under review

காலம் (இதழ்)

From Tamil Wiki
Revision as of 18:10, 17 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Moved Category Stage markers to bottom and added References)
காலம் முதல் இதழ், 1990

காலம் இதழ் கனடாவில் இருந்து ஜூலை 1990 முதல் வெளிவந்து கொண்டு இருக்கும் காலாண்டு தமிழ் இலக்கிய இதழ். ஆசிரியர் செல்வம். நேர்காணல், சிறுகதை, கட்டுரை, கவிதை என வெளியிட்டு வருகிறது.

இதழ் வரலாறு

காலம் முதல் இதழ் ஜூலை 1990ல் வெளிவந்தது. ஜூன் 2020 வரை, 30 ஆண்டுகளில், 55 இதழ்கள் வெளிவந்துள்ளன. 55வது இதழ் அமேசான் கிண்டில் பதிப்பாக வந்துள்ளது.  ஆரம்பத்தில் வருடத்துக்கு 4 இதழ்கள் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்ட காலம் இதழ், 6வது இதழில் வருடத்துக்கு 6 இதழ்களும் 3 புத்தகங்களும் என்ற நோக்கினை தெரிவித்திருந்தாலும் காலம் இதழால் இந்த நோக்கினை அடையமுடியவில்லை.

காலம் முதல் இதழிலிருந்து 55வது இதழ் (ஜூன் 2020) வரை ஆசிரியராக செல்வம் உள்ளார். குமார் மூர்த்தி, செழியன், ஆனந்தப் பிரசாத், என். கே. மகாலிங்கம், சரவணன், அ. கந்தசாமி, உஷா மதிவாணன் ஆகியோர் பல இதழ்களின் இணை ஆசிரியர்களாகவும், ஆலோசகர்களாகவும் இடம்பெற்றிருக்கின்றனர்.

ஜூன் 2020ல் வெளிவந்துள்ள 55வது இதழ் மணி வேலுப்பிள்ளை தமிழாக்கம் செய்திருக்கும் 10 பத்து சிறந்த பிறமொழிச் சிறுகதைகளைக் கொண்ட சிறப்பிதழாக வந்திருக்கிறது. ஆரம்ப நாட்களில் கனடிய, இந்திய, பிரான்ஸ் முகவரிகளுடன் வெளிவந்த காலத்தில் பின்னர் அரசியல் காரணங்களால் இந்திய, பிரான்ஸ் முகவரிகள் இல்லாமல் வந்தது.

பெரும்பாலான காலம் இதழ்களில், 40 இதழ்களுக்கும் மேல், முக்கியமான ஈழத்து எழுத்தாளர்களின் அட்டைப் படமும் புது எழுத்தாளர் ஒருவரின் படைப்பும் இருக்கும். அதனுடன் பிரபலங்களான சுந்தரராமசாமி, அசோகமித்திரன், முத்துலிங்கம், ஜெயமோகன், எஸ்.ரா, கோபி கிருஷ்ணன், கலாமோகன், பொ.கருணாகரமூர்த்தி, ஷோபாசக்தி போன்றவர்களின் கதைகளும், வெங்கட்சுவாமிநாதன், சி.மோகன், ஏ.ஜே.கனகரட்னா, பொ.வேல்சாமி, யமுனா ராஜேந்திரன் போன்றோர்களது கட்டுரைகளும் இருக்கும். சேரன், வ.ஐ.ச. ஜெயபாலன், செழியன், திருமாவளவன், ஆழியாள், அனார், ஆனந்த பிரசாத், ,தேவ அபிரா, பிரசாத், தர்மினி, சுமதி ரூபன், மு.புஷ்பராஜன் போன்ற ஈழத்துக் கவிஞர்களின் கவிதைகளும் விக்ரமாதித்யன், மனுஷ்யபுத்திரன், லக்ஷ்மி மணிவண்ணன், லீனா மணிமேகலை, யுவன், ஷங்கர் ராமசுப்ரமணியன் போன்ற தமிழகத்து கவிஞர்களின் படைப்புக்களும் வெளிவந்துள்ளன.

காலம் 55வது இதழ்

இலக்கிய அழகியல்

“காலம் ஏற்படுத்திய நிர்ப்பந்தத்தால் அகதிகளாய் கனடாவைத் தஞ்சமடைந்த  தமிழ் இளைஞர்கள் சிலர் கொண்ட  ஆர்வத்தின் வெளிப்பாடு” –  காலம் முதலாவது  இதழில், 1990ல் மேற்கூறியவாறு பதிவு செய்திருக்கிறார் காலம் இதழின் ஆசிரியர் செல்வம் அருளானந்தம்.

