standardised

திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

From Tamil Wiki
Revision as of 18:44, 16 April 2022 by Tamizhkalai (talk | contribs)
இலச்சினை

திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ( 1920) (தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி) தனித்தமிழ் இயக்கத்தை முன்னெடுத்த தமிழ்நூல் வெளியீட்டாளர்கள். திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நுாற்பதிப்புக்கழகம் 1920-ல் திருநெல்வேலியில் வ.திருவரங்கம்பி்ள்ளை, திரவியம்பிள்ளை மற்றும் தமிழ்அறிஞர்களால் தொடங்கப்பட்டது. புத்தக வெளியீட்டுக்கென தென்னிந்தியா முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள ஒரே பொது நிறுவனமாக இது திகழ்ந்து வருகிறது. பெயர் குறிப்பிடுவதுபோல இது மதக்கொள்கை சார்ந்த பதிப்பகம் அல்ல. தமிழாய்வுகள், புனைவுகள், மொழியாக்கங்கள் ஆகியவற்றை ஏராளமாக வெளியிட்டது. சைவம் சாராத கொள்கைகொண்ட தேவநேயப் பாவாணர் போன்றவர்களின் கட்டுரைகளையும் இப்பதிப்பகத்தின் இதழ் செந்தமிழ்ச் செல்வி வெளியிட்டது.

தொடக்கம்

திருவரங்கம் பிள்ளை

-திருசங்கர் கம்பெனி என்ற பெயரில் சென்னையிலும் திருநெல்வேலியிலும் புத்தகக் கடை நடத்திய வ.திருவரங்கம் பிள்ளை தன் தம்பி வ.சுப்பையா பிள்ளையோடும், நண்பர் மா.திரவியம் பிள்ளையோடும் சேர்ந்து சைவமும் தமிழும் வளர்ப்பதற்காக 1920 -ல் தொடங்கிய திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தனித்தமிழ் இயக்கம் என்னும் பண்பாட்டுச் செயல்பாட்டை முன்னெடுத்த மறைமலையடிகள் தொடர்பால் தனித்தமிழியக்க பதிப்பகமாக மாறியது. ச.சச்சிதானந்தம் பிள்ளை, கா.சுப்ரமணிய பிள்ளை போன்ற சைவத் தமிழ் அறிஞர்கள் இதன் ஆலோசகர்களாக இருந்தனர்.

தொழில்முறைப் பதிப்பகமாகத் தொடங்கப்பட்டது திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். ரூ.10 மதிப்புக் கொண்ட 5,000- பங்குகளால் ரூ.50,000- திரட்டித் தொழில் முதலீடாக்கி லிமிடெட் கம்பெனி நிறுவனமாகத் தன்னைப் பதிவுசெய்துகொண்டு திருநெல்வேலியில் தொடங்கிய இந்நிறுவனத்திற்கு ஏற்கனவே வ.திருவரங்கம் பிள்ளை சென்னையில் நடத்திவந்த திருசங்கர் கம்பெனி முதல் கிளைநிலையம் ஆனது. வ. திருவரங்கம் பிள்ளைக்குப் பின் வ.சுப்பையா பிள்ளை இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்தார். அதன்பின் இரா. முத்துக்குமாரசுவாமி மேலாண் இயக்குநர் ஆனார். தென்னிந்தியா முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள ஒரே பொது நிறுவனமாக இது திகழ்ந்து வருகிறது. தற்போது அதன் மேலாண்மை இயக்குனர் சுப்பையா

வ.சுப்பையா பிள்ளை

பணிகள்

திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நூல்பதிப்புகள், கருத்தரங்குகள், அகராதிப் பணி என மூன்று தளங்களில் செயல்பட்டது.

