under review

அ. வெண்ணிலா

From Tamil Wiki
Revision as of 16:49, 17 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Moved Category Stage markers to bottom)
அ. வெண்ணிலா

அ. வெண்ணிலா (ஆகஸ்ட் 10, 1971) கவிஞர், சிறுகதை மற்றும் நாவலாசிரியர், பதிப்பாளர், சிற்றிதழ் ஆசிரியர். வரலாற்றுத் தொகுப்பு நூல்களையும் உருவாக்கியுள்ளார். வரலாற்றுநூல்களை பதிப்பித்திருக்கிறார். இடதுசாரிப்பார்வையும் பெண்ணிய நோக்கும் கொண்டவர். அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்

பிறப்பு, கல்வி

அ. வெண்ணிலா திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிக்கு அருகில் அம்மையப்பட்டு ஊரில் சி.அம்பலவாணன் - வசந்தா தம்பதியருக்கு ஒரே மகளாக ஆகஸ்ட் 10, 1971 அன்று பிறந்தார்.

ஐந்தாம் வகுப்பு வரை அம்மையப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், 6-ஆம் வகுப்பு முதல் ஆசிரியர் பயிற்சிப் படிப்பு வரை வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார். முதுகலை உளவியல், கணிதம் படித்துள்ளார். "தேவதாசிகளின் கலைத்திறனும் ஆளுமையும்" என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

நல்லாசிரியர் விருது

தனிவாழ்க்கை

அ.வெண்ணிலா குழந்தை இலக்கியப் படைப்பாளியான மு. முருகேஷை ஏப்ரல் 05, 1998-ல் மணந்தார். மு.வெ.கவின்மொழி, மு.வெ.அன்புபாரதி - மு.வெ.நிலாபாரதி என மூன்று குழந்தைகள். அ.வெண்ணிலா தான் படித்த வந்தவாசி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் கணிதப் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தனது கல்விப் பணிக்காக,  தமிழக அரசு வழங்கும் நல்லாசிரியர் விருதை 2017-ஆம் ஆண்டு பெற்றார்.

இலக்கியவாழ்க்கை

அ.வெண்ணிலா தன் முதல் படைப்பை 1997-ல் எழுதினார். தனது இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகள் என தி.ஜானகிராமன், கந்தர்வன், பிரபஞ்சன் ஆகியோரை சொல்கிறார். அ. வெண்ணிலாவின் "கங்காபுரம்" நாவல் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் வாழ்வை அடைப்படையாகக் கொண்டு எழுதபட்டது. தன் தந்தையின் நிழலிலேயே இருக்கும் மகன்  தன் தனித்தன்மையை நிறுவ துடிக்கும் மனப்போராட்டத்தை அடிப்படையாக கொண்டது. பெண்களின் பார்வை வழியாக வரலாற்றைச் சொல்வது.

"மீதம் இருக்கும் சொல்’ எனும் கதைத் தொகுப்பில் 85 ஆண்டுகால தமிழ் சிறுகதை உலகில் பெண்கள் ராமாமிர்தம் அம்மையார் முதல் கவிதா சொர்ணவல்லி வரை பல பெண் எழுத்தாளர்களின் கதைகளை தொகுத்திருக்கிறார். அ. வெண்ணிலாவின்  "சாலாம்புரி" நாவல் திராவிடக் கட்சியின் அடிமட்ட, தொண்டர்களின் மனநிலையையும், அவர்கள் தங்கள் குடும்பத்தினரிடமிருந்து எதிர்கொள்ளும் சிக்கல்களையும் காட்டுகிறது. கதை சொல்லி மற்றும் புத்தகம் பேசுது இதழ்களின் ஆசிரியர் குழுவில் பங்காற்றியுள்ளார்.

வரலாற்று ஆய்வு

’டாக்டர் மு. ராஜேந்திரன் உடன் இணைந்து இவர் ‘வந்தவாசிப் போர் - 250’ என்னும் நூலை எழுதியிருக்கிறார். இந்திய சரித்திரக் களஞ்சியம், ப. சிவனடி, (8 தொகுதிகள்) ஆனந்தரங்கப் பிள்ளை தினப்படி சேதிக் குறிப்பு (12 தொகுதி) ஆகிய நூல்களை தொகுத்திருக்கிறார்.

