under review

எம்.கே.குமார்

From Tamil Wiki
Revision as of 21:26, 26 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added links to Disambiguation page)
XYZ என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: XYZ

To read the article in English: M.K. Kumar. ‎

எம். கே. குமார்
எம்.கே.குமார்

எம்.கே.குமார் (பிறப்பு: செப்டம்பர் 16,1977) சிங்கப்பூரைச் சார்ந்த தமிழ் எழுத்தாளர். கவிதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள் எழுதி வருகிறார். குறும்பட இயக்குனர். 'தி சிராங்கூன் டைம்ஸ்' இதழின் ஆசிரியர் குழுவில் பங்காற்றினார்.

பிறப்பு, கல்வி

எம்.கே.குமார் செப்டம்பர் 16, 1977 அன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகில் தீயத்தூரில் உள்ள ம.காளிமுத்து – கா.அஞ்சம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். பாதிரக்குடி ரோமன் கத்தோலிக்க நடுநிலைப்பள்ளியில் தொடக்கக்கல்வி மற்றும் நடுநிலைக்கல்வியையும், திருப்புனவாசல் ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்தா உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலைக் கல்வியையும் படித்தார். சென்னை தரமணியிலுள்ள வேதியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டயப்படிப்பை முடித்தார். 2010-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் நியூகாஸில் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் சுற்றுப்புற சூழலியலில் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

எம்.கே.குமார் தூத்துக்குடி அல்கலைன் கெமிக்கல் (TAC) நிறுவனத்தில் ஆறாண்டுகள் பணியாற்றிய பின், 2001-ம் ஆண்டில் சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தார். தற்போது சிங்கப்பூரில் பாதுகாப்பு, உடல்நலம், சுற்றுப்புறத் துறையில் மேலாளராகப் பணி புரிந்து வருகிறார். பாதுகாப்புத்துறையில் பயிற்றுவிப்பாளராகவும், தணிக்கையாளராகவும் இருந்து வருகிறார்.

எம்.கே.குமாருக்கு ஆதித்யா, புவிமகாதேவி, தன்வந்திகா என மூன்று பிள்ளைகள்.

இலக்கிய வாழ்க்கை

எம்.கே.குமார் உயர்நிலைப்பள்ளியில் படிக்கையில் கையெழுத்துப் பத்திரிகை ஒன்றை நடத்தியுள்ளார். எம்.கே.குமாரின் முதல் சிறுகதை 'நேவா’ 2003-ம் ஆண்டு 'திண்ணை’ இணைய இதழில் வெளியானது. காலச்சுவடு (இதழ்), வார்த்தை, தி சிராங்கூன் டைம்ஸ், நாம் போன்ற அச்சிதழ்களிலும் வல்லினம் போன்ற இணைய இதழ்களிலும் எம்.கே.குமார் எழுதிய படைப்புகள் வெளியாகி உள்ளன. தமிழோவியம் மின்னிதழில் எம்.கே.குமார் எழுதிய 'மாஜுலா சிங்கப்பூரா’ என்ற சிங்கப்பூர் வரலாறு குறித்த தொடரை எழுதியுள்ளார். .

எம்.கே.குமார் எழுதிய சிறுகதையான 'அலுமினியப்பறவைகள்’ திரு.உதயகண்ணன் தொகுத்த 'உலகத் தமிழ்ச்சிறுகதைகள் – 25’ தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. சாகித்ய அகாடமிக்கென திரு.மாலன் தொகுத்த உலகச் சிறுகதைகளில் இவரது கதை இடம்பெற்றுள்ளது.

அமைப்புப்பணிகள்

எம்.கே.குமார் சிங்கப்பூர் வாசகர் வட்டம் ஏற்பாடு செய்யும் நவீன இலக்கியச் செயல்பாடுகளை வழிநடத்தியும் பங்கெடுத்தும் வருகிறார்.

திரைத்துறை

குறும்படங்களில் ஈடுபாடு கொண்டவர் எம்.கே.குமார். 'பசுமரத்தாணி’ இவரது முதல் குறும்படம்

இலக்கிய இடம், மதிப்பீடு

"சிறுகதை வடிவம் கூடிவருகிறது. செய்நேர்த்தி தெரிகிறது. சமூக அக்கறை புலப்படுகிறது, மொழி கைவசம் இருக்கிறது. விதேச வாழ்க்கையைச் சொல்வதில் அ.முத்துலிங்கம் நல்ல முன்னோடி. அவரின் திசையில் குமார் ஊக்கமுடன் பயணம் செய்யலாம்" என்று எம்.கே.குமார் எழுதிய முதல் சிறுகதைக் தொகுப்பை பற்றி நாஞ்சில் நாடன் குறிப்பிடுகிறார். சு.வேணுகோபால் "பிறந்த கிராமம் உருவாக்கிய உலக நெருக்கம், பெருநகரின் அசைவுகளை ஒருவித துல்லியத்தன்மையுடன் கிரகித்துக்கொள்ளும் மனம் ஆகியவற்றால் எம்.கே.குமார் எழுதும் கதைகள் தனித்துவமும் புதிய திறப்புகளையும் கொண்டவையாக இருக்கின்றன. ஒருவகையில் சிங்கப்பூர் நவீன இலக்கிய உலகிற்குச் சிறப்பான ஒரு பங்களிப்பைச் செய்கின்றன" என்று குறிப்பிடுகிறார். கே.பாலமுருகன் "நிலம், பெருநகர் சிதைவுகள், சுய அழிப்பு ஆகியவற்றை மையமாக கொண்டுள்ள எம்.கே.குமாரின் கவிதைகள் திட்டமிடல்களைக் கடந்து இரைச்சல்களுக்குள்ளிருந்து சமூக அக்கறையுடன் ஒலிக்கின்றன" என்று குறிப்பிடுகிறார்.

விருதுகள்

  • யாவரும் பப்ளிஷர்ஸ் நடத்திய க.நா.சு நினைவு சிறுகதைப் போட்டியின் வெற்றியாளர், 2020
  • சிங்கப்பூர் இலக்கியப் பரிசு (தகுதிச்சுற்று), 2020 (மெரிட், 2018)
  • சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் கண்ணதாசன் விருது, 2017
  • தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயலகத்தமிழ் இலக்கிய விருது, 2017
  • காலச்சுவடு இதழ் நடத்திய 'சுந்தர ராமசாமி நினைவுச் சிறுகதைப் போட்டி’ முதல் பரிசு, 2008
  • சிங்கப்பூர்ப் பாதுகாப்பு மன்றம் (Workplace Safety & Health Council) நடத்திய சிறுகதைப் போட்டி, முதல் பரிசு

நூல்கள்

  • மருதம் (2006, சிறுகதைத் தொகுப்பு)
  • சூரியன் ஒளிந்தணையும் பெண் (2013, கவிதைத் தொகுப்பு)
  • நதிமிசை நகரும் கூழாங்கற்கள் (2015, சிங்கப்பூர்ப் பெண் கவிஞர்களின் கவிதைத் தொகுப்பு, தொகுப்பாசிரியர்)
  • 5:12 P.M. (2017, சிறுகதைத் தொகுப்பு)
  • ஓந்தி (2019, சிறுகதைத் தொகுப்பு)

உசாத்துணை

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:30:42 IST