எலிசா மால்ட்

From Tamil Wiki
எலிசா மால்ட்

எலிசா மால்ட் (1822-1899) (Eliza Caldwell, Mault )எலிஸா கால்டுவெல். கிறிஸ்தவ இறைப்பணியாளர். கல்வியாளர். பிஷப் ராபர்ட் கால்டுவெல் அவர்க்ளின் துணைவி

பிறப்பு, இளமை

எலிஸா மால்ட் பழைய திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தின் நாகர்கோயில் பகுதியில் லண்டன் மிஷன் சொசைட்டி இறைப்பணியாளராக இருந்த சார்ல்ஸ் மால்ட், மார்த்தா மால்ட் இணையருக்கு நாகர்கோயிலில் 1822 ல் பிறந்தார். ஐந்து வயதில் கல்வி கற்கும்பொருட்டு இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார். லண்டனில் லண்டன்மிஷன் பள்ளியில் கல்விபயின்றபின் 1836ல் திரும்பி வந்தார். நாகர்கோயிலில் தன் தந்தைக்கும் தாய்க்கும் மதப்பணியில் உதவிபுரிந்தார். எலிஸா தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். முறையான கிறிஸ்தவ இறையியல் கல்வியும் பெற்றிருந்தார்.

தனிவாழ்க்கை

எலிஸா மால்ட் 20 மார்ச் 1844-ல் நாகர்கோயில் கஸ்பா ஆலயத்தில் (ஹோம் சர்ச்) நடைபெற்ற திருமணத்தில் 29 வயதான கால்டுவெல் ஐ மணந்தார். மெய்ஞானபுரத்தில் இறைப்பணியாற்றி வந்த ஜான் தாமஸ் இத்திருமணத்தை நடத்திவைத்தார். கால்டுவெல்லுடன் எலிஸா இடையன்குடிக்கு சென்று வாழ்ந்தார்.

கால்டுவெல் எலிசா இணையருக்கு இராபர்ட் சார்ல்ஸ் (1845) வில்லியம் ஆல்பிரட் (1852) அடிங்டன் (1857) ஆர்தர் லூயில் (1862) ஆகிய நான்கு மகன்களும் இசபெல்லா (1847) மார்த்தா லூயிசா(1849) மேரி எமிலி (1854) ஆகிய மூன்று மகள்களும் பிறந்தனர்.

1833ல் கால்டுவெல் குடும்பம் தூத்துக்குடிக்குச் சென்றது. கால்டுவெல் ஆகஸ்ட் 28, 1891 ல் மறைந்தார். எஸ்பிஜி அமைப்பு அவருக்கு ரூ 150 பென்ஷனாக வழங்கப்பட்டது. இந்திய மக்களுக்கு மதச்சேவை ஆற்றியமைக்காக கிளாட்ஸ்டோன் நினைவு நிதி (Royal Bounty on the recommendation of Mr Gladstone) இந்த உதவித்தொகையை வழங்கியது

மறைவு

எலிஸா மால்ட் 1899ல் மறைந்தார். அவருடைய உடல் இடையங்குடியில் கால்டுவெல் கட்டிய தேவாலயத்தின் கல்லறைத்தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது

உசாத்துணை

  • அருட்பணியாளர் ராபர்ட் கால்டுவெல். யோ ஞானசந்திர ஜாண்சன்