கபிலர் குன்று



கபிலர் குன்று : கபிலர் உயிர்விட்டதாக கருதப்படும் இடத்தில் அமைந்துள்ள குன்று. விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் வட்டத்தில் கபிலர் குன்று உள்ளது. இங்கு கபிலர் உயிர்துறந்தார் என்றும் ஆகவே கபிலக்கல் என்னும் பாறை அவர் நினைவாக உள்ளது என்றும் கல்வெட்டுச்செய்தி ஒன்று உள்ளது.
(பார்க்க கபிலர் )
இடம்
விழுப்புரத்தில் இருந்து ஏறத்தாழ 40 கிமீ தொலைவில் திருக்கோயிலூர் உள்ளது . பேருந்து நிலையத்தில் இருந்து 2 கிமீ தொலைவில் உள்ள வீரட்டானேஸ்வரர் கோயிலின் அருகில் இக்குன்று தென்பெண்ணை ஆற்றின் நடுவில் உள்ளது . இது ஒரு பாறைமேல் அமைந்துள்ள இன்னொரு சிறிய பாறை. அதன்மேல் மிகச்சிறிய கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது..
கோயில் அமைப்பு
செங்கற்களாலும் சுதையாலும் கட்டப்பட்ட இக்கோயில் பதினான்காம் நூற்றாண்டுக்கு முற்பட்டதுஅதற்குள் சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது. துறவுபூண்டு உயிர்விடுபவர்களின் பள்ளிப்படைகளில் சிவலிங்கம் நிறுவப்படும் வழக்கம் உண்டு என்பதனால் இது கபிலரின் பள்ளிப்படை என கருதப்படுகிறது. நெடுங்காலம் இங்கே குன்றுப்பாறைமேல் லிங்கம் மட்டும் இருந்திருக்கலாம் என்றும் கோயில் பிற்காலத்தையது என்றும் ஆய்வாளர் கூறுகிறார்கள்.
கோயிலின் மேலே தெய்வச் சிற்பங்களுடன் இரண்டு ஆண் உருவங்களும், இரண்டு பெண் உருவங்களும் தெரிகின்றன. அப்பெண் உருவங்கள் அங்கவை, சங்கவையாகவும், ஆண் உருவம் கபிலர், மற்றும் மலையமான் என்றும் கருதப்படுகிறது. கபிலர் குன்று தமிழக தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது .
வரலாறு
இன்று விழுப்புரம் மாவட்டத்திலுள்ள் திருக்கோவிலூரை தலைமையாக கொண்ட நாடு மலாடு என்றும் மலையமான் நாடு என்றும் அழைக்கப்பட்டது. அந்நாட்டை மலையமான்கள் ஆட்சி செய்தனர். அவர்களின் மலை முள்ளூர் எனப்பட்டது. மலையமான் திருமுடிக் காரி என்னும் அரசன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். கபிலர் மலையமான் திருமுடிக்காரியை பாடியுள்ளார் (புறநாநூறு 121, 122, 123, 124). முதலாம் ராஜராஜ சோழனின் அன்னை மலையமான் வம்சத்தைச் சேர்ந்தவர். ராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழனின் படைத்தளபதிகளாகவும் மலையமான்கள் இருந்தனர்.
வேள் பாரி மூவேந்தர்களால் கொல்லப்பட்ட பின் அவர் நண்பரான கபிலர் அவனுடைய மகள்களை மன்னர் எவருக்கேனும் மணமுடித்து வைக்க முயன்று இருங்கோவேள் முதலியவர்களை அணுகினார். அவர்கள் மறுத்துவிட்ட நிலையில் பாரிமகளிரை அந்தணரிடம் அளித்துவிட்டு கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்தார் (புறநாநூறு 236 ).
பொயு 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என கருதப்படும் திருக்கோவிலூர் கல்வெட்டு கபிலர் பாரிமகளிரை திருக்கோயிலூர் மலையமானுக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டு நெருப்பில் இறங்கி உயிர்விட்டதாகச் சொல்கிறது. அந்த இடமே பின்னர் கபிலர் கல் என அறியப்படுகிறது என்று ஆய்வாளர் கூறுகிறார்கள்.
அரசாணை எண். 80/த.வ.ப.துறை/நாள்/17.01.85 வழியாக இச்சின்னம் தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்டு கபிலரின் நினைவிடமாக கருதப்படுகிறது
திருக்கோயிலூர் கல்வெட்டு
திருக்கோவிலூர் வீரட்டானேசுவரர் கோயிலின் கருவறையின் வடபுறச்சுவரில் உள்ள முதலாம் இராஜராஜசோழன் காலத்துக் கல்வெட்டு இவ்வாறு சொல்கிறது
செஞ்சொற் கபிலன் மூரிவண் தடக்கைப்
பாரிதன்னடைக்கலப் பெண்ணை மலையர்க்குதவி
மினல்புகும் விசும்பின் வீடுபேறெண்ணி
அந்தரிக்ஷம் செல கனல்புகும் பெண்ணை
அலைபுனல் அழுவத்து கபிலக் கல்லது”