under review

காந்தி பிள்ளைத்தமிழ்

From Tamil Wiki
Revision as of 22:41, 23 July 2024 by ASN (talk | contribs) (Page Created: Para Added and Edited: Image Added: Link Created: Proof Checked)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
காந்தி பிள்ளைத்தமிழ்

காந்தி பிள்ளைத் தமிழ், காந்தியைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பாடப்பட்ட பிள்ளைத்தமிழ் நூல். காந்தி பக்தரான ராய. சொக்கலிங்கன் இந்நூலை இயற்ற்றினார்.

வெளியீடு

காந்தி பிள்ளைத் தமிழ் நூல், 1925-ல், காரைக்குடி தனவைசிய ஊழியன் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டு வெளியானது. இப்பிள்ளைத்தமிழ் நூலை இயற்றிப் பதிப்பித்தவர் ராய. சொக்கலிங்கன். இதன் இரண்டாம் மற்றும் மூன்றாம் பதிப்புகள் சென்னை ஊழியன் பிரஸ் மூலம் 1935, 1936-ல் வெளியாகின. தொடர்ந்து சில பதிப்புகள் பிற்காலத்தில் வெளிவந்தன.

நோக்கம்

காந்தி பிள்ளைத் தமிழ் நூல் இயற்றியதன் நோக்கம் குறித்து ராய. சொக்கலிங்கன் நூலின் முகவுரையில், “கவிகளுளெல்லாம் பாடுதற்கு மிக இனிமை தருவது பிள்ளைக்கவி என்பது அனுபவத்திற் கண்ட உண்மை . அதனாலேயே எளியேனை ஆட்கொண்ட எம்பெருமான் காந்தியடிகளார்க்கு ஏழை பிறந்த தமிழ் மொழியில் ஒரு பிரபந்தம் ஆக்க வேண்டுமென்ற நசையெழ, அது பிள்ளைக் கவியாகவே பிறங்க வேண்டுமென்ற முடிவிற்கு வந்தேன் . அன்றியும், சிறியேன் ஒரு புலவனல்லேன்; பிள்ளைத் தன்மையுடையவனேயாதலின், பிள்ளைக்கவி பாடுதலே எற்குப் பொருத்தமுடைத்து. யான் இக்கவி பாட முந்தியமைக்குக் காரணம் காந்தியடிகள் மீது கொண்ட காதலேயன்றிப் பிறிதன்று” என்று குறிப்பிட்டார்,

நூல் அமைப்பு

காந்தி பிள்ளைத் தமிழ் நூலின் தொடக்கத்தில் பாயிரம், அவையடக்கம் ஆகியன இடம்பெற்றன. தொடர்ந்து ஆண்பால் பிள்ளைத்தமிழுக்கான இலக்கணத்தின்படி காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் எனப் பத்துப் பருவங்களும் இடம்பெற்றன. பருவங்களுக்குப் பத்துப் பாடல்கள் வீதம் 100 பாடல்கள் காந்தி பிள்ளைத்தமிழ் நூலில் உள்ளன. காப்புப் பருவத்தில் இறை வாழ்த்து இடம்பெற்றது. ஆனால், தனியொரு இறைவனின் பெயர் நேரடியாகச் சுட்டப்படவில்லை. காந்தியின் குணநலன்களையே காப்பாகக் கொண்டு பாடப்பட்டுள்ளது.  நூலின் இறுதியில் வாழ்த்து இடம்பெற்றது.

உள்ளடக்கம்

காந்தி பிள்ளைத் தமிழ் நூலில் காந்தியின் பிறப்பிடச் சிறப்பு, பெற்றோர், அயல்நாட்டுப் பயணம், விடுதலை வேட்கைச் செயல்பாடுகள், கொள்கைகள், கதர், ராட்டை பற்றிய கருத்துகள், வெள்ளையர் எதிர்ப்பு, போராட்டங்கள் ஆகியன இடம்பெற்றன, காந்தியை வள்ளுவராகவும், கஸ்தூரிபாவை வாசுகியாகவும் ராய. சொக்கலிங்கன் குறிப்பிட்டுள்ளார்.

