under review

எம். ஆர். ஜம்புநாதன்

From Tamil Wiki
Revision as of 21:57, 25 August 2022 by ASN (talk | contribs) (spelling mistakes corrected. Final Check.)
எம். ஆர். ஜம்புநாதன்
யஜூர் வேதக் கதைகள்

எம். ஆர். ஜம்புநாதன் (மணக்கால் ராமசாமி ஜம்புநாதன்; 1896-1974) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், சமூக சேவகர் எனச் செயல்பட்டவர். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகள் அறிந்தவர். ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என நான்கு வேதங்களையும் தமிழில் மொழிபெயர்த்து அளித்தவர். ’ஜம்புநாதன் புஸ்தகசாலை’ என்ற தனது பதிப்பகத்தின் மூலம் பல நூல்களை அச்சிட்டு வெளியிட்டவர்.

பிறப்பு, கல்வி

மணக்கால் ராமசாமி ஜம்புநாதன் எனப்படும் ம.ரா.ஜம்புநாதன், திருச்சியை அடுத்துள்ள மணக்காலில், ஆகஸ்ட் 23, 1896-ல், ராமசாமி ஐயர்-லக்ஷ்மி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை, வேத விற்பன்னராகவும், அவதானியாகவும் இருந்தார். பரம்பரை வழி ஜம்புநாதனுக்கும் அபார நினைவாற்றல் இருந்தது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் என நான்குமொழிகளிலும் புலமை பெற்றார். வேதங்களை முறையாக் கற்றுத் தேர்ந்தார். உயர் கல்வியை முடித்த பின், சென்னையில் சிவில் என்ஜினியரிங் படித்தார்.

தனி வாழ்க்கை

படிப்பை முடித்ததும் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனில் சிவில் என்ஜினியராகப் பணியாற்றும் வாய்ப்பு ஜம்புநாதனுக்குக் கிடைத்தது. இது அடித்தட்டு மக்களுடன் அவர் நெருங்கிப் பழகவும், அவர்களது பிரச்சனைகளை அறிந்து கொள்ளவும் காரணமானது.

சமூக வாழ்க்கை

ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அதிக அன்பும் அக்கறையும் கொண்டிருந்தார் ஜம்புநாதன். குறிப்பாக, மும்பையின் சாலையோரச் சிறுவர்கள் படும் கஷ்டங்களையும், அங்கு வசிக்கும் தமிழர்கள் படும் அவலங்களையும் கண்டு மனம் வருந்தினார். அங்கு வாழும் தமிழ் மக்களின் பிள்ளைகள் முறையாகக் கல்வி பயில்வதற்காக மும்பை, தாராவியில் 1924-ல் தொடக்கப்பள்ளி ஒன்றை ஏற்படுத்தினார். அந்தப் பள்ளிதான், தமிழர்கள் கல்வி புரிவதற்கென்று மும்பையில் தோற்றுவிக்கப்பட்ட முதல் தமிழ்ப் பள்ளி. அதனை அடிப்படையாகக் கொண்டு, மாநகராட்சியின் உதவியுடன் பிற்காலத்தில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் ஐம்பத்திற்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள் தோன்றின.

ஜம்புநாதனின் நாணயச் சேகரிப்பு
நாணயச் சேகரிப்பு

பள்ளியில் படிக்கும் போதே நாணயங்கள் சேகரிப்பில் ஆர்வம் உடையவராக இருந்தார் ஜம்புநாதன். ஊர் ஊராகச் சென்று ஆலயங்களை, கல்வெட்டுக்களைப் பார்வையிடுவதும், வரலாறுகளை அறிவதும், அது தொடர்பான நாணயங்கள் கிடைத்தால் அவற்றைச் சேகரிப்பதும் அவர் வழக்கம். சோழ, பல்லவ, விஜயநகரப் பேரரசுகள், பிரெஞ், பிரிட்டிஷ் நாணயங்கள் என பலதரப்பட்டதாக அவரது நாணயச் சேகரிப்புகள் விளங்கின. இவை தவிர ஔரங்கசீப்பின் நாணயங்கள், மைசூர் உடையார்கள், சுல்தான்கள், புதுக்கோட்டை சமஸ்தான நாணயங்கள், ஹைதராபாத் நிஜாம் நாணயங்கள் என 138 அரிய நாணயங்களை அவர் சேகரித்து வைத்திருந்தார். அவை பின்னர் ரிசர்வ் வங்கியின் அருங்காட்சியகமான மும்பையில் இருக்கும் RBI Monetary Museum-மிற்கு வழங்கப்பட்டன.

பிற பணிகளும் பொறுப்புகளும்

Indian Chapters of International PEN (Poem, Essayists and Novelists) Centre எனப்படும் படைப்பாளிகளுக்கான அமைப்பில் உறுப்பினர், செயலாளர் என பல பொறுப்புகளை வகித்திருக்கிறார் ஜம்புநாதன். சிதம்பரத்தில் நடந்த அதன் அகில இந்திய மாநாட்டிற்கு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆகியோரை வரவழைத்து சிறப்புரையாற்றியிருக்கிறார்.  ஜப்பானில் நடந்த PEN மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார். ”உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம்”, ”உலக சம்ஸ்கிருத அகாதமி ”என பல அமைப்புகளில் உறுப்பினராகப் பதவி வகித்ததுடன் பல நிகழ்ச்சிகளைப் பொறுப்பேற்று நடத்தியிருக்கிறார்.

