மாதர் மறுமணம் (இதழ்)
கைம்பெண்களின் மறுமணத்தை ஆதரித்துத் தமிழில் வெளியான முதல் மற்றும் ஒரே மாத இதழ் 'மாதர் மறுமணம்'. 1936, ஆகஸ்டில் இவ்விதழ் தொடங்கப்பட்டது. இதனைத் தொடங்கியவர் சொ.முருகப்பா. கைம்பெண் மறுமணம் குறித்து இவ்விதழில் வெளியான கட்டுரைகளும், பாடல்களும், செய்திகளும் சமூக விழிப்புணர்வைத் தூண்டுவதாய் அமைந்திருந்தன.
பதிப்பு, வெளியீடு
‘தன வைசிய ஊழியன்’, ‘குமரன்’ போன்ற இதழ்களை நடத்தி வந்தவர் சொ.முருகப்பா. சுயமரியாதை இயக்க ஆதரவாளரான இவர், அதன் சார்பாக ‘சண்டமாருதம்’ என்ற இதழையும் தொடங்கி நடத்தி வந்தார். தமிழ்நாட்டில் கைம்பெண்களின் நிலையைக் கண்டு மனம் வருந்திய இவர், அவர்களை மீட்கும் பொருட்டு காரைக்குடியில் 1934-ல் ‘மாதர் மறுமண இயக்கம்' என்ற அமைப்பைத் தொடங்கினார். அமைப்பின் முன் மாதிரியாக, முருகப்பா, கைம்பெண்களில் ஒருவரான மரகதவல்லியைத் திருமணம் செய்து கொண்டார்.
ஆண்கள் பலரும் விதவைகளை மணக்க முன் வர வேண்டும் என்ற எண்ணத்தில், விதவைப் பெண்களின் அவலம் நீக்குவதற்காகவும், அவர்களின் மறுமணத்தை வலியுறுத்தியும் ‘மாதர் மறுமணம்’ இதழை 1936, ஆகஸ்டில் ஆரம்பித்தார் சொ. முருகப்பா. அவரது மனைவி மு. மரகதவல்லி அவ்விதழின் ஆசிரியராக இருந்தார்.
இதழின் நோக்கம்
‘மாதர் மறுமணம்’ இதழை ஓர் இலட்சிய இதழாக நடத்தினார் மரகதவல்லி. இதழின் நோக்கமாக அவர், “கணவனிழந்து வருந்தும் பெண்ணின் தொகை இந்திய நாட்டில் இரண்டரை கோடிப்பேர் என்று சொன்னால் யாரும் திடுக்கிடாதிருக்க முடியாது. இவர்களின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும். ஆனால் பொது ஜன வழக்கமானது இச்செயலை ஒரு விளையாட்டாக மதித்து வருகிறது. இப்படியே இப்பெண்களை வதைத்து வயிறெரிந்து கொண்டிருப்பது மத-சமூகக் கடமையென்று கருதுவார் தொகையும் குறைவடையவில்லை. இந்த நிலையில் இப்பெண்களின் கூட்டத்திற்கு விடுதலை நல்க வேண்டுமென்பதை அடிப்படையாகக் கொண்டுதான் நமது பத்திரிகை தோன்றியிருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
பால்ய விவாகம் என்பது சகஜமாக இருந்த அக்காலக்கட்டத்தில், அறியாத இளம் வயதிலேயே (5, 6 வயதுகளில்) குழந்தைகள் மணம் செய்விக்கப்பட்டனர். அந்த வயதுகளிலேயே தங்கள் கணவர்களை இழந்து, வாழ்நாள் முடிவது வரை ‘கைம்பெண்’ணாக வாழ்ந்து மறைந்தவர்கள் பலர். அவர்களின் மறுவாழ்வை லட்சியமாகக் கொண்டே ‘மாதர் மறுமணம்’ இதழ் செயல்பட்டது. சொ. முருகப்பா - மு. மரகதவல்லி இருவரும் இணைந்து கைம்பெண் மணத்தை ஆதரித்து ‘மாதர் மறுமண சகாய சங்கம்’ என்ற அமைப்பையும் தோற்றுவித்தனர். இச்சங்கம் கைம்பெண் மணம் செய்ய முன் வருவோருக்கு உதவிகள் செய்ததுடன், கைம்பெண் மணத்தை ஆதரித்துப் பல நூல்களையும் வெளியிட்டது.
