under review

அருணகிரிநாதர்

From Tamil Wiki
அருணகிரிநாதர் சிலை
அருணகிரிநாதர் தபால்தலை

அருணகிரிநாதர் (பொயு 14 ஆம் நூற்றாண்டு) தமிழ் பக்திக் கவிஞர். முருகன் மீது இயற்றிய திருப்புகழ் என்னும் நூல் புகழ்பெற்றது. இது சந்தப்பாடல்களால் ஆனது. தமிழின் இசைமரபில் முதன்மையான இடமுள்ளவர்.

வாழ்க்கைக் குறிப்பு

அருணகிரிநாதர் 1370-ல் திருவண்ணாமலையில் பிறந்தவர். கைக்கோள செங்குந்தர் மரபில் தோன்றியவர். இவரது தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் கருதப்படுகிறது. அருணகிரிநாதர் புராணத்தில் அருணகிரிநாதரின் ஜன்மதினமாக புரட்டாதி உத்தரமும் தனுர் லக்னமும் செவ்வாய்க்கிழமையும் கூடிய நாள் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனிப் பூரணையையும் அருணகிரிநாதர் விழாவாக இலங்கையில் கொண்டாடி வருகிறார்கள்.

இவர் பிறந்து சில தினங்களிலேயே இவரது தந்தை காலமாகிவிட்டார். இவரை ஆதி என்னும் ஒரு மூத்த சகோதரி வளர்த்தார். அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். சம்ஸ்கிருதத்தையும் கற்றார். உரிய வயதில் திருமணமும் நடந்தது. எந்நேரமும் காமத்தில் இருந்ததால் சொத்தை இழந்ததோடு அல்லாமல் நோயாலும் அவதிப்பட்டார். முருகப் பெருமான், அவரது தொழுநோயைக் குணப்படுத்தியதால் பக்தி பாடல்களை உருவாக்க ஆரம்பித்தார் என அவரின் வரலாற்று நூல்களில் காணப்படுகிறது.

மனையவள் நகைக்க என்று தொடங்கும் திருப்புகழ் பாடலில் அருணகிரிநாதர் அவரை தந்தையும் தாயும் உறவினரும் எள்ளிநகையாடியதைப் பற்றி பாடுகிறார். அதை வைத்து அவருடைய பெற்றோர் நீண்டகாலம் உயிருடன் இருந்தனர், அவர் மணமானவர் என ஊகிக்கலாம் என சில ஆய்வாளர் சொல்வதுண்டு. செய்யூர் வேதபுரீஸ்வரர் ஆலயத்தின் முருகன் அருணகிரியின் விருப்பக்கடவுள்.

15ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவனான பிரபுடதேவ மகாராஜனைப் பற்றி‘அதல சேதனாராட’ என்ற திருப்புகழில் அருணகிரிநாதர் ‘உதய தாம மார்பான பிரபுடதேவமாராஜன் உளமுமாட வாழ்தேவர் பெருமாளே’ என்று பாடுவதைக்கொண்டு அருணகிரிநாதர் காலம் 15ம் நூற்றாண்டிற்குரியது என வகுக்கிறார்கள்..

தொன்மம்

பரத்தையரிடம் சென்று நோயுற்று செல்வத்தை இழந்த அருணகிரி தன் தமக்கை ஆதியிடம் தனக்கு பரத்தையரிடம் செல்ல பணம் கேட்டார் என்றும், அப்போது அவர் ‘நானும் பெண்தானே?” என்று கேட்டதாகவும், அதனால் அதிர்ச்சி அடைந்த அருணகிரி திருவண்ணாமலை மலைமேல் ஏறி குதித்து உயிர்விடப்போனபோது முருகன் நேரில் தோன்றி நாவில் சரவணபவ என்னும் எழுத்தை எழுதியதாகவும், அதனால் ஞானம் பெற்று தன் அன்னையின் பெயரிலிருந்து தொடங்கி ’முத்தைத் தரு பத்தி’ எனும் பாடலுடன் திருப்புகழை பாடியதாகவும் தொன்மக்கதைகள் சொல்கின்றன.

