under review

வ.சுப்பையா பிள்ளை

From Tamil Wiki
வ.சுப்பையா பிள்ளை

வ.சுப்பையா பிள்ளை (செப்டெம்பர் 22, 1897 - ஜனவரி 24, 1983) தென்னிந்திய திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் என்னும் நூல் வெளியீட்டகத்தின் நிறுவனர்களில் ஒருவர். அதன் இரண்டாவது மேலாண்மை இயக்குநர். தமிழறிஞர், தனித்தமிழியக்கச் செயல்பாட்டாளர்.

பிறப்பு, கல்வி

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வயிரமுத்து- சுந்தரத்தம்மையார் இணையருக்கு செப்டெம்பர் 22, 1897-ல் நான்காவது மகனாகப் பிறந்தார் சுப்பையா பிள்ளை. இவர் தமையன் வ.திருவரங்கம் பிள்ளை. பாளையங்கோட்டையில் பயின்று பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றார். நெல்லை இந்துக் கல்லூரியில் சேர்ந்து இரண்டாண்டுகள் கற்று இடைநிலை வகுப்பில் தேர்ச்சியடைந்தார்.

தனிவாழ்க்கை

திருவரங்கம் பிள்ளை மறைமலையடிகள் மகள் நீலாம்பிகையைத் திருமணம் செய்து கொண்டார். சுப்பையா, மங்கையர்க்கரசி அம்மையாரை மணந்தார் அண்ணன் திருவரங்கன் 1944-ஆம் ஆண்டு காலமாகிவிட்டார்.

இலக்கியப் பணி

பதினெண்கீழ்க்கணக்கு, மேல்கணக்கு, சிற்றிலக்கியங்கள் போன்ற பழந்தமிழ் நூல்களைத் தகுந்த அறிஞர்கள் வழி சொற்பொழிவாற்றச் செய்து புத்தகங்களாக்கினார் . இலக்கிய மாநாடுகளில் தமிழ் அறிஞர்கள் ஆற்றும் சொற்பொழிவுகளை முன்னதாகவே பெற்று அச்சிட்டு, நூலாக்கி, அம்மாநாடுகளில் வெளியிட்டார்.

தமிழில் கல்வி பெறுவோருக்காக ‘நகராட்சிமுறை’, ‘சட்ட இயல்’, ‘தீங்கியல் சட்டம்’, ‘குறள் கூறும் சட்ட நெறி’, ‘ஆவணங்களும் பதிவு முறைகளும்’ முதலிய நூல்களை வல்லுநர்களைக் கொண்டு எழுத வைத்துப் பதிப்பித்தார்

சென்னையில் 'மறைமலையடிகள் நூல்நிலையம்', ‘மறைமலையடிகள் கலைமன்றம்' , திருவள்ளுவர் கழகம்' இவற்றை நிறுவினார். தமிழ்ப் புலவர்களுக்குப் பாராட்டு விழாக்களையும், நூல் வெளியீட்டு விழாக்களையும் நடத்தினார். ஆலயங்களில் , தமிழில் வழிபாட்டிற்காகக் குரல்கொடுத்தார்.

1923-ல் சைவசித்தாந்த பதிப்பகத்திற்கென்றே ”செந்தமிழ்ச் செல்வி” இலக்கிய இதழைத் தோற்றுவித்தார்.

திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

சுப்பையா பிள்ளையின் தமையன் திருவரங்கம் பிள்ளை இலங்கையில் தமது வணிகத்துடன் புத்தக விற்பனை நிலையத்தையும் நடத்தி வந்தார். அவர் தாயகம் திரும்பி வந்த பின்னர் நெல்லையிலும், சென்னையிலும் திருசங்கர் புத்தக விற்பனை நிலையங்களைத் திறந்தார். 1920-ல் அந்நிறுவனம் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகமாக உருவானது.சென்னை புத்தக விற்பனை நிலையத்தை சுப்பையா கவனித்துக் கொண்டார். தமையனின் இறப்புக்குப் பின் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைத் தானே நடத்தினார்.சென்னையிலும் பல இடங்களில் கழகப் பதிப்பகம் (1921-23) செயல்பட்டது.

சுப்பையா பிள்ளை 1949-ல் அப்பர் அச்சகம் என கழகத்திற்கெனப் பெரிய அளவிலான அச்சகத்தை நிறுவினார். புத்தகக் கட்டமைப்பிற்காக (binding)நடுவண் அரசின் பரிசைக் கழகம் பெற்றது.

பதிப்புகளில் பக்க எண் தமிழ் எண்கள் தமிழ் எண்களாக இருந்தன.

பதிப்பித்த நூல்கள்
  • மூவர் தேவாரங்கள், திருவிளையாடற் புராணம்( விளக்கவுரையுடன்)
  • சைவ சமயக் குரவர்களின் வரலாறுகள்.
  • மறைமலையடிகளின் நூல்கள்
  • சிறுவர் நூல்கள், இலக்கிய நூல்கள், ஆராய்ச்சி நூல்கள்-மு.வரதராசனின் துணையோடு
  • மு.வரதராசனின் திருக்குறள் தெளிவுரை ( நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகள் கண்டு, புத்தக விற்பனையில் ஓர் உலக சாதனையைப் படைத்தது)
  • இலக்கிய நூல்கள், காப்பியச் சுருக்க நூல்கள், ஆராய்ச்சி நூல்கள், உரைநூல்கள் (ஓளவை சு. துரைசாமிப் பிள்ளையின் துணையோடு)
  • பன்மொழிப் புலவர்’ கா. அப்பாதுரையார் மொழிபெயர்த்த பிற மொழிக் கதை நூல்கள்
  • தேவநேயப்பாவாணரின் ஆய்வு நூல்கள்
  • பன்னிரு திருமுறைகளுள் ஒன்பது திருமுறைகளுக்கு ஒளிநெறிக் கட்டுரை நூல்கள்(சு.செங்கல்வராயன் பிள்ளை)
  • க.அ. இராசாமிப் புலவர் எழுதிய தமிழ்ப் புலவர்களின் வரலாற்று நூல்கள்(33 தொகுதிகள்)
  • புலவர் கா.கோவிந்தன் தொகுத்த புலவர்களின் வரலாறுகள்
  • அ.க.நவநீதகிருஷ்ணனின் திருக்குறள் ஆய்வு நூல்கள்
  • ஐம்பதுக்கும் மேற்பட்ட அறிவியல் நூல்கள் (என்.கே. வேலன் துணையோடு)
  • சங்க இலக்கிய இன்கவித் திரட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பு
  • திருக்குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு
  • பள்ளிப் பாட, துணைப்பாட நூல்கள்.

விருதுகள்

  • பத்மஸ்ரீ விருது (1969)
  • ‘பேரவைச் செம்மல்’ விருது - மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம்
  • 'செந்தமிழ்ச் செம்மல்' விருது -தமிழக அரசு-1979
  • சித்தாந்தக் காவலர் பட்டம்-தூத்துக்குடி சைவ சித்தாந்த சபை

மறைவு

எண்பத்து ஐந்தாவது வயதில் ஜனவரி 24,1983- ல் காலமானார்.

உசாத்துணை


✅Finalised Page