இதழின் உள்ளடக்கம்
620 சந்தாதாரர்களுடன் இவ்விதழ் ஆரம்பிக்கப்பட்டது. தனி இதழின் விலை ஒன்றரை அணா. இந்தியா, சிலோன் போன்ற நாடுகளுக்கு ஆண்டு சந்தா - ஒரு ரூபாய். பர்மா, மலாயா, சைகோன், தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகளுக்கு ஆண்டு சந்தா - ஒரு ரூபாய் எட்டு அணா. பிற வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு சந்தா 2 ஷில்லிங், 6 பென்ஸ். கைம்பெண் திருமணத்தை ஆதரிக்கும், ஆசிர்வதிக்கும் காந்தியின் படமே இதழின் முகப்புப் படமாக இடம்பெற்றது. ஒரு கைம் பெண் மண்டியிட்டு காந்தியை வணங்க, காந்தி அவளை ஆசிர்வதிப்பது போன்ற ஓவியம் ஒவ்வொரு இதழின் முகப்பு அட்டையிலும் இடம் பெற்றது.
இதழின் முதல் பக்கத்தில் தலையங்கக் கட்டுரை அமைந்துள்ளது . பெரும்பாலான இதழ்களின் முதல் பக்கத்தில் மாதர் மறுமணம் தொடர்பான கவிதை, பாடல்கள் இடம்பெற்றுள்ளன. கைம்பெண்கள் பற்றிய காந்தியின் கருத்து, கைம்பெண் மறுமணத்தை ஆதரித்து சுத்தானந்த பாரதியாரின் பாடல், பாரதிதாசன் எழுதியிருக்கும் கைம்பெண் ஒருத்தியின் துயரக் கதைப்பாடல் என முதல் இதழிலேயே முக்கியமான கட்டுரைகள், பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கட்டுரை ஒன்றில், “வண்ணப் புடவைகளையும் நகைகளையும் அவள் வாழ்க்கையின் இடையில் வந்த கணவனுக்காக ஒரு பெண் ஏன் துறக்க வேண்டும்?” என்ற கேள்வியை முன் வைக்கிறார் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த நீலாவதி ராமசுப்பிரமணியம்.
இதழ் முழுவதும் ‘மாதர் மறுமணம்’ பற்றிய பல்வேறு செய்திகள் கட்டுரைகளாகவும் கவிதைகளாகவும் கதைகளாகவும் பத்திராதிபர் குறிப்புகளாகவும் நிகழ்ச்சித் துணுக்குகளாகவும் இடம் பெற்றுள்ளன. மறுமணம் இந்துமதக் கொள்கைகளுக்கு எதிரானது அன்று என்று பல்வேறு ஸ்மிருதிகளிலிருந்தும் இதிகாசங்களிலிருந்தும் சான்று காட்டிப் பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன.
இளம் வயதுத் திருமணம் பற்றி, அதனால் ஏற்படும் பாதகமான விளைவுகள் பற்றி சிறுகதைகள் பலவும் மாதர் மறுமணம் இதழில் இடம் பெற்றுள்ளன. கதை, கட்டுரைகளுடன் பாடல்களும் புகைப்படங்களும் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. இளைஞர்களும், மனைவியை இழந்தவர்களும் கைம்பெண்களை மணக்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியது இவ்விதழ்.