பாடல் நடை

செங்கீரைப் பருவம்

இன்னா செய்தார் நாண நன்னயம்

இயற்ற வேண்டுமென

இணையில் புலவன் இயம்பிய இன்னுரை

ஏட்டள வோடின்றித்

தென்னாப்பிரிக்கா ஆதிய இடங்களில்

செய்து காட்டியநின்

சீர்த்தி யுரைக்க வல்லவன் இந்தச்

சிறுமதி யுடையேனோ

கொன்னே அந்தோ முன்னற் கரிய

கொடுமையிற் பல்லுயிரைக்

கோறல் புரிந்த டயரும் வருந்தின்

கூர்வல் உதவியெனுஞ்

செந்நா வுடையாய் செய்கையும் வல்லாய்

செங்கோ செங்கீரை

திருமகள் உறையுந் திருநா டுடையாய்

செங்கோ செங்கீரை.

தாலப் பருவம்

ஈசன் எந்தை இணையடியை

இதயம் பதித்து அவனருளால்

இடற விட்ட கரிபணிய

இணைத்த நீற்றின் அறையினிய

மாசில் வீணை மாலைவரு

மதிய மோடு மகிழ்காற்றாய்

வசந்த கால மாய்த்திகழ

மடித்தற் பொருட்டு வரிந்தசிலை

தூசில் உயர்ந்த தெப்பமதாய்த்

துலங்க ஆழிக் கரைகண்ட

தூயோன் நடைய றாத்துறவி

துன்னு சத்தியாக்கிரக

வாச மலிநா வுக்கரையன்

வரவே தாலோ தாலேலோ

மக்கள் உய்ய அவதரித்த மகாத்ம

தாலோ தாலேலோ

சிற்றிற் பருவம்

இந்த்யர் எய்துந் துயர்தன்னை

எடுத்துப் புகல்வோர் எல்லோரும்

ஏதஞ் சாரும் சிறையெய்தி

இன்னல் ஏற்றங் குறைவதையும்

நொந்து துன்பம் அடைவதையும்

நோக்கி அவரோ டொத்துழையா

நுவலற் கரிய கருணைசெறி

நோன்பை மக்கள் எளிதாகச்

சிந்தை கொள்ளத் தந்தனனால்

சீற்றம் இறைபால் என்றனக்குச்

சிறிதும் இல்லை எனமொழிந்த

செம்மை மிக்க சீர்நம்பி

செந்தா மரையாள் திகழ்நாட்டுச்

செல்வா சிற்றில் சிதையேலே

சிறியேன் உள்ளத் தமர்காந்தித்

தேவா சிற்றில் சிதையேலே.

சிறுதேர்ப் பருவம்

ஏராரும் புகழ்க்காந்தி யாங்களுயச் சிறுதேரை

இனிதே உருட்டி அருள்க

இணையிலாக் கஸ்தூரி எழிற்கணவ சிறுதேரை

இனிதே உருட்டி அருள்க

சீராருந் தேவதாஸ் திருத்தந்தாய் சிறுதேரைச்

சீக்கிரம் உருட்டி அருள்க

செல்வமலி பாரதத்தாய் திருமகனே சிறுதேரைச்

சீக்கிரம் உருட்டி அருள்க

நாராரும் நன்மக்கள் நாயகனே சிறுதேரை

நன்றாய் உருட்டி அருள்க

நன்மைக்கு நண்பனே நாடறியச் சிறுதேரை

நன்றாய் உருட்டி அருள்க

பாராரும் பண்புநிறை பாவலனே சிறுதேரைப்

பாங்காய் உருட்டி அருள்க

பழவறத்தை உலகிற்குப் பகரெந்தாய் சிறுதேரைப்

பாங்காய் உருட்டி அருள்க.

மதிப்பீடு

காந்தி பிள்ளைத் தமிழ் இனிய, எளிய நடையில் எழுதப்பட்ட நூல். காந்தியின் பிறப்பு முதலான பல்வேறு நிகழ்ச்சிகள் செறிவான மரபுக் கவிதை வரிகளில் விளக்கப்பட்டுள்ளன. காந்தி உயிரோடு இருக்கும் காலத்திலேயே எழுதப்பட்ட நூல் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழின் பிற்காலப் பிள்ளைத்தமிழ் நூல்களுள் குறிப்பிடத்தக்க ஒன்றாகவும், காந்தி பற்றிய பிள்ளைத்தமிழ் நூல்களில் முதன்மையானதாகவும் காந்தி பிள்ளைத் தமிழ் நூல் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.