ஆன்மிக வாழ்க்கை

ஜம்புநாதன் மும்பையில் வாழ்ந்த காலத்தில் அவருக்கு, ஆரிய சமாஜம் மீது ஆர்வம் பிறந்தது. சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் கொள்கையால் ஈர்க்கப்பட்டார். சாதிகளற்ற சமுதாயம் காண்பதே ஜம்புநாதனது நோக்கமாக இருந்தது. ”இறைவன் படைப்பில் எல்லோரும் சமம். உயர்வு தாழ்வு இல்லை. அனைவரும் அனைத்தையும் கற்றுக் கொள்ள உரிமை உள்ளவர்களே” என்பது போன்ற எண்ணங்கள் வலுத்தன. வேதம் பற்றிய நூலைத் தமிழில் மொழிபெயர்த்தமைக்கு அவரது இந்த சமரச எண்ணங்களே அடிப்படைக் காரணம்.

கதா ரதம்

இலக்கிய வாழ்க்கை

இளம் வயது முதலே இதழியல், இலக்கிய, பதிப்புப் பணிகளில் ஜம்புநாதனுக்கு ஆர்வம் அதிகமிருந்தது. புத்தக விற்பனைக்காகவே ‘ஜம்புநாதன் புஸ்தகசாலை’ நூல் பதிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் போன்ற மொழிகளில் அவர் கொண்டிருந்த புலமை நூல் உருவாக்கப் பணிகளுக்கு உதவியாக இருந்தது.

ஜம்புநாதன் எழுதிய முதல் நூல் ‘சுவாமி தயானந்த சரஸ்வதியின் வாழ்க்கை வரலாறு’ . 1918-ல் அந்நூல் வெளியானது. தொடர்ந்து  ‘வேத சந்திரிகை’, ‘சீன வேதம்’, ‘த்ரிமூர்த்தி உண்மை’ எனப் பல நூல்களை வெளியிட்டார்.

யஜுர் வேதம் - ஸாம வேதம் - தமிழ் மொழிபெயர்ப்பு
சமர்ப்பணம்
வேதங்கள் மொழிபெயர்ப்பு

ஜம்புநாதன் செய்த பணியில் மகத்தானது, வேதங்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டதாகும். வேதம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அவை எல்லோருக்கும், குறிப்பாக, தாழ்த்தப்பட்டோர் என்ற பெயரில் உயர்குடி மக்களால் ஒதுக்கப்பட்டோருக்கும் போய்ச் சேரவேண்டும் என ஜம்புநாதன் விரும்பினார். தீவிர வேத ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அந்த முயற்சியின் விளைவாக சாம வேதத்தைத் தமிழில் மொழிபெயர்த்து 1935-ல் வெளியிட்டார். தொடர்ந்து சுக்ல யஜூர் வேதம், கிருஷ்ண யஜூர் வேதம் ஆகியன 1938-ல் வெளியாகின. தனது வேத நூலை ஹரிஜனங்களுக்குச் சமர்ப்பணம் செய்வதாக நூலில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதர்வ வேதத்தை 1940-ல் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அந்நூலில், “வேதங்கள் பாரதத்தின் சொத்து. எல்லா மொழிகளிலும் அவை மொழிபெயர்க்கப்பட வேண்டும். அவை குறிப்பிட்ட ஜாதியினருக்கு மட்டும் சொந்தமானதில்லை. இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. ஒவ்வொரும் அதைப் படித்து அதன் உண்மையான பொருளை உணர்ந்து கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தேவ பாஷையான சம்ஸ்கிருதத்தில் உள்ள வேதங்களைத் தமிழில் மொழி பெயர்ப்பதா என்று பாரம்பரியமான சில பண்டிதர்களிடமிருந்து எதிர்ப்பும், தடையும் எழுந்த போதும் அதனை எதிர்கொண்டு, புறந்தள்ளி இம்மொழிபெயர்ப்புகளை உருவாக்கி அளித்தார் ஜம்புநாதன். இவை தமிழில் வெளி வருவதற்கு உதவிகரமாக இருந்தவர்கள் தருமபுர ஆதீனம், திருப்பனந்தாள் ஆதீனம், காசி மடாதிபதி ஆகியோர்.

இந்தியாவின் பண்டைய வேதமான ரிக் வேதத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்து 1970-ல் அதனை மொழிபெயர்த்து முடித்தார் ஜம்புநாதன். அதனை நூலாக்கும் பணியில் ஈடுபட்டார். ரிக்வேதம் பற்றிய அவரது தமிழ் மொழிபெயர்ப்பின் முதல் தொகுதி, 1978-ல் பாபா அணு உலை நிறுவன இயக்குநராக இருந்த ராஜா ராமண்ணா அவர்களால் மும்பையில் வெளியிடப்பட்டது. இரண்டாவது பகுதியை அப்போது ரிசர்வ பாங்க் கவர்னராக இருந்த ஐ.ஜி.படேல் அவர்கள் 1980-ல் வெளியிட்டார்.

