இருக்கம் ஆதிமூல முதலியார்

From Tamil Wiki

இருக்கம் ஆதிமூல முதலியார் (பிறப்பு : ஏப்ரல் 4, 1866 (பங்குனி 28) ), 'சிவனடியார்த் திருக்கூட்டம்' என்ற அமைப்பைத் தோற்றுவித்தவர். ‘சைவம்’ என்ற இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராக இருந்தார்.

பிறப்பு, கல்வி

இருக்கம் ஆதிமூல முதலியார், சென்னை ராயப்பேட்டையில், ஏப்ரல் 4, 1866-ல், (பங்குனி 28) கனகசபை முதலியார் - சொக்கம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தெலுங்குப் பாடசாலையில் கல்வி பயின்றார். தந்தையிடமிருந்து தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். ஆசிரியர் வகுப்புக்கு வராத நாளில் தாமே மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் அளவுக்குத் தேர்ந்தவரானார்.

தனி வாழ்க்கை

கல்வியை முடித்தவுடன் பொது நலப் பணிகளில் ஆர்வம் கொண்டார். சென்னை ராணுவத்தில் கணக்குகள் துறைப் பிரிவு அதிகாரியாகப் பணியாற்ற வந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டார். ஓய்வு நேரங்களில் சமூகப் பணிகளிலும் ஆலயத் தொண்டுகளிலும் ஈடுபட்டார். திருவொற்றியூர் ஆலயத்தில் நண்பர்களுடன் இணைந்து உழவாரப் பணிகளை மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

மயிலையில் நடைபெற்ற அறுபத்து மூவர் விழாவில் சான்றோர் பேரவையைக் கூட்டித் தமிழ்ச் சொற்பொழிவுகளை நடத்தி வருவதைத் தனது வழக்கமாக வைத்திருந்தார் இருக்கம் ஆதிமூல முதலியார். தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும் சென்று சைவச் சொற்பொழிகளை நிகழ்த்தினார்.

சிவனடியார்த் திருக்கூட்டம்

இருக்கம் ஆதிமூல முதலியார், தனது நண்பர்களுடன் இணைந்து டிசம்பர் 25, 1898-ல், 'சிவனடியார்த் திருக்கூட்டம்' என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அதன் மூலம்  சைவம் சார்ந்த சொற்பொழிவுகளை, விவாதங்களை நடத்தினார். தலங்கள் தோறும் சென்று தேவாரப் பாடல்கள் பாடுவது, ஆலயச் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது, குடமுழுக்குப் பணிகள் போன்றவற்றை மேற்கொண்டனர். சிறார்களிடையே சைவத்தின் சிறப்பைப் பரப்பும் நோக்கில் ‘பால சைவ சபை’ என்ற அமைப்பும் இவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.

சைவம் மாத இதழ்

சைவம் தழைக்கவும், சைவ சமய நெறிகளை மக்கள் அனைவரும் தெளிவுற உணர்ந்துகொள்ளவும் தமது 'சிவனடியார்த் திருக்கூட்டம்' அமைப்பின் சார்பாக ‘சைவம்’ என்ற இதழை 1914-ல் ஆரம்பித்தார். தானே அதற்கு ஆசிரியராக இருந்து நடத்தினார். சைவத்தின் உயர்வு, சைவ சமயத்தின் உண்மை, அதனைப் பரப்பச் செய்ய வேண்டியது பற்றிய கட்டுரைகளைத் தாங்கி இவ்விதழ் வெளிவந்தது.

காரைக்குடி சொக்கலிங்கையா, சிவபாத சுந்தரம் பிள்ளை, சூளை சோமசுந்தர நாயக்கர், தஞ்சை கே.எஸ். சீநிவாசப் பிள்ளை, ஆ.ஈ.சுந்தரமூர்த்திப் பிள்ளை, த. கைலாசப் பிள்ளை முதலிய சைவச் சான்றோர்கள் இவ்விதழில் கட்டுரைகள் எழுதினர். ஆதிமூல முதலியாரும் அவ்வப்போது கட்டுரைகள் எழுதி வந்தார்.

சமய, இலக்கியப் பணிகள்

திருமுறைகளின் பெருமையை அனைவரும் உணரும் வண்ணம், பன்னிரு திருமுறைகளிலிருந்து அறிய பாடல்களைத் திரட்டி, ‘பன்னிரு திருமுறைத் திரட்டு’ என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டார். கயப்பாக்கம் சதாசிவச் செட்டியார், ஈக்காடு இராசரத்தின முதலியார், காட்டூர் வேங்கடாசல முதலியார் போன்றோர் இவரது சைவப் பணிகளுக்கு உறுதுணையாக இருந்தனர்.

‘சித்தாந்தம்’ உள்ளிட்ட இதழ்களிலும் சைவம் சார்ந்து இவர் பல கட்டுரைகளை எழுதி வந்தார், இருக்கம் ஆதிமூல முதலியார். அவருக்குக் கல்கத்தாவிற்குப் பணிமாற்றம் ஆனது. அதனால் சமய, இலக்கியப் பணிகளுக்குத் தடை ஏற்பட்டது. அதனால் விருப்ப ஓய்வு பெற்று சென்னைக்கு வந்து மீண்டும் சமயப் பணிகளில் ஈடுபட்டார்.

மறைவு

1900-த்தின் ஆரம்ப வருடங்களில் உடல் நலக் குறைவால் இருக்கம் ஆதிமூல முதலியார் காலமானார்.

வரலாற்று இடம்

நூல்கள்

சைவசமயிகளின் கடமை

சிவஞானபோதம் - தமிழ் உரை

பன்னிரு திருமுறைத் திரட்டு

உசாத்துணை