திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி
- XYZ என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: XYZ
திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி (திருத்தில்லை நிரோட்டக யமக அந்தாதி)(பொ.யு. பத்தொன்பதாம் நூற்றாண்டு) தில்லையில் கோவில் கொண்ட நடராசப் பெருமான் மீது பாடப்பட்ட நிரோட்டக யமக அந்தாதி என்னும் அந்தாதியின் வகைமையைச் சேர்ந்த சிற்றிலக்கியம்.
பதிப்பு, வெளியீடு
திருத்தில்லை நிரோட்டக யமக அந்தாதி க. ஆறுமுகச் செட்டியாரால் யாழ்ப்பாண சைவைபிரகாச யந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது. 1892-ம் ஆண்டில் பிரிட்டிஷ் மியூசியத்தில் சேர்க்கப்பட்டதால் அதற்கு முன் எழுதப்பட்டது என்பது புலப்படும். பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திலிருந்த ஒரே பிரதியைஅதற்குரிய தொகையைக் கொடுத்து பெற்றுக்கொண்டதாக 'சித்திரக்கவித்திரட்டு' நூலில் ஞானம் பாலசந்திரன் குறிப்பிடுகிறார்.
ஆசிரியர்
திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதியை இயற்றியவர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை.
நூல் அமைப்பு
நிரோட்டகம் = நிர்+ஓட்டகம் ( உதடுகள்). உதடுகள் ஒட்டாமல், பகரம் மகரம் கலவாது பாடப்படுவது நிரோட்டகப் பாடல். நிரோட்டகம் மிறைக்கவி இனத்தைச் சேர்ந்தது. ஒரு அடியில் பல இடங்களிலோ அல்லது பல அடிகளிலோ, வந்த எழுத்துத் தொடர்களே மீண்டும் வந்து வேறு வேறு பொருளைத் தருவது யமகம். பார்க்க: மடக்கணி.
திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி அந்தாதித் தொடையில் யமக அணியில் அமைந்த நூறு பாடல்களால் ஆனது. கங்கை என்ற சொல்லில் முதல் பாடலில் தொடங்கி இறுதிப் பாடல் 'கங்கையரே' என்ற சொல்லில் முடிந்து மண்டலித்து வந்துள்ளது. தில்லையில் நடனக்கோலத்தில் இருக்கும் சிவபெருமானின் அருளும், சிறப்புகளும் இப்பாடல்களில் கூறப்படுகின்றன. இறுதியில் வரும் அவையடக்கப் பாடலுக்கு மட்டுமே வேலுப்பிள்ளையால் உரை எழுதப்பட்டுள்ளது.
பாடல் நடை
முதல் பாடல்
கங்கை யடையார் சடையர் கழனியிற் கற்கடகங்
கங்கை யடையா யளியலர் சேர்தில்லைக் கங்கணநா
கங்கை யடையாள ரத்தர்தஞ் சீர்த்தி கழறெனத
கங்கை யடையா யளித்தன னண்ணல் கழலரணே. 1
இறுதிப் பாடல்
கட்கஞ்சத் திக்கணி யஞ்சீர் கழறின் கதியினயங்
கட்கஞ்சத் திக்கறை நாதனிற் கண்ணல் கரத்தியந்திங்
கட்கஞ்சத் திக்கநீர் நின்றன ரன்னை களிநயனக்
கட்கஞ்சத் திக்களி நாயகர் தில்லையர் கங்கையரே. 100
உசாத்துணை
- திருத்தில்லை நிரோட்டக யமகவந்தாதி, சென்னை நூலகம்
- யாழ்ப்பாணம் வேலுப்பிள்ளை செய்த திருத் தில்லை நீரோட்டக யமக அந்தாதி, tamilandvedas
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
22-Sep-2023, 09:29:57 IST