மும்பை தமிழ் எழுத்தாளர் சங்கக் கூட்டம் - 1959

பாராட்டுக்கள் - விருதுகள்

டாக்டர் ராதா கமத் முகர்ஜி, டாக்டர் சுனில் குமார் சட்டர்ஜி, மொரார்ஜி தேசாய், பி.டி.ஜட்டி என பலர் ஜம்புநாதனின் பணியை பாராட்டி வாழ்த்தியுள்ளனர். ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், தி சண்டே ஸ்டாண்டர்ட், தி இல்லஸ்ட்ரேட் வீகிலி, லோகோபகாரி என பல இதழ்கள், ஜம்புநாதனின் மொழிபெயர்ப்பு முயற்சியைப் பாராட்டியுள்ளன.

மும்பை தமிழ் எழுத்தாளர் சங்கம், 1959-ல், கி.வா.ஜ. மற்றும் கே.எம். முன்ஷி தலைமையில் நடந்த விழாவில் எம்.ஆர். ஜம்புநாதனைக் கௌரவப்படுத்தியது

நம்பும் அரிய வேதங்கள்

நல்ல தமிழில் நமக்குதவும்

ஜம்புநாதப் பேரறிஞன்

தரணி மீது வாழ்கவே!

- என்று ஜம்புநாதனின் அரிய பணியை புகழ்ந்துரைத்துள்ளார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

வேதங்களைத் தமிழில் தந்ததால் ‘வேதம் தமிழ் செய்த நாதன்' என்றும் ஜம்புநாதன் போற்றப்பட்டார்.

நேரு மற்றும் சர்பள்ளி ராதாகிருஷ்ணன் உடன் ஜம்புநாதன்

மறைவு

உடல்நலக் குறைவால் டிசம்பர் 18, 1974-ல் ஜம்புநாதன் காலமானார்.

ஆவணம்

ஜம்புநாதன் தனது ’ஜம்புநாதன் புஸ்தகசாலை’ மூலம் எழுதி வெளியிட்ட சில நூல்கள், வேத மொழிபெயர்ப்புகள் ஆர்கைவ் தளம், வேதிக் கிரந்த் தளம் போன்றவற்றில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

வரலாற்று இடம்

”மொழிபெயர்ப்பாளர் என்ற முறையில் மூலத்தை சிதைக்காது, எந்தக் கருத்தையும் தம் விருப்பம் போல் சேர்க்காது, கூட்டாது, குறைக்காது வேதம் கூறுவதை அப்படியே தந்திருக்கின்றார்'' என்று ஜம்புநாதனின் மொழிபெயர்ப்பு நூலை மதிப்பிடுகிறார் வேத விற்பன்னரான அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.

"ஒரு நிறுவனம் செய்ய வேண்டிய பணியைத் தனியொருவராகச் செய்து சாதனை புரிந்துள்ளார் ஜம்புநாதன் என்பது உளந்திறந்து பாராட்டுதலுக்குரியது. அவர் முதன் முயற்சியைத் தொடர்ந்து, வேறு எந்த வேத நெறி பரப்பும் நிறுவனமோ, தனிநபரோ வேத மொழிபெயர்ப்புக்குத் துணியவில்லை என்பதும் ஜம்புநாதனின் அரிய பணிக்குச் சான்று” என்கிறார், ஆய்வாளர், எழுத்தாளர், விமர்சக அறிஞர் பெ.சு.மணி.

ஜம்புநாதன் புத்தகங்கள்

நூல்கள்

தமிழ் நூல்கள்
  • சுவாமி தயானந்த சரஸ்வதியின் வாழ்க்கை வரலாறு
  • திரிமூர்த்தி உண்மை
  • ஸ்ரீ சிரத்தானந்தர் சரிதம்
  • வேத சந்திரிகை
  • சீன வேதம்
  • சுவாமி தயானந்த சரஸ்வதியின் சத்தியார்த்தப் பிரகாசம்
  • வைதிக ஜயபேரிகை
  • மாஜினியின் சரித்திரமும் மனிதர்களின் கடமைகளும்
  • கடோபநிஷதம்
  • கதாசாகரம்
  • வேத காண்டிகை
  • ஸாம வேதம்
  • யஜுர் வேதம்
  • அதர்வ வேதம்
  • ரிக் வேதம்
  • உபநிஷக் கதைகள்
  • யஜுர் வேத சதபத பிராமணம்
  • யோகாசனம்
  • யஜுர் வேதக் கதைகள்
ஆங்கில நூல்கள்
  • Yoga Asanas
  • The Yoga Body
  • Swami Shraddhanand
  • Short Stories from the Great Upanishads
  • Roja Thottam: Sheikh Shadis Gulistan
  • Yajurved Stories

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.