விழிகட்பேதை பெருங்கண்ணனார்

From Tamil Wiki

விழிகட்பேதை பெருங்கண்ணனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று சங்கத் தொகை நூலான நற்றிணையில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

விழிகட்பேதை பெருங்கண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடலில் இடம்பெற்ற ”விழிகட்பேதை” என்னும் வார்த்தையைக் கொண்டு இவருக்கு இப்பெயரை அறிஞர்கள் இட்டனர்.

இலக்கிய வாழ்க்கை

விழிகட்பேதை பெருங்கண்ணனார் பாடிய பாடல் நற்றிணையில் 242-வது பாடலாக உள்ளது. போர் முடிந்து திரும