கையறுநிலை
From Tamil Wiki
கையறுநிலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். தலைவனோ தலைவியோ இறந்தபின் அவர்களை சேர்ந்தோர் செயலற்று வருந்தியதைக் கூறும் புறத்துறை.
கையறுநிலை என்னும் துறைக் குறிப்புடன் புறநானூற்றில் 41 பாடல்கள் உள்ளன. கை என்னும் சொல் ஆகுபெயராய் அதன் செயலைக் குறிக்கிறது. தலைவனை இழந்து செயலற்று நிற்பது ‘கையறுநிலை’.
கையறுநிலை பாடல்கள்
வடக்கிருந்தோரைக் கண்டு பாடியவை
- சேரமான் பெருஞ்சேரலாதன் வடக்கிருந்தானைக் கழாத்தலையார் பாடியது[1]
- பாரி துஞ்சியபின் கபிலர் வடக்கிருந்து பாடியது[2]
- பிசிராந்தையார் வடக்கிருந்ததைப் பொத்தியார்[3] கண்ணகனார்[4] பாடியவை.
- கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்ததைக் கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூத நாதனார்[5] பொத்தியார்[6] பாடியவை.
இறந்த அரசனை எண்ணிப் பாடியவை
- பாரியை இழந்த கபிலர்[7]
- சோழன் கரிகாற் பெருவளத்தானை இழந்த கருங்குழல் ஆதனார்[8]
- சோழன் நலங்கிள்ளியை இழந்த ஆலத்தூர் கிழார்[9]
- சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை இழந்த மாறோக்கத்து நப்பசலையார்[10]ஆடுதுறை மாசாத்தனார்[11] ஆகியோர்
- அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியை அரிசில் கிழார்[12]
- அதியமான் நெடுமான் அஞ்சியை இழந்த ஔவையார்[13]
- வேள் எவ்வியை இழந்த வெள்ளெருக்கிலையார்[14]
- வெளிமானை இழந்து பெருஞ்சித்திரனார்[15]
- நம்பி நெடுஞ்செழியனை இழந்து பேரெயின் முறுவலார்[16]
- ஆய் அண்டிரனை இழந்து குட்டுவன் கீரனார்[17] உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் [18] ஆகியோர்
- ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனை இழந்து குடவாயிற் கீரத்தனார்[19] தொடித்தலை விழுத்தண்டினார்[20] ஆகியோர்.
இவை தங்களைப் பேணிய அரசனை இழந்த புலவர்கள் பாடியவை.
மாண்ட வல்லாளனை எண்ணி வருந்தியவை
- மீளியாளன் ஆனிரை தந்து அரிது செல் உலகுக்குச் சென்றனன். பாண! செல்லும் வழியில் கள்ளி நிழல் தரும் பந்தலின் கீழ் நடுகல் ஆயினன். ஆற்றங்கரைக் கம்பத்தில் ஏற்றப்பட்ட விளக்கு காற்றில் அவிந்து நிற்பது போல் அவன் நடுகல் உள்ளது. அதற்கு மயில் பீலி சூட்டிச் செல்லுங்கள். - வடமோதங்கிழார்[21]
- ஆனிரை தந்தவன் கல்லாயினான். அவனது வீட்டு முற்றத்தில் அவன் மனைவி மயிர் கொய்த தலையோடு நீரில்லாத ஆற்றுமணலில் கிடக்கும் அம்பி போலக் காணப்படுகிறாள். - ஆவூர் மூலங்கிழார்[22]
- பாண! ஒருகண் மாக்கிணை முழக்கிக்கொண்டு செல்லும்போது, வழியில், ஆனிரை மீட்பதில் வெள்ளத்தைத் தடுக்கும் கற்சிறை போல விளங்கியவனின் நடுகல் இருக்கும். அதனைத் தொழுது செல்லுங்கள். - மதுரைப் பேராலவாயார்[23]
- ஆநிரை தந்து, ஆநிரை மீட்டுப் பாணர்களைப் பேணிய அவனுக்குப் பெயர் பொறித்துக் கல் நட்டு மயில் பீலி சூட்டி வழிபடுகின்றனர். - உறையூர் இளம்பொன் வாணிகனார்[24]
- கோவலர் வேங்கைப் பூமாலை சூட்ட நடுகல் ஆயினன். - சோணாட்டு முகையலூர்ந் சிறுகருந்தும்பியார்[25]
- நவி (கோடாரி) பாய்ந்துகிடக்கும் மரம் போல வாள் பாய்ந்து கிடப்பவனைப் பாடியது. - கழாத்தலையார்[26]
அடிக்குறிப்பு
- புறநானூற்றுப் பாடல் எண்கள்
இதர இணைப்புகள்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.