தந்தானடி தில்லையிலே (ராஜராஜ சோழன்)
  • இறைவன் படைத்த உலகை (வா ராஜா வா)
  • நான் உங்கள் வீட்டுப் பிள்ளை (புதிய பூமி )
  • ராதையின் நெஞ்சமே (கனிமுத்துப்பாப்பா)
  • காலம் நமக்கு தோழன் (பெத்த மனம் பித்து)
  • காலம் எனக்கொரு (பௌர்ணமி)
  • முத்தமிழில் பாடவந்தேன் (மேல்நாட்டு மருமகள்)

விருதுகள்

  • கலைமாமணி விருது
  • கண்ணதாசன் விருது
  • 2010- கவிஞர்கள் திருநாள் விருது
  • 2021- மகாகவி பாரதியார் விருது
  • வாலி விருது - வாலி பதிப்பகம், 2024

மறைவு

பூவை செங்குட்டுவன் செப்டெம்பர் 5, 2025 அன்று சென்னையில் தன் 90-வது அகவையில் மறைந்தார்.

இலக்கிய இடம்

பூவை செங்குட்டுவன் தமிழகத்தில் பெரும்புகழ்பெற்ற பக்திப்பாடல்களின் ஆசிரியராக அறியப்படுகிறார். முருகனைப் பற்றிய அவருடைய பக்திப்பாடல்கள் அரைநூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்ச்சூழலில் புகழுடன் உள்ளன. திரைப்பாடலாசிரியராகவும் அறியப்படுகிறார்.

நூல்கள்

  • வாழ்க்கை எனும் நேர்கோடு (தன்வரலாறு)

உசாத்துணை


✅Finalised Page