பொ. ராஜகோபால் (கட்டைக்கூத்து)
பொ. ராஜகோபால் (Perungattur P. Rajagopal) (பிறப்பு: 1953) தமிழ் கூத்துக் கலைஞர்களில் ஒருவர். வாத்தியார். கட்டைக்கூத்து சங்கத்தை ஆரம்பித்தார். கட்டைக்கூத்து குருகுலத்தின் நிறுவனர்களில் ஒருவர். பெண்கள் கட்டைக்கூத்தில் பங்கு பெறுவதை பெருமளவில் ஊக்குவித்தவர்.
வாழ்க்கைக் குறிப்பு
பொ. ராஜகோபால் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவிலுள்ள பெருங்கட்டூரில் பொன்னுசாமிக்கு மகனாக 1953-ல் பிறந்தார். தந்தை, தாத்தா கூத்துக் கலைஞர்கள். தாத்தா மிருதங்கம் வாசிப்பார்.
தனிவாழ்க்கை
பொ. ராஜகோபால் 1987-ல் கலவை வரதராஜ பெருமாள் கோயிலில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தன் காதல் மனைவியான ஹன்னே ப்ரூயினை (Hanne M. de Bruin) சந்தித்தார். 1995-ல் திருமணம் செய்து கொண்டார். ஹன்னே ப்ரூயின் கட்டைக்கூத்து ஆய்வறிஞர்.
அமைப்புப் பணிகள்
- 1990-ல் கட்டைக்கூத்து சங்கத்தை ஆரம்பித்தார்.
- 2002-ல் தன் மனைவியுடன் சேர்ந்து கட்டைக்கூத்து குருகுலத்தை ஆரம்பித்தார். இது கட்டைக்கூத்துக் கலையைக் கற்கும் மாணவர்களுக்கான உறைவிடப் பள்ளி. பல்வேறு பாணி கட்டைக்கூத்துக் கலைஞர்கள், இசைவாணர்களை உள்ளடக்கியது. கட்டைக்கூத்தில் பெண் கூத்தர்களின் பங்கை வலியுறுத்தும் பணியையும் செய்தது.
கலை வாழ்க்கை
பொ. ராஜகோபால் பத்து வயது முதல் தன் தந்தை பொன்னுசாமியிடமிருந்து கட்டைக்கூத்தை கற்றுக் கொண்டார். மகாபாரதக் கூத்துக்கள், சுபத்ரை கல்யாணம், கிருஷ்ணன் தூது, ராமா ராவணா, தக்ஷ யாகம் ஆகியவை இவர் ஆடிய கூத்துக்களில் சில.
பொ. ராஜகோபால் 2019-2022 காலகட்டத்தில் ஹரியானா மாநிலத்திலுள்ள அசோகா பல்கலைக்கழகத்தின் வருகைதரு ஆசிரியராக இருந்தார். நெதர்லாந்து, பெல்ஜியம், ஐக்கிய அரசுகள், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கட்டைகூத்து பயிற்றுவித்து அரங்காற்றுகை செய்துள்ளார்.
விருதுகள்
- கலைமாமணி விருது 2005
- தக்ஷின சித்ரா விருது 2010
மதிப்பீடு
ரிச்சர்ட் அர்மாண்டோ ஃபிராஸ்கா (Richard Armando Frasca) தான் எழுதிய "The Theatre of the Mahabharatha" (Therukkuttu Performances in South India)" என்ற ஆய்வு நூலில் உதவியதற்காக ராஜகோபாலுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அவருடைய கட்டைக்கூத்து பற்றிய செயல்பாடுகளை தமிழகத்தின் மிகச்சிறந்த முன்னெடுப்பு என்ற வகையிலும் பாராட்டியுள்ளார்.
விவாதம்
பொ. ராஜகோபால் கட்டைக்கூத்து என்று குறிப்பிடுவதை திருவண்ணாமலை, செய்யாறு பகுதிகளில் உள்ள தெருக்கூத்துக் கலைஞர்கள் விரும்பவில்லை. தெருக்கூத்து, கட்டைக் கூத்து என்ற பகுப்புமுறை கூத்துக் கலைஞர்களிடம் பெரும் விவாதத்திற்குரியதாக உள்ளது.
பங்கேற்ற கூத்துகள்
- மகாபாரதக் கூத்துக்கள்
- சுபத்ரை கல்யாணம்
- கிருஷ்ணன் தூது
- ராமா ராவணா
- தக்ஷ யாகம்
- பார்வை (The Gaze)
உசாத்துணை
- Kuttu Raga-s: Evoking the character - musicacademymadras
- Kattaikkuttu Sangam opens its doors to new ideas and learners - The Hindu
இணைப்புகள்
- kattaikkuttu - வலைதளம்
- கட்டைக்கூத்து காணொளிகள் - ராஜகோபால - Sue Rees தளம்
- Kattaikkuttu Theatre - traditional & contemporary - youtube
- குருகுலம் மூலம் கட்டை கூத்து கலையை வளர்க்கும் கலைஞன் திரு.பொ. ராஜகோபால் அவர்களுடன் | பேசும் தலைமை
- The Theatre of the Mahabharatha" (Therukkuttu Performances in South India - Richard Armando Frasca - Internet Archives
✅Finalised Page