பாரதி மகாகவியா விவாதம்

From Tamil Wiki
Revision as of 13:05, 4 August 2025 by Jeyamohan (talk | contribs) (Created page with "பாரதி மகாகவியா விவாதம் ==தொடக்கம் == 1935ல் காரைக்குடியில் பாரதிவிழாவில் பேசிய வ.ராமசாமி ஐயங்கார் 'பாரதியாரின் கவிதை வரி ஒன்றுக்கு ஷேக்ஸ்பியரோ ஷெல்லியோ ஈடாக மாட்டார்கள் என்று ப...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பாரதி மகாகவியா விவாதம்

தொடக்கம்

1935ல் காரைக்குடியில் பாரதிவிழாவில் பேசிய வ.ராமசாமி ஐயங்கார் 'பாரதியாரின் கவிதை வரி ஒன்றுக்கு ஷேக்ஸ்பியரோ ஷெல்லியோ ஈடாக மாட்டார்கள் என்று பேசினார். அதை அவருடன் பயணம் செய்த ந.ராமரத்தினம் மணிக்கொடி இதழில் எழுதினார். பாரதியாரை மகாகவி என்று வ.ரா குறிப்பிட்டு வந்தார்.

டி.கே.சிதம்பரநாத முதலியார் முன்னெடுத்த செவ்வியல் ரசனைமரபைச் சார்ந்தவரான பி.ஸ்ரீ. ஆச்சார்யா 1935 செப்டெம்பரில் தினமணி வெளியிட்ட பாரதி மலர் இதழில் நெல்லை நேசன் என்ற பெயரில் இதற்கு மறுப்பு எழுதினார். வீரமுரசு என்னும் அக்கட்டுரையில் பாரதியார் தேசியகவியே ஒழிய மகாகவி அல்ல என்று சொன்னார். அதற்கு ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து தினமணியில் எழுதினார்கள்.

தொடர்ந்து 3 நவம்பர் 1935 ஆனந்தவிகடன் இதழில் ஓர் இலக்கிய மாணாக்கன் என்னும் பெயரில் வெளியான கடிதத்தில் கல்கி நெல்லைநேசனுக்கு ஆதரவளித்து, வ.ரா ஓர் எழுத்தறியாதவர் (நிரக்ஷரகுக்ஷி) என எழுதினார். பாரதி தேசியக்கவி என ஒப்புக் கொள்ளலாம் என்றும், வால்மீகி, காளிதாசர், ஷேக்ஸ்பியர், ஷெல்லி, முதலியவர்களுக்கு நிகராகச் சொல்லமுடியாது என்றும் எழுதினார்.

நவம்பர் 1935 இதழில் இதற்கு வ.ரா கடுமையாக பதிலளித்தார். பாரதியார் கம்பன், ஷெல்லி, ஆண்டாள் ஆகிய மூவரும் கலந்த கலவையான பெருங்கவிஞர் என காலம் நிரூபிக்கும் என எழுதினார். 7 டிசம்பர் 1935 சுதேசமித்திரனில் அதற்கு கல்கி பதிலளித்தார். பாரதியின் வள்ளிப்பாட்டு போன்றவை விரசமானவை என கல்கி எழுதினார். அதற்கு 15 டிசம்பர் 1935 சுதேசமித்திரன் இதழில் வ.ரா பதிலளித்தார்.

இச்சூழலில் சிட்டி பம்பாய் ஸ்டேண்டேட் என்னும் ஆங்கில இதழில் இதைப்பற்றி ஒரு கட்டுரை எழுதினார். அதை தமிழாக்கம் செய்து 11 டிசம்பர் 1935 தினமணி இதழில் வெளியிட்டார். 12 டிசம்பர் 1935 இதழில் இன்னொரு கட்டுரையையும் எழுதினார். ஆங்கில இலக்கிய விமர்சன மரபை தான் கற்றறிந்துள்ளதாகச் சொன்ன சிட்டி கல்கி முதலியோர் நவீன ஆங்கில இலக்கிய விமர்சன மரபில் வாசிப்பின்மையால்தான் பாரதியை புரிந்துகொள்ள முடியவில்லை என்று அக்கட்டுரையில் குறிப்பிட்டார்.

இச்சூழலில் பி.எஸ். ராமையா 13 டிசம்பர் 1935 இதழில் கல்கியை கோழை என வசைபாடி ஒரு கட்டுரையை எழுதினார். புதுமைப்பித்தனும் புனைபெயரில் கல்கியை கடுமையாக வசைபாடி எழுதினார். 21 டிசம்பர் 1935 தினமணியில் சிட்டி விரிவான இன்னொரு கட்டுரையை எழுதினார். 21 டிசம்பர் 1935 தினமணி இதழில் இளங்கோவன் கல்கியின் எழுத்து ஆபாசமானது என கண்டித்து எழுதினார். 28 டிசம்பர் 1936 சுதேசமித்திரனில் சிட்டி மீண்டும் ஒரு நீண்ட அழகியல்கோட்பாட்டுக் கட்டுரையை எழுதினார்.