காலம் இதழின் சிறப்பம்சமாக தமிழ்ப் படைப்பிலக்கிய ஆளுமைகளின் படைப்புக்கள் பற்றிய உரையாடலை முன்னெடுக்கும் சிறப்பிதழ்களைக் கூறலாம். இருபதுக்கும் மேற்பட்ட சிறப்பிதழ்கள் வெளிவந்திருக்கின்றன. சிறப்பிதழ்களில் இடம்பெற்ற ஆளுமைகளின் பேட்டிகளும், ஆளுமைகள் குறித்த அறிமுகக் கட்டுரைகளும் அந்த ஆளுமைகளைப் பற்றிய ஒரு முழுமையான சித்திரத்தை உருவாக்கும் வகையில் இருக்கும். பல்வேறு இதழ்களை மகாகவி, சுந்தர ராமசாமி, ஜெயமோகன், குமார் மூர்த்தி, ஏஜே கனகரத்னா, கே. கணேஷ், வெங்கட் சாமிநாதன், சிரித்திரன் சுந்தர், பத்மநாப ஐயர், ஏ.சி. தாசீசியஸ், கா. சிவத்தம்பி, அசோகமித்திரன், மல்லிகை ஜீவா, செல்வா கனகநாயகம், நாச்சிமார் கோவில் கண்ணன், தெளிவத்தை ஜோசப், எஸ்.வி.ராஜதுரை, குழந்தை சண்முகலிங்கம், எஸ். பொன்னுத்துரை போன்ற ஆளுமைகளுக்கான சிறப்பிதழ்களாக வெளியிட்டிருக்கிறது. மேலும் நாடகச் சிறப்பிதழ், சிறுகதைச் சிறப்பிதழ், அறிவியல் சிறப்பிதழ் மற்றும் இயல்விருதுச் சிறப்பிதழ்களையும் காலம் வெளியிட்டிருக்கின்றது.

காலம் இதழ்களில் பல முக்கியமான நேர்காணல்கள் வெளிவந்துள்ளன. டொமினிக் ஜீவா, மு.பொன்னம்பலம், அ.முத்துலிங்கம், சியாம் செல்லத்துரை, சோ.பத்மநாதன், வேங்கட சாமிநாதன், அசோகமித்திரன், கே.கணேஷ், அ.ராமசாமி போன்ற படைப்பாளிகள், தாசீசியஸ், ஞானம் லம்பேர்ட், ந.முத்துசாமி, பாலேந்திரா போன்ற நாடகக் கலைஞர்கள், மரிய சேவியர் அடிகளார், கட்டடக் கலைஞர் மயூரநாதன், ஐராவதம் மகாதேவன், தொ.பரமசிவன், எஸ்.என்.நாகராஜன் போன்ற கற்கை நெறியாளர்கள் துறைசார் வல்லுனர்கள், பாலு மகேந்திரா, நாசர், போன்ற திரைப்படக் கலைஞர்கள் ஆகியோரின் நேர்காணல்களை வெளியிட்டுள்ளது. மேலும் கன்னட எழுத்தாளர் யு. ஆர். அனத்தமூர்த்தி, திரைப்பட நெறியாளர் தர்மசிறி பண்டாரநாயக்க போன்றவர்களின் நேர்காணல்களின் மொழிபெயர்ப்புக்களையும் பதிவு செய்துள்ளது.

காலம் 45வது டிசம்பர் 2014 இதழில் சயந்தன் எழுதிய ‘புத்தா’என்ற சிறுகதை பின்பு ‘ஆதிரை’ என்ற நாவலாக விரிவாக்கம் பெற்றது. இச்சிறுகதையினை ஆரம்ப அத்தியாயமாகக் கொண்டு புத்தா கதையின் நாயகனை பிரதான பாத்திரமாகக் கொண்டு சயந்தன் தனது  கதையை  விரிவாக்கம் செய்திருப்பார்.

முப்பது ஆண்டுகளாக காலம் ஈழத் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை நேரிடையாகவும் தனது படைப்புக்களின் வழியாகவும்  பதிவு செய்திருக்கின்றது.

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.