under review

திருப்பன்னிப்பாகம் காட்டாளைக் கோவில்

From Tamil Wiki
Revision as of 18:12, 17 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Moved Category Stage markers to bottom and added References)
காட்டாளை சிவன் கோவில்

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் பஞ்சாயத்தில் காட்டலை என்னும் இடத்தில் திருபன்னிப்பாகம் மகாதேவர் ஆலயத்துடன் தொடர்புடைய காட்டாளை சிவன் மற்றும் காட்டளை அம்மன் கோவில்கள் உள்ளன. சிவன் கோவிலின் மூலவர் லிங்க வடிவ சிவன் அம்மன் கோயிலில் மூல தெய்வம் காட்டாளை அம்மன்.

இடம்

திருபன்னிப்பாகம் சிவன் கோயியிலில் அருகே ஓடும் கால்வாயை ஒட்டி போகும் சாலையில் மகாதேவர் கோவிலில் இருந்து இடது பக்கம் திரும்பி சுமார் 3 கி.மீ. பயணித்தால் கால்வாயின் இடதுபுறம் காட்டாளை சிவன் கோவிலும் வலது புறம் காட்டாளை அம்மன் கோயிலும் உள்ளன. இரண்டு கோயில்களும் சாலையில் இருந்து விலகி ரப்பர் தோட்டங்களின் நடுவில் உள்ளன. சிவன் கோவிலுக்கு சாலை வசதி உள்ளது, அம்மன் கோவில் செல்ல நடை பாதை மட்டுமே உள்ளது.

தொன்மம்

இக்கோயில்கள் தொடர்பாக வழங்கப்படும் தலபுராணம் மகாபாரதம் தொடர்புடையது.

காட்டாளை அம்மன் கோவில்

மகாபாரத கதை: அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் வேண்டி காட்டாலை தேசத்தில் தவம் செய்கிறான். அப்போது மூகாசுரன் என்னும் அசுரன் அர்ஜுனனின் தவத்தை கலைக்க பன்றியாக மாறி இடையூறு செய்கிறான். சிவனும் பார்வதியும் பன்றி ரூபத்தில் இருக்கும் அசுரனை வதம் செய்ய அங்கு காட்டாளன் மற்றும் காட்டாளத்தி ரூபத்தில் வருகிறார்கள். காட்டாளன் பன்றியின் மீது அம்பு எய்த அதே நேரத்தில் அர்ஜுனனும் தவம் கலைந்து அம்பெய்கிறான். இறந்த பன்றிக்கு இருவரும் தொந்தம் கொண்டாடி சண்டை போடுகிறார்கள். காட்டாளனின் பாதங்களை கவனிக்கும் அர்ஜுனன் ஒன்று பெண் பாதமாகவும் ஒன்று ஆண் பாதமாகவும் இருப்பதை காண்கிறான். வந்தது சிவன் என உணர்ந்து வணாங்கி நின்று பாசுபதாஸ்த்திரத்தை பெற்றுகொண்ட அர்ஜுனன் இருவருக்கும் தனி தனியே கோவில் கட்டுகிறான்.

காட்டாளை அம்மன் கோவிலில் உள்ள பொன்னறுத்தாள் சன்னதி உள்ளது. பொன்னறுத்தாள் பற்றிய கதை வாய்மொழியாக உள்ளது.

பொன்னறுத்தாள் கதை: கோவிலை ஒட்டிய இரும்பறுத்தான் குளத்தில் மாலை நேரத்தில் தோழிகளுடன் குளித்துகொண்டிருந்தாள். தோளிகள் குளித்து வீடு சென்றும் குளித்து கொண்டிருந்த நேரத்தில் இடியுடன் மழை பெய்தது. கோவிலில் சென்று மழைக்கு ஒதுங்கியவளை பூசகர் இரவு கருவறையில் தங்கும்படியும் எக்காரணத்தை வெளியே வரக்கூடாதென்றும் சொல்லி செல்கிறார். அந்நேரத்தில் கோயிலில் புதையல் எடுக்க வந்த கொள்ளையர்கள் தலைபிள்ளை ஒருவரை பலி கொடுக்க தேடுகிறார்கள். இடி சத்ததில் பயந்து வெளிவந்த பொன்னறுத்தாள் அவர்கள் கண்ணில் படுகிறாள். கொள்ளையர்களால் கழுத்து அறுத்து குருதி பலி கொடுக்கப்பட்ட பொன்னறுத்தாள் அங்கு தெய்வமாக உள்ளாள்.

கோயில் அமைப்பு

காட்டாளை அம்மன் கோவில்
மாடன், காட்டாளை அம்மன் கோவில்

கோவில் கிழக்கு பார்த்து உள்ளது. காட்டாளை கோவிலில் இடுக்கும் அம்மனை யட்சியாக வழிபடபடுகிறார்கள்.