நூல்பதிப்பு

திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் மறைமலையடிகள் முதல் தேவநேயப் பாவாணர் வரை தனித்தமிழ் நோக்கு கொண்டிருந்த தமிழறிஞர்களின் நூல்களை வெளியிட்டது. கா.சுப்ரமணிய பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார் போன்ற அறிஞர்கள் இதன் பதிப்பு ஆலோசனைக்குழுவில் இருந்தார்கள். வ.சுப்பையா பிள்ளை ஒரு தமிழறிஞராகவும், தனித்தமிழியக்க செயல்பாட்டாளராகவும் இருந்தார். சைவ சாத்திரங்களான மாபாடியம், சுபக்கம், பரபக்கம், சிவப்பிரகாசம் போன்ற நுால்களை கழகப்புலவர் சித்தாந்த பண்டிதர் ப. இராமநாதபிள்ளை உரையுடன் வெளியிட்டது. சங்ககால நூல்களுக்கு அவ்வை .து. துரைசாமி, ந.மு.வேங்கடசாமி நாட்டார் போன்ற தமிழ்அறிஞர்களை வைத்து உரை எழுதி வெளியிட்டது.திருமந்திரம், திருவாசகம் போன்றவைகள் கழகப்புலவர் இராமநாதபிள்ளையின் உரையுடன் வெளிவந்தன.கா. அப்பாதுரை, து. இராமசாமி புலவர், புலவர் அரசு ஆகியவர்களின் சிறுவர் இலக்கியக்கதைகள் வெளியிடப்பட்டன.தேவநேயப் பாவாணர் எழுதிய ‘இயற்றமிழ் இலக்கணம்’, ‘சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்’, ‘உயர்தரக் கட்டுரை இலக்கணம்’, ‘பழந்தமிழ் ஆட்சி’, ‘முதல் தாய்மொழி’, ‘தமிழ்நாட்டு விளையாட்டுகள்’, ‘வேர்ச்சொல் கட்டுரைகள்’ ஆகிய நூல்களைக் திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டது.

மாநாடுகள்

திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தொடர்ச்சியாக தமிழாய்வு மற்றும் தமிழ்வரலாற்று மாநாடுகள் நடத்தி அவற்றில் முன்வைக்கப்படும் உரைகளை நூலாக்கி வந்தது . 1943-ல் திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நடத்திய முதலாம் தமிழ் உணர்ச்சி மாநாட்டில் தேவநேயப் பாவாணர் கலந்துகொண்டு பேசினார். சைவ மாநாடுகள் நடத்தி அவற்றின் கட்டுரைகளையும் திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நூலாக்கியது

தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் கட்டிடம்
அகராதிகள்

திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ’கழகத் தமிழ்க் கையகராதி’யை 1940-ல் வெளிக்கொண்டு வந்தது. இது சொற்களுக்கு தனித்தமிழில் பொருள்கூறுவது. சிறிய கழகத் தமிழ் அகராதி, பெரிய கழகத் தமிழ் அகராதி, ஆட்சித் துறைத் தமிழ் (அகராதி), சட்டத் தமிழ் (அகராதி), தொகை அகராதி, கழக ஆங்கில தமிழ்க் கையகராதி, கழகச் சிற்றகராதி (ஆங்கிலம்-தமிழ்), கழகப் பழமொழி அகரவரிசை, சிலேடை அகரவரிசை, மேற்கோள் விளக்கக் கதை அகரவரிசை என்று பல அகராதிகள் கொண்டுவரப்பட்டன.

துணை அமைப்புகள்

திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் மூன்று துணை அமைப்புகளை நடத்தியது

திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்தச் சங்கம்.

திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்தச் சங்கம் சைவநெறி, சைவசித்தாந்தம் ஆகியவற்றை பரப்பும் நோக்கத்துடன் திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் சார்புள்ள அமைப்பாக 1919-ல் உருவானது. திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் கம்பெனியாக பதிவுசெய்வதற்கு ஓர் ஆண்டு முன்னரே இந்த அமைப்பு உருவாகியது. சைவ சமய மாநாடுகள், கருத்தரங்குகளை நடத்தியது. ஈ.வெ.ராமசாமிப் பெரியார் தனித்தமிழியக்க ஆதரவாளர் என்றாலும் அவர் சைவத்தை எதிர்த்தபோது 1919-ல் சைவப்பெரியார் மாநாட்டை இந்த அமைப்பு நடத்தியது.

மறைமலை அடிகள் நூலகம்

1958-ல் கழகத்தால் தொடங்கப்பட்ட மறைமலையடிகள் நூல் நிலையம் 1900-க்கு முந்தைய நூல்பதிப்புகள், அரிய கடிதங்கள், ஆண்டறிக்கைகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான நூல்களோடு அது ஓர் ஆவணக் காப்பகமாக செயல்பட்டது

செந்தமிழ்ச்செல்வி

திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1924- முதல் ‘செந்தமிழ்ச் செல்வி’ என்னும் இலக்கிய மாத இதழை நடத்தியது.

உசாத்துணை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.