பிற செய்திகள்
மாதர் மறுமண சகாய சங்கம், மதுரை புனர் விவாக சமாஜம், அமராவதி புதூரில் மகளிர் இல்லம், இந்து விதவா நிலையம் போன்ற மாதர் மறுமணத்திற்கு உதவும் சங்கங்கள் பற்றிய செய்திகளும், அவை ஆற்றிய பணிகள் பற்றிய செய்திகளும் இவ்விதழில் இடம் பெற்றன. மேலும் பஞ்சாப் விதவா விவாக மாநாடு, ஜலந்தர் விதவா விவாக மாநாடு, முஸ்லிம் மாதர் முற்போக்கு மாநாடு, லாகூர் விதவா விவாக மாநாடு, பர்மா வாழ் மாதவன் கோவில் யாதவ சமூக மாநாடு பற்றிய செய்திகளும் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. பலதார மணத்தடை மசோதா, மாதர் மறுமணத்திற்கு மடாதிபதிகள் ஆதரவு போன்ற செய்திகளும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. ‘விதவை மணமே விடுதலை அளிக்கும்' என்று அச்சிடப்பட்ட மஞ்சள் வண்ணப் பென்சில்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. அது குறித்த விளம்பரமும் இதழில் வெளியாகியுள்ளது. ‘மாதர் மறுமணப் பாடல் திரட்டு ’ மற்றும் பிற புத்தகங்கள் பற்றிய விளம்பரங்கள் இதழில் இடம் பெற்றுள்ளன. மாதர் மறுமண சகாய சங்கத்தினரின் ‘மணமகன் தேவை’ விளம்பரம் முழுப் பக்க அளவில் வெளியாகியுள்ளது.
பங்களிப்பாளர்கள்
சிங்கப்பூர், மலேசியா, பர்மா, இலங்கை, சைகோன், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் மாதர் மறுமணம் இதழுக்கு முகவர்கள் அமைந்து இவ்விதழைத் தமிழர்களிடம் பரவலாகக் கொண்டு சேர்த்துள்ளனர்.
- பாரதிதாசன்
- அம்மு சுவாமிநாதன்
- ப.நீலகண்டன்
- சாமி. சிதம்பரனார்
- லக்ஷ்மி
- கமலாதேவி
- சுத்தானந்த பாரதி
- மாயாண்டி பாரதி
- முத்துலட்சுமி ரெட்டி
- எஸ்.சத்தியமூர்த்தி
- நீலாவதி சுப்பிரமணியம்
- வித்வான் அரு. சோமசுந்தரம் செட்டியார்
- வித்வான் எஸ். உமைதாணுப்பிள்ளை
- வி.ஆர். பரமேசுவரன் பிள்ளை
- உள்ளிட்ட பலர் இவ்விதழில் கட்டுரைகள், கதைகளை எழுதியுள்ளனர். தென்னாப்பிரிக்காவில் வசித்து வந்த டர்பன் திரு. ச. முனிசாமிப் பிள்ளை, திருமதி ச.மு. பார்வதிப்பிள்ளை போன்றோர் பல சீர்த்திருத்தக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இராமன் மேனன், சுப்பராயன் , டாக்டர் சகுந்தலா தேவி , சொ . முருகப்பா, செ . குருசாமி ஐயர் , D.K. கார்வே ஆகியோர் பல்வேறு மாதர் மாநாடுகளிலும் மாதர் மறுமண சகாய சங்க ஆண்டு விழாவிலும் ஆற்றிய சொற்பொழிவுகள் தொகுக்கப்பட்டு இவ்விதழில் கட்டுரைகளாக வெளியாகியுள்ளன
ஆவணம்
மாதர் மறுமணம் இதழ்கள் சில தமிழ் இணைய நூலகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
வரலாற்று இடம்
கைம்பெண்களின் பிரச்சனைகள், அவர்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் சிக்கல்கள், குடும்பங்களில் அவர்களுக்கு எதிராய் நடக்கும் வன்முறைகள், சமூகத்தால் அவர்களுக்கு அளிக்கப்படும் துயரங்கள் பற்றியும் அவை மாற வேண்டியதன் அவசியம் பற்றியும் பல கட்டுரைகள், கதைகள், பாடல்கள் மூலம் பேசிய ஒரே தமிழ் இதழ் மாதர் மறுமணம். அதுவே தமிழ் இதழியல் உலகில் இவ்விதழின் வரலாற்று இடமாகும்.
உசாத்துணை
- மாதர் மறுமணம் இதழ்கள்: தமிழ் இணைய நூலகம்
- மாதர் மறுமணம் - ஓர் அச்சு இயக்கம்: சொல்வனம் கட்டுரை
- விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1: 1907-1947); தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.