under review

இரட்சணிய யாத்திரிகம்

From Tamil Wiki
Revision as of 11:03, 15 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added display-text to hyperlinks)
இரட்சணிய யாத்திரிகம்
இரட்சணிய யாத்திரிகம்

இரட்சணிய யாத்திரிகம் (இரட்சணிய யாத்ரீகம்) தமிழில் எழுதப்பட்ட ஒரு கிறிஸ்தவ காப்பியம். ஆங்கிலத்தில் ஜான் பனியன் 1678-ல் எழுதிய பில்க்ரிம்ஸ் ப்ராக்ரஸ் (Pilgrims Progress) என்னும் கிறிஸ்தவ நூலைத் தழுவி இரட்சணிய யாத்திரிகத்தை மரபான செய்யுள் வடிவில் எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை எழுதினார்.

பதிப்பு

இரட்சணிய யாத்திரிகம் பாளையங்கோட்டையில் இருந்து வெளியான ‘நற்போதகம்’ என்னும் ஆன்மீக மாத இதழில் 13 ஆண்டுகள் தொடராக வெளியானது.

இந்நூலின் முதல் பதிப்பு மே 1894-ல் கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தாரால் வெளியிடப்பட்டது.

ஆசிரியர்

எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை
எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை

எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பு  என்னும் சிற்றூரில் 1827-ல் வேளாளர் குலத்தில் வைணவ குடும்பத்தில் பிறந்தார். முப்பதாவது வயதில் ஞானஸ்நானம் பெற்று ஹென்றி ஆல்ஃபிரடு கிருஷ்ணபிள்ளை எனப் பெயர் ஏற்று கிறிஸ்தவரானார்.

நூல்சுருக்கம்

இரட்சணிய யாத்திரிகம்
இரட்சணிய யாத்திரிகம்

இரட்சணிய யாத்திரிகம் கிருத்துவன் அல்லது ஆன்மீகன் என்னும் ஆன்மத் தேடல் கொண்ட ஒருவனின் மோட்ச பிரயாணத்தை விளக்கிக் கூறும் நூல். ஒரு நபருடைய தனி வரலாறு போல எழுதப்பட்டிருப்பினும் இது ஒரு உருவகக் கதை. ஆன்ம ஈடேற்றத்தை நாடுபவர்களின் உள்ளத்தில் நிகழும் கிறிஸ்தவ சமயம் சொல்லும் பரிசுத்த யாத்திரையின் எல்லா நிகழ்ச்சிகளையும் இந்நூல் விளக்குகிறது[1].  

இரட்சணிய யாத்திரிகத்தின் காப்பியத் தலைவன் கிருத்துவன் அல்லது ஆன்மீகன். அவனது குரு நற்செய்தியாளன், நண்பன் மென்னெஞ்சன். இடுக்க வாயில் என்னுமிடத்தில் வியாக்கியானி என்பவனை ஆன்மீகன் சந்திக்கிறான். அவனது உரைகளால் ஊக்கம் பெறுகிறான். நல்வழி நோக்கிச் செல்லுகின்ற பயணம் எளிதாக இருப்பதில்லை; துன்பங்களும் தொல்லைகளும் வந்து வழி தவறச் செய்கின்றன. எனினும் அசையாத ஊக்கத்தோடு புனிதப் பயணத்தில் முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதை இப்பயணத்தில் காப்பியத் தலைவன் உணர்கிறான். தனது பயணத்தில்  கிறிஸ்தவ குன்றினைக்  கண்டு இறைவனைத் துதித்தபடி முன்னேறும் அவன், இடையில் பயணிகள் இளைப்பாறும் ஒரு சத்திரத்தில் தங்கி ஓய்வெடுக்கிறான். அங்கு விவேகி, யூகி, பக்தி, சிநேகிதி என்னும் நான்கு பெண்மணிகள் அவனை அன்புடன் உபசரிக்கின்றனர். அவர்களுள் பக்தி என்பவள், கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளையும் அதனால் மனிதர் பெறும் மீட்சியின் சிறப்பையும் விளக்கிச் சொல்கிறாள்.