இலக்கியவாழ்க்கை

அருணகிரிநாதர் நூல்

அருணகிரி தமிழ் மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர். இவர் எழுதிய திருப்புகழில் 16,000 இசைப்பாடல்கள் உள்ளன. இவற்றுள் 1,088-க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன. இவரது பாடல்கள் சிக்கலான சந்த நயத்திற்கும், தாள அமைப்பிற்கும் பெயர் பெற்றவை. இவர் எழுதிய திருப்புகழில், இலக்கியமும் பக்தியும் இணக்கமாகக் கலக்கப்பட்டுள்ளது. திருப்புகழ் இடைக்கால தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்புகளில் ஒன்று.

அருணகிரிநாதர் தென்னிந்தியா முழுவதிலும் உள்ள கோயில்களுக்குச் சென்று 16,000 பாடல்களை இயற்றினார்.இராமாயணம் முழுவதையும் அருணகிரி நாதர் தன் திருப்புகழ் பாடல்களில் பல இடங்களில் விரவிப் பாடியிருக்கிறார். கிருஷ்ண லீலைகளும் பாடியிருக்கிறார். சுந்தரர், திருஞானசம்பந்தர் முதலிய பெருமக்கள் பற்றியும் குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார். அருணகிரிநாதர் எழுதிய "திருப்புகழ்" தேவாரத்திற்கு இணையாகவும், "கந்தர் அலங்காரம்" திருவாசகத்திற்கு இணையாகவும், "கந்தர் அனுபூதி" திருமந்திரத்திற்கு இணையாகவும் முருக பக்தர்களால் போற்றப்படுகின்றது. (பார்க்க திருப்புகழ்)

பாடல்கள் பதிப்பு

1871ல் மாவட்ட நீதிபதியாக இருந்த வ.த. சுப்ரமணிய பிள்ளை சிதம்பரத்தில் ஒரு விவாதத்தில் அருணகிரிநாதரின் பாடல்களைக் கேட்டு அதன்மேல் ஆர்வம் கொண்டார். அவை அப்போது வெவ்வேறு ஓலைச்சுவடிகளிலாக சிதறி பெரும்பாலும் மறக்கப்பட்டிருந்தன. சுப்ரமணிய பிள்ளை தென்னிந்தியா முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்து எழுத்தோலை உள்ளிட்ட கையெழுத்துப் பிரதிகளை சேகரித்து அருணகிரிநாதர் பாடல்களை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார். 1894-ல் முதலாவது பதிப்பும், 1901-ல் இரண்டாவது பதிப்பும் அவரது மறைவுக்குப் பிறகு அவரது மகன் வ.சு. செங்கல்வராய பிள்ளையால் புத்தகமாக வெளியிடப்பட்டது.

வாழ்க்கை வரலாறுகள்

  • அருணகிரிநாதர் -வேல் கார்த்திகேயன் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை
  • அருணகிரிநாதர் அருள் வாழ்க்கை:  மே.செ.இராசமாணிக்கம் சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம்
  • அருணகிரிநாதர் வரலாறும் நூலாராய்ச்சியும் வ.சு.செங்கல்வராய பிள்ளை
  • அருணகிரிநாதர் வாழ்க்கை வரலாறு-பிஸ்ரீ. அல்லையன்ஸ் வெளியீடு
  • அருணகிரி உலா- சித்ரா மூர்த்தி

திரைப்படம்

1964-ஆம் ஆண்டில் அருணகிரிநாதர் என்கிற தமிழ் திரைப்படம் வெளியானது. இதில் பின்ணணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

நூல் பட்டியல்

  • கந்தர் அந்தாதி (102 பாடல்கள்)
  • கந்தர் அலங்காரம் (108 பாடல்கள்)
  • கந்தரனுபூதி (52 பாடல்கள்)
  • திருப்புகழ் (1307 பாடல்கள்)
  • திருவகுப்பு (25 பாடல்கள்)
  • சேவல் விருத்தம் (11 பாடல்கள்)
  • மயில் விருத்தம் (11 பாடல்கள்)
  • வேல் விருத்தம் (11 பாடல்கள்)
  • திருவெழுகூற்றிருக்கை

உசாத்துணை


✅Finalised Page