under review

திருவாரூர் நான்மணிமாலை

From Tamil Wiki
Revision as of 11:14, 8 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text:  )

திருவாரூர் நான்மணிமாலை (பொ.யு. 17-ம் நூற்றாண்டு) குமரகுருபரர் இயற்றிய நான்மணிமாலை என்னும் சிற்றிலக்கியம். திருவாரூர்த் தலத்தையும் தியாகேசரையும் போற்றிப் பாடும் நூல்.

ஆசிரியர்

திருவாரூர் நான்மணிமாலையை இயற்றியவர் குமரகுருபரர். குமரகுருபரர் மதுரையில் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழை அரங்கேற்றியபின் தருமபுரம் செல்லும் வழியில் திருவாரூருக்கு வந்து தியாகேசரை வழிபட்டு, திருவாரூர் நான்மணிமாலையைப் பாடினார்.

நூல் அமைப்பு

நான்மணிமாலையின் இலக்கணப்படி வெண்பா, கலித்துறை, விருத்தம், ஆசிரியப்பா, என்னும் நான்கு பாவகைககளால் மாறி மாறி மாலையைப்போல் கோர்க்கப்பட்ட, அந்தாதித் தொடையில் நாற்பது பாடல்களைக் கொண்டது திருவாரூர் நான்மணிமாலை.

திருவாரூர் நான்மணி மாலையில் திருவாரூரின் சிறப்புகள் பேசப்படுகிறன. அகத்துறைச் செய்யுட்கள் சில தலைவி சொல்வதாகவும் தோழி சொல்வதாகவும் உள்ளன. அகழி, கொடிகள், சோலை, மாடங்கள் என ஊரின் வர்ணனைக்குப்பின் தியாகேசர் ஆலயமும், அங்கு இருக்கும் சன்னிதிகளும், மண்டபங்களும், புராணச் செய்திகளும், தியாகேசரின் அருளும் கூறப்படுகின்றன.

புராண, வரலாற்றுச் செய்திகள்
  • குமரகுருபரர் திருவாரூர் தேரை 'நீள் கொடிஞ்சித் தேர்' என்று சிறப்பிக்கிறார். தியாகேசர் இந்தத் திருத் தேரில் எழுந்தருளும் போது அடிக்கு ஓராயிரம் பொன் இறைக்கப்பட்டது.
  • சோலைகளில் குரங்குகள் பலாப்பழத்தைப் பிளந்து சுளைகளை எடுப்பது திருமால் இரணியனின் குடலைக் கிழித்தது போல் இருந்தது
  • தியாகேசருக்கு 'இருந்தாடழகர்' என்ற பெயரும் வழங்குகிறது
  • முசுகுந்த சக்ரவர்த்திக்கு இந்திரன் தியாகேசரை அளித்தான். முசுகுந்தனுக்கு அருள் செய்வதற்காக தியாகேசர் பூவுலகுக்கு வந்தார். தியாகேசர் பூவுலகுக்கு வந்த இடமே திருவாரூர்.
  • சிவன் மன்மதனை எரித்தவர், மார்க்கண்டேயனைக் காக்க காலனை காலால் உதைத்தவர்
  • திருமால் வெள்ளை ரிஷபமாக வாகனமாகி ஈசனைத் தாங்கினார், அதற்காக சிவன் பிரளய காலத்தில் திருமாலின் எலும்புக்கூடாகிய கங்காளத்தைச் சுமந்தார்
  • அம்பலவாணனின் சபாமண்டபம் என்றும் அழைக்கப்படும் தேவாசிரியன் மண்டபம் என்ற ஆயிரங்கால் மண்டபத்தின் சிறப்பு கூறப்படுகிறது. பார்க்க: தேவாசிரிய மண்டப ஓவியங்கள்
  • திருவாரூர் தியாகேசரின் எளிவந்த தன்மையும், எளிய வேடனான கண்ணப்ப நாயனார் உமிழ்ந்த நீரையும் ஊனையும் எற்றுக்கொண்டது, பார்த்தன் வில்லால் அடித்ததைப் பொறுத்தது, வந்திக் கிழவிக்காக பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்டது, சுந்தரமூர்த்தி நாயனாருக்காக பரவைநாச்சியாரிடம் தூது சென்றது என அன்பர்க்கு எளியனான தன்மையும் கூறப்படுகின்றன.

பாடல் நடை

நேரிசை வெண்பா


தேங்குபுக ழாரூர்த் தியாகர்க்கெண் டிக்குமொளி
வீங்கு பகற்போது வெண்படமாம் - தூங்கிருள்சூழ்
கங்குற் பொழுது கரும்படமாஞ் செம்படமாம்
    பொங்குற்ற புன்மாலைப் போது.(6)

கட்டளைக் கலித்துறை

போதொன் றியதண் பொழிற்கம லேசர்பொன் மார்பிலெந்தாய்
சூதொன்று கொங்கைச் சுவடொன்ப ராற்றெல் களிற்றுரிவை
மீதொன் றுவகண்டு வெங்கோப மாமுகன் வெண்மருப்பால்
ஈதொன் றடுகளி றென்றெதிர் பாய்ந்த விணைச்சுவடே (7)

அறுசீர்க் கழிநெடிலடி யாசிரியவிருத்தம்


இணங்குகம லாலயமா லிதயத்திற் பொலிந்ததியா கேச ரம்பொற்
கணங்குழைமண் மகலளிதய கமலத்தும் பொலிதலினக் குமல மான
மணங்கமழ்பங் கயத்தடஞ்சூழ் கமலைகம லாலயப்பேர் வாய்த்த தான்மற்
றணங்கனையா ரிதயமுந்தம் மருட்கொழுந ரிதயமுமொன் றாகுந் தானே.

நேரிசை ஆசிரியப்பா


தானமால் களிறு மாநிதிக் குவையும்
ஏனைய பிறவு மீகுந ரீக
நலம்பா டின்றி நாண்டுறந் தொரீஇ
இலம்பா டலைப்ப வேற்குந ரேற்க
புரவலர் புரத்தலு மிரவல ரிரத்தலும்
இருவே றியற்கையு மிவ்வுல குடைத்தே அதா அன்று
ஒருகா லத்தி லுருவமற் றொன்றே
இடப்பான் முப்பத் திரண்டறம் வளர்ப்ப
வலப்பா லிரத்தன் மாநிலத் தின்றே
விண்டொட நிவந்த வியன்றுகிற் கொடிகள்
மண்டலம் போழ்ந்து மதியக டுடைப்ப
வாணிலா வமுதம் வழங்கியக் கொடிகள்
வேனிலிற் பயின்ற வெப்பம தாற்றுபு
கொடியா ரெத்துணைக் கொடுமை செய்யினும்
மதியார் செய்திடு முதவியை யுணர்த்தும்
பன்பணி மாடப் பொன்மதிற் கமலைக்
கடிநகர் வைப்பினிற் கண்டேம்
வடிவ மற்றிது வாழிய பெரிதே.

உசாத்துணை


✅Finalised Page