நம்பிக்கை என்னும் இன்னொரு நண்பனின் துணையை பெறுகிறான். பற்பல துன்பங்களைத் தாண்டி இறுதியில் மரண ஆற்றையும் கடந்து, இருவரும் உச்சிதப் பட்டணம் சென்றடைகின்றனர். அங்கு இறைத்தூதர்கள் வரவேற்கின்றனர். இயேசு அரியணையில் வீற்றிருக்கும் கோலத்தைக் கண்டு மகிழ்கின்றனர். எனவேதான் மீட்சிப் பயணம் என்னும் பொருளில் இந்நூல் இரட்சணிய யாத்திரிகம் எனப் பெயர் பெற்றது.

உருவாக்கம்

எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை சாயர்புரத்தில் ஜி.யு. போப் நடத்திவந்த கல்லூரியில் தமிழாசிரியராக வேலை பார்த்தபோது கிறிஸ்தவ மதத்தின் மீது ஈடுபாடு கொண்டார். கிறிஸ்தவ நூல்களை விரும்பிப் படித்த காலத்தில்  ஜான் பனியன்(1628-1688) எழுதிய பில்க்ரிம்ஸ் ப்ராக்ரஸ் என்னும் நூல் மீது மிகுந்த ஆர்வம் கொண்டார். தன் சொந்த வாழ்வையும் அனுபவத்தையும் அந்நூல் சொல்வது போல உணர்ந்த கிருஷ்ண பிள்ளை இரண்டு பாகங்கள் கொண்ட அந்த நூலை அடிப்படையாக வைத்து இரட்சணிய யாத்திரிகம் என்னும் செய்யுளை இயற்றினார்.

மூலநூலை அப்படியே மொழியாக்கம் செய்யாமல் தமிழ்ப் பண்பாட்டின் கூறுகளோடு இணைத்து தமிழ் கிறிஸ்தவ மரபின் முக்கியமான படைப்பாக இதனை எழுதினார்.

இந்த நூல் 3800 செய்யுள்களைக் கொண்டது. அக்காலத்தில் புலவர்களின் திறமைக்கு சான்றாகக் கருதப்பட்ட யமகம், திரிபு, சிலேடை, மடக்கு முதலிய சொல்லணிகள் அமைந்த செய்யுள்கள் இருபத்தொன்று இதில் உள்ளது. ஆதி பருவம், குமார பருவம், நிதான பருவம், ஆரணிய பருவம், இரட்சணிய பருவம் என ஐந்து பருவங்களாகவும் 47 படலங்களாகவும் அமைக்கப்பட்டுள்ளது. பருவம் என்பது பெரும் பிரிவு, படலம் அப்பருவத்தினுள் அமையும் சிறுபிரிவு.

எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை இந்த நூலில், பண்ணோடு பாடப் பெற்ற சைவத் தேவாரப் பாடல்களை அடியொற்றி 144 பாடல்கள் இயற்றியிருக்கிறார். தேவாரப் பண்ணையும், நடையையும் கையாண்டு தேவாரம் என்னும் தலைப்பிலேயே பருவந்தோறும் இடையிடையே அந்த இசைப் பாடல்களை அமைத்துள்ளார்.

கிருஷ்ண பிள்ளை இந்நூலை எழுதிய நோக்கத்தை சொல்லும்போது “மனிதச் சமுதாயத்துக்கு ஆத்தும மீட்பை வழங்குகிற அரிய மருந்து போன்ற படைப்பாகும்” என்கிறார்.

இலக்கிய இடம்

மரபான காப்பிய இலக்கணத்தோடு எழுதப்பட்ட கிறிஸ்தவ இலக்கியம். ஆனால் பிற்கால சிற்றிலக்கியங்களுக்குரிய கடுமையான செய்யுள்நடை கொண்டது. அணிகள், சொல்லாட்சிகள் ஆகியவையும் மிக மரபானவை.

உசாத்துணை


✅Finalised Page


இரட்சணிய யாத்ரீகம் விளக்கம்

1.2 இரட்சணிய யாத்திரிகம் | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY