under review

குணாட்யர்

From Tamil Wiki
Revision as of 11:14, 12 July 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected year suffix text;)

குணாட்யர் (குணாதித்யர்) (பொயு 3-ம் நூற்றாண்டு) தொன்மங்களால் அறியப்படும் இந்தியப் பெருங்கவிஞர். பைசாசிக மொழியில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் பிருஹத் கதா என்னும் நூலின் ஆசிரியர். சாதவாகனப் பேரரசின் தலைநகரமான பிரதிஷ்டானபுரியில் வாழ்ந்தார்.

வாழ்க்கைக்கதை

குணாட்யர் பொயு 3-ம் நூற்றாண்டில் தொன்மங்களால் அறியப்படும் இந்தியப் பெருங்கவிஞர். சாதவாகனப் பேரரசின் தலைநகரமான பிரதிஷ்டானபுரியில் வாழ்ந்தார்.

கதாசரித சாகரம் பிருஹத்கதாவின் உருவாக்கத்தைப் பற்றி இப்படி ஒரு தொன்மத்தைச் சொல்கிறது. கைலாய மலையில் இருந்த சிவன் தன் மனைவி பார்வதிக்கு பிருஹத்கதாவின் கதையைச் சொன்னார். அதை வித்யாதரமனாகிய புஷ்பதந்தன் ஒட்டுகேட்டான். அதை அவன் தன் மனைவி ஜயைக்கு சொன்னான். ஜயை பார்வதியிடம் அக்கதையைச் சொல்ல, பார்வதி என்ன நடந்தது என அறிந்துகொண்டாள். பார்வதி புஷ்பதந்தனை தீச்சொல் இடும்போது புஷ்பதந்தனின் நண்பனான மால்யவான் அவனுக்கு பரிந்து பேசினான். இருவரையும் பார்வதி தீச்சொல்லிட்டாள். அதன்படி புஷ்பதந்தன் மனிதனாகக் காட்டில் பிறந்து அக்கதையை கானபூதி என்னும் பைசாசிகனிடம் சொல்லவேண்டும். அதன்பின் தீச்சொல் விடுதலை பெற்று கௌசாம்பி என்னும் ஊரில் வரருசி என்னும் முனிவராக மறுபிறப்பு எடுக்கவேண்டும். மால்யவான் குணாத்யன் என்னும் கவிஞனாகப் பிறந்து கனபூதி என்னும் பைசாசிகனிடமிருந்து அக்கதையை கேட்டு அதை ஒரு காவியமாக ஆக்கி உலகுக்கு அளிக்கவேண்டும். அதனூடாக அவனுக்கு விண்மீட்சி அமையும் என்றாள் பார்வதி.

குபேரனின் சாபத்தால் கானபூதி என்னும் பிசாசாக மாறி இருந்த சுப்ரதீகன் என்னும் யட்சன் விந்தியமலை அருகே ஓரு காட்டில் வாழ்ந்து வந்தான். மால்யவான் சுப்ரதிஷ்டை அல்லது பிரதிஷ்டானபுரம் என்னும் நகரில் குணாட்யனாகப் பிறந்தான். வரருசி கானபூதியிடமிருந்து சிவன் சொன்ன கதையைக் கேட்டறிந்தான். அவரிடமிருந்து அதைக் கேட்டறிந்த குணாட்யர் அதை ஆறுலட்சம் பாடல்கள் கொண்ட பெருங்காவியமாக எழுதினார்.

குணாட்யர் தன் ரத்தத்தால் காட்டின் இலைகளில் அந்தக் காவியத்தை எழுதியதாகவும், அதை அவர் சாதவாகன அரசரின் அவையில் அரங்கேற்ற முயன்றதாகவும், அப்போது அங்கிருந்த பண்டிதர்கள் அந்தக் காவியத்தின் மொழியான பைசாசிகம் செவிக்கு அருவருப்பூட்டுவதாகச் சொல்லி அதை நிராகரித்தனர். மனம் உடைந்த குணாட்யர் காட்டுக்குச் சென்று சிதை மூட்டி அதில் தன்னுடைய பெருங்காவியத்தை ஒவ்வொரு இலையாக வாசித்து தீயிலிட்டார்.

காட்டுக்கு வேட்டைக்குச் சென்ற சாதவாகன அரசன் காட்டிலுள்ள அத்தனை விலங்குகளும் கூடி அமைதியாக அமர்ந்து அக்காவியத்தை கேட்பதைக் கண்டு அதன் மகத்துவத்தை உணர்ந்து ஓடிப்போய் குணாட்யரை தடுத்தான். ஆனால் அந்த பெருங்காவியத்தின் 7 காண்டங்களில் ஒன்று மட்டுமே எஞ்சியது. ஆறு காண்டங்களும் தீயில் எரிந்தன. குணாட்யரும் தீயில் பாய்ந்து மறைந்தார். அந்த ஒரு காண்டத்திலுள்ள கதைகளே இன்று எஞ்சுகின்றன. இக்கதை பிற்கால நூலான கதாசரிதசாகரத்தில் உள்ளது.