கருவறை: அம்மன் சிற்பம் நின்ற கோலம் கொண்ட கல்சிற்பம். இரண்டு கைகளும் வரத முத்திரை மற்றும் அபய முத்திரையும் கட்டுகின்றன. வரத ஹஸ்தம் கட்டும் கையில் சிறு கப்பறை உள்ளது. தலைக்கு மேல் நாகக்குடை உள்ளது. மூலச்சிற்பத்தின் அருகே செம்பு விக்கிரகமும் உள்ளது. இதற்கும் முன் இருந்த சுடுமண் சிற்பம் மாற்றப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கருவறையில் பத்திரகாளி மற்றும் இசக்கியம்மன் சிற்பங்களும் உள்ளன.

கோவிலின் அருகே வெட்டவெளியில் பொன்னறுத்தாள் சன்னதியும் கல்லால் ஆன நாகமும் வடக்கு பார்த்தபடி உள்ளன. இங்கு இசக்கியின் கோரம் இல்லாத இசக்கியம்மன் போன்ற ஓட்டுருவ சிற்பம் உள்ளது. கோவிலின் எதிரே சுடலை மாடன் சிற்பமும் சங்கிலி பூதத்தான் சன்னதியும் உள்ளன. கண்டன் சாஸ்தா மற்றும் இடம்புரி வலம்புரி பிள்ளையார் சிற்பங்களும் வடக்கு பார்த்து உள்ளன. கோவிலின் அருகே உடைந்து போன பழங்கால ஓட்டு சிலைகள் உள்ளன. கோவில்வகை ஊற்றுகுழி கிணறும் கிணற்றின் அருகே சப்த கன்னியர் சன்னதியும் வெட்ட வெளியில் உள்ளது.

காட்டாளை சிவன் கோவில்

கிழக்கு பார்த்த கோயில் சுற்றி மதில் சுவர்களுடன் உள்ளது. கோவில் கருவறையில் சிவலிங்கம் எதிரே சிறிய நந்தியும் உள்ளன. கோவில் உள்பிரகாரத்தில் புதிதாக கட்டப்பட்ட விநாயகர் சன்னதி உள்ளது. வெளிபிராகாரத்தில் தெற்கு பக்கம் சாஸ்தா சன்னதியும் வடக்கில் நாகர் சிற்பங்களும் உள்ளன. மூலவர் இருக்கும் கருவறை மண்டப கட்டுமானம் கருங்கல்லால் ஆனது. அதன் மேல் புதிதாக கட்டப்பட்ட விமானம் உள்ளது.

ஒட்டு சிற்பங்கள், காட்டளை அம்மன் கோயில்

வரலாறு

காட்டளை அம்மன் கோயில் இருக்கும் இக்காட்டு பகுதியில் முன்னர் மருமக்கள் வழி கிருஷ்ண வகை சாதியினர் வாழ்ந்துள்ளனர். இவர்கள் தோட்ட விவசாயிகள். கொடும் விஷ காய்ச்சல் பரவி சிலர் இறந்துள்ளனர். இதனால் ஊர் மக்கள் முட்டைகாடு ஊருக்குள் குடி பெயர்ந்தனர். கிருஷ்ண வகையாருக்கு ஊருடன் தொடர்பு முறிந்து ஊர் பாழடைந்தது. பாழடைந்த ஊர் அம்மனை பெருஞ்சிலம்பு ஊர் வணிக செட்டியார்கள் தெய்வமாக ஏற்றுக் கொண்டனர். நாளடைவில் இது தனிக் குடும்பத்திற்கு சொந்தமான கோவிலாக மாறியது[1].

கன்னியாகுமரி தேவஸ்தானத்தில் இணைக்கப்பட்டுள்ள கோவில் இப்போது ’அருள்மிகு காட்டாலை கண்டன் சாஸ்தா மற்றும் அம்மன் கோவில் சேவா அறக்கட்டளை, பத்மநாபபுரம்’ என்னும் அறகட்டளையின் நிர்வாகத்தில் உள்ளது.

பூஜைகள்

காட்டாளை அம்மன் கோவில்: கோயிலில் தினசரி ஒருநேர பூஜையும் எல்லா தமிழ் மாதத்திலும் முதல் ஞாயிற்று கிழமையில் சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் ரேவதி நட்சத்திரத்திரத்தில் திருவிழா நடைபெறுகிறது. விசு, பங்குனி உத்திரம், ஓணம், திருகார்த்திகை தீபம், சிவராத்திரி ஆகிய நாட்களிலும் வழிபாடு உண்டு.

பொன்னறுத்தாள் சன்னதி

காட்டளை சிவன் கோவில்: தினசரி இரண்டு நேரம் பூஜை நடக்கிறது. எல்லா வாரமும் திங்கள் கிழமைகளில் அன்னதானத்துடன் சிறப்பு பூஜை உண்டு. மார்கழி திருவாதிரை விழா நடைபெறுகிறது. ஆண்டு திருவிழா இல்லை.

இணைப்புகள்

  1. சிவாலய ஓட்டம், அ.கா. பெருமாள், காலச்சுவடு பதிப்பகம், 2021, பி.இ. 14 ப.212.

உசாத்துணை

  • சிவாலய ஓட்டம், முனைவர் அ.கா. பெருமாள், காலச்சுவடு பதிப்பகம், இரண்டாம் பதிப்பு 2021.
  • Private Site

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

குறிப்புகள்


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.