இலக்கிய இடம்

அ.வெண்ணிலா இடதுசாரிப் பார்வை கொண்டவர். பெண்ணிய நோக்கில் புனைவுகளையும் கட்டுரைகளையும் எழுதுகிறார். வரலாற்றை மார்க்ஸிய பெண்ணிய நோக்கில் அணுகுபவை அவருடைய நாவல்கள். கவிதைகளில் பெண்களின் அகவுலகை வெளிப்படுத்துகிறார்.’உண்மையை உண்மையாக எழுதி இருக்கிறார். தமிழ் சமூகம் வெட்கப்பட வேண்டிய பல இடங்களை நாசூக்காக சுட்டிக்காட்டிருக்கிறார். பெண்ணிய கோசமில்லாமல், முழக்கமில்லாமல், நடைமுறை வாழ்விலிருந்தே அனைத்து விசயங்களும் பார்க்கப்ட்டுள்ளன, விமர்சிக்கப்பட்டுள்ளன’ என்று எழுத்தாளர் இமையம் குறிப்பிடுகிறார்[1]

விருதுகள்

  • கலைஞர் பொற்கிழி விருது புதினம் - 2022
  • சிற்பி அறக்கட்டளை விருது
  • கவிஞர் தேவமகள் அறக்கட்டளை விருது
  • தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வழங்கும் செல்வன் கார்க்கி விருது
  • ஏலாதி அறக்கட்டளை விருது
  • திருப்பூர் மத்திய அரிமா சங்கம் வழங்கிய சக்தி விருது – 2005
  • நெய்வேலி புத்தகக் கண்காட்சி வழங்கிய சிறந்த எழுத்தாளர் விருது - 2005
  • தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007-ஆம் ஆண்டுக்கான சிறந்த  புதுக்கவிதை நூலிற்கான  பரிசினை "கனவைப் போல மரணம்" எனும் நூல் பெற்றது
  • செயந்தன் நினைவு கவிதை விருது - 2010
  • பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் சிறுகதைத் தொகுப்பிற்காக: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க ‘புதுமைப்பித்தன் நினைவு விருது - 2013

கங்காபுரம் நாவலுக்காக பெற்ற விருதுகள்:

  • கோவை கத்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் ‘ரங்கம்மாள் நினைவு விருது
  • சமயபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளியின் ‘படைப்பூக்கத் தமிழ் விருது
  • அவள் விகடனின் ‘இலக்கிய விருது
  • எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயம் வழங்கிய புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது - 2021

திரைப்படம்

சகுந்தலாவின் காதலன் என்ற திரைப்படத்தில் வசனகர்த்தாகவும் துணை இயக்குனராகவும் அ. வெண்ணிலா பணியாற்றியுள்ளார். இரண்டு திரைப்படங்களில் பாடல்களும் எழுதியுள்ளார்.

படைப்புகள்

கவிதை
  • என் மனசை உன் தூரிகை தொட்டு
  • நீரில் அலையும் முகம்
  • ஆதியில் சொற்கள் இருந்தன
  • இசைக்குறிப்புகள் நிறையும் மைதானம்
  • கனவைப் போலொரு மரணம்
  • இரவு வரைந்த ஓவியம்
  • துரோகத்தின் நிழல்
  • எரியத் துவங்கும் கடல்
  • அ.வெண்ணிலா கவிதைகள்(தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு)
கடிதம்
  • கனவிருந்த கூடு
கட்டுரை
  • பெண் எழுதும் காலம்
  • ததும்பி வழியும் மௌனம்
  • கம்பலை முதல் (டாக்டர் மு. ராஜேந்திரன் உடனிணைந்து)
  • தேர்தலின் அரசியல்
  • அறுபடும் யாழின் நரம்புகள்
  • எங்கிருந்து தொடங்குவது
  • மரணம் ஒரு கலை
சிறுகதை
  • பட்டுப்பூச்சிகளை தொலைத்த ஒரு பொழுதில்
  • பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும்
  • இந்திர நீலம்
ஆய்வு
  • தேவரடியார்: கலையே வாழ்வாக
நாவல்
  • கங்காபுரம்
  • சாலாம்புரி
தொகுத்த நூல்கள்
  • வந்தவாசிப் போர் - 250 (டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப., உடனிணைந்து)
  • நிழல் முகம்
  • மீதமிருக்கும் சொற்கள்
  • காலத்தின் திரைச் சீலை டிராட்ஸ்கி மருது
  • கனவும் விடியும்
பதிப்பு
  • இந்திய சரித்திரக் களஞ்சியம், ப. சிவனடி, 8 தொகுதிகள்
  • ஆனந்தரங்கப் பிள்ளை தினப்படி சேதிக் குறிப்பு, 12 தொகுதி (டாக்டர் மு. ராஜேந்திரன் இ.ஆ.ப., உடனிணைந்து)

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page