இலக்கிய வாழ்க்கை

குணாட்யர் பிருஹத்கதா என்ற காவியத்தை வடமேற்கு இந்தியாவின் எல்லைப் பகுதியின் பொதுமக்களின் மொழியான பைசாசம் என்ற மொழியில் எழுதினார். இந்த நூல் தொலைந்து போனது. மன்னர் விக்கிரமாதித்யன் (சந்திரகுப்தர் II) தொடர்பான ஆரம்பக்குறிப்புகள் இந்நூலில் உள்ளன. இது உரைநடையில் எழுதப்பட்டதாக தண்டி குறிப்பிட்டுள்ளார்.

பிருஹத்கதா பொயு 6-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. சம்ஸ்கிருத கவிஞர்களான தண்டி, சுபந்து, பாணபட்டர் போன்றவர்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டிருப்பதனால் இந்நூல் அவர்களுக்கு முன் பொயு 6-ல் எழுதப்பட்டிருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் ஃபாசன், ஹர்ஷர் ஆகியோரால் எழுதப்பட்ட உதயணகுமாரனின் கதை பிருஹத் கதா நூலில் இருந்து எடுத்தாளப்பட்டது எனப்படுகிறது. ஆகவே பொயு 3-ம் நூற்றாண்டிலேயே பிருஹத்கதா எழுதப்பட்டிருக்கலாம் என்றும் ஆய்வாளர் கருதுகிறார்கள்.

வழி நூல்கள்

பிருகத்கதையின் வழி நூல்களாக சமஸ்கிருதத்தில் க்ஷேமேந்திரரின் (பொ.யு.1025-75) எழுதிய பிருஹத்கதா மஞ்சரி, சோமதேவரின்(1063-81) கதாசரித சாகரம், புத்தஸ்வாமியின் பிருஹத்கதா ஸ்லோக சம்கிரகா (பொயு 10) ஆகிய நூல்கள் உள்ளன. இவை பிருஹத்கதாவின் கதைகளை மறு ஆக்கம் செய்து உருவாக்கப்பட்டவை எனப்படுகிறது.

தமிழில் பொ.யு. 11ஆம் நூற்றாண்டில் கொங்கு நாட்டைச் சேர்ந்த கொங்குவேளிர் எழுதிய பெருங்கதை காப்பியம் உள்ளது. இது பிருஹத்கதாவின் மறு ஆக்கமே எனப்படுகிறது. இது பிருகத்கதையின் பெரும் கதைப்பகுதியில் ஒன்றான உதயணன் கதையை மட்டும் சொல்கிறது. தமிழில் கந்தியர் எழுதிய உதயண குமார காவியம் பெருங்கதையின் சுருக்கமான வடிவம். இதுவும் பிருஹத்கதையின் இன்னொரு வடிவம் எனப்படுகிறது. பாஸன் எழுதியதாகக் கருதப்படும் ஸ்வப்ன வாசவதத்தம், யௌகந்தராயணம் என்ற இரு நாடகங்களும், இந்த உதயணன் கதையின் சில சம்பவங்களைக் கொண்டு எழுதப்பட்டவை. உதயணன் கதை மேலும் பலவாறு இந்திய இலக்கியத்தில் எடுத்தாளப்பட்டுள்ளது. கதைக் கடலில் மட்டுமே உதயணன் மகனாகிய நரவாகனதத்தன் காவியத் தலைவனாக விளங்குகிறான்.

ஆனால் இந்நூல்களின் கதைகள் பிருஹத்கதையின் தொடர்ச்சியே என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை. பிருஹத்கதை ஒரு கதைத்தொகுதியாகவோ, நீண்ட காவியமாகவோ இருந்திருக்கலாம் என்றும் இக்கதைகளும் அவற்றில் இருந்திருக்கலாம் என்றும் மட்டுமே ஆய்வாளர் கூறுகிறார்கள்.

இலக்கிய இடம்

குணாட்யர் எழுதிய பிருஹத்கதா பைசாசிக மொழியில் எழுதப்பட்டது என ஆசாரிய தண்டி உள்ளிட்டோர் கூறுகின்றனர். இந்தியாவின் பொதுவான அறிவியக்க மொழியாக விளங்கிய சம்ஸ்கிருதம், அதற்கிணையான இடத்தை வெவ்வேறு காலகட்டங்களில் பெற்றிருந்த பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளுக்கெல்லாம் அடிப்படையாக பழங்குடி மொழிகள் இருந்துள்ளன என்பதிலும், அவற்றில் பேரிலக்கியங்கள் உருவாயின என்பதற்கும் பிருஹத்கதா சான்று. பிற்காலத்தில் பல காவியங்களின் கதைப்பொருளாக திகழ்ந்த உதயணன் கதை போன்ற பல கதைகள் அடங்கிய மாபெரும் கதைக்கொத்து அது. இன்றைய ஆய்வாளர்கள் அந்நூல் கிடைத்திருந்தால் அதுதான் மானுடத்தின் மிகப்பெரிய தொல்நூலாக இருந்திருக்கும் என கருதுகிறார்கள்.

நூல்

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.