கருவூர்த் தேவர்

From Tamil Wiki
Revision as of 18:22, 24 May 2022 by Manobharathi (talk | contribs)

This page is being created by ka. Siva

கருவூர்த் தேவர் ஒன்பதாம் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ள திருவிசைப்பா பாடிய புலவர்களுள் ஒருவர். இவர்  11-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவார்.

வாழ்க்கை வரலாறு

கருவூர்த் தேவர் கருவூரில் அந்தணர் குலத்தில் பிறந்தவர். பெரும்பான்மையும் சோழநாட்டில் தங்கி, சோழர் கட்டிய கோவில்களில் சிறப்பானவைகளான ஆதித்தேச்சுரம், திரைலோக்கிய சுந்தரம், இராஜராஜேச்சுரம் மற்றும் கங்கை கொண்ட சோழேச்சுரம் ஆகிய நான்கிற்கும் உடனிருந்து திருப்பதிகங்கள் பாடினார். சோழ மன்னர்கள் இராஜராஜன் மற்றும் இராஜேந்திரனிடம் பெரும் சிறப்பு பெற்று வாழ்ந்தார்.

காலம்

ஆதித்தேச்சுரம், திரைலோக்கிய சுந்தரம், இராஜராஜேச்சுரம் மற்றும் கங்கை கொண்ட சோழேச்சுரம் ஆகிய தலங்கள் கட்டப்பட்டபோது உடன் இருந்து, இறைவன் மீது நான்கு பதிகங்களை பாடியுள்ளார்.  இந்த கோவில்களை கட்டிய  காலம் 985 - 1044. எனவே கருவூர்த் தேவர் வாழ்ந்த காலம் பதினோராம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.

பாடல்கள்

கருவூரார், பன்னிரு திருமுறைகளில் திருவிசைப்பா என்னும் ஒன்பதாம் திருமுறையில் ஒரு பகுதியை  இயற்றினார். இவர் கீழ்காணும் பத்து சிவதலங்களிலுள்ள இறைவனைப் போற்றி 10 பதிகங்கள் பாடியுள்ளார். இவற்றில் 103 பாடல்கள் உள்ளன;

  • தில்லை
  • திருக்களந்தை
  • திருக்கீழ்கோட்டூர்
  • திருமுகத்தலை
  • திரைலோக்கிய சுந்தரம்
  • கங்கைகொண்ட சோழேச்சரம்
  • திருப்பூவனம்
  • திருச்சாட்டியக்குடி
  • தஞ்சை இராஜராஜேச்சுரம்
  • திருவிடை மருதூர்

உசாத்துணை

  • உரையாசிரியர் வித்வான் எம்.நாராயண வேலுப்பிள்ளை, பன்னிரு திருமுறைகள், தொகுதி 13, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை
  • மு. அருணாசலம் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு, 11 ஆம் நூற்றாண்டு பதிப்பு 2005, பக்கம் 200
  • கருவூர்த் தேவர் இயற்றிய பதிகங்கள் https://shaivam.org/thirumurai/ninth-thirumurai/266/karuvurthevar-koyil-thiruvisaipa-kanam-viri