under review

நகரத்தார் மலர் (இதழ்)

From Tamil Wiki
Revision as of 23:22, 5 May 2024 by ASN (talk | contribs) (Page Created: Para Added: Image Added: Link Created: Proof Checked.)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
நகரத்தார் மலர் இலச்சினை

நகரத்தார் மலர் (1976) நகரத்தார் சமூகம் சார்பில் வெளிவந்த இதழ். இதன் ஆசிரியர்: நா. இளங்கோவன்.

பிரசுரம், வெளியீடு

நகர மலர்

கோனாபட்டைச் சேர்ந்த நா. இளங்கோவன் ஆசிரியராக இருந்து மதுரையிலிருந்து வெளியிட்ட இதழ் நகரத்தார் மலர். செப்டம்பர் 1976-ல், 'நகர மலர்' என்ற பெயரில் வெளியான இவ்விதழ், 1980 முதல் நகரத்தார் மலர் என்ற பெயரில் வெளிவந்தது.

'நகர மலர்' என்ற பெயரில் வெளியானபோது, 'நகர' என்ற சொல்லுக்கும் 'மலர்' என்ற சொல்லுக்கும் இடையே ஒரு குத்துவிளக்கும் அதனடியில் ஓர் ஒட்டுச் சுவடியும் உள்ளது போன்ற படம் இடம்பெற்றது. இதழின் முகப்புப் பக்கத்தில்

”சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வந்தான்

பெற்றத்தால் பெற்ற பயன்”

-என்ற குறள் இடம் பெற்றது. இதழின் ஆண்டினைக் குறிக்க ‘மாலை’ என்பதனையும், மாதத்தைக் குறிக்க ’மலர்’ என்பதையும் கையாண்டது.

நகரத்தார் மலர்

நகர மலர் இதழ், ’நகரத்தார் மலர்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளியானபோது, பெயரின் இடப்புறம், தாமரை மலரில் நிற்கும் லட்சுமி படமும், அதன்கீழே சிறிய எழுத்துக்களில் ’நகரத்தார் மலர்' என்ற பெயரும் இடம்பெற்றது. ஆண்டினைக் குறிக்க ‘கோயில்’ என்பதையும், மாதத்தைக் குறிக்க ’புள்ளி’ என்பதையும் கரத்தார் மலர் பின்பற்றியது. இதழின் முகப்புப் பக்கத்தில்

”விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா

ஆக்கம் பலவும் தரும்”

-என்ற குறள் இடம் பெற்றது. ஆனால் 1983-லிருந்து அக்குறள் இடம் பெறவில்லை.

இதழின் ஆரம்பகாலத்தில் தனிப்பிரதி இதழின் விலை குறிப்பிடப்படவில்லை. ஆண்டுச் சந்தா ரூபாய் 10/- ஆக இருந்தது. 1983-ல் ஆண்டுச் சந்தா ரூ.12/- ஆக உயர்ந்தது. டெபாசிட் சந்தா ரூபாய் 150 ஆயிற்று. 1991-ல் டெபாசிட் சந்தா என்பதற்குப் பதிலாக ஆயுள் சந்தா என மாற்றப்பட்டு, ஆயுள் சந்தா ரூ 250 ஆனது. பின்னர் 1997 முதல் ஆண்டு சந்தா ரூபாய் 50/- ஆகவும் ஆயுள் சந்தா ரூபாய் 600/- ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது இதழின் ஆயுள் சந்தாவாக ரூபாய் 200/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுச் சந்தா: 550/- ரூபாய்.

உள்ளடக்கம்

நகரத்தார் சமூகம் தொடர்பான அனைத்துச் செய்திகளையும் நகரத்தார் மலர் ஆவணப்படுத்தியது. நகரத்தார் மகளிர் மாநாட்டை ஒருங்கிணைத்து நடத்தியது. பர்மா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நகரத்தார் வாழ்ந்த ஊர்களுக்கு மக்களை அழைத்துச் செல்லும் சுற்றுலாக்களுக்கு ஏற்பாடு செய்தது. நகரத்தார் சார்பாக பல விழாக்களை, கருத்தரங்குகளை, கூட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தியது.

மதிப்பீடு

நகரத்தார் இயல் தொடர்பாக ஆய்வு செய்யும் ஆய்வாளர்களுக்குப் பயன்படும் வகையில், 40 ஆண்டுகளுக்கும் மேல் வெளிவந்த இதழாக நகரத்தார் மலர் இதழ் அறியப்படுகிறது.

உசாத்துணை

  • நகரத்தார் மலர் ஃபேஸ்புக் பக்கம்
  • நகரத்தார் கலைக்களஞ்சியம், மெய்யப்பன் தமிழாய்வகம் வெளியீடு, பதிப்பாசிரியர்: ச. மெய்யப்பன்; இணை ஆசிரியர்கள்: கரு. முத்தய்யா, சபா. அருணாசலம். பதிப்பு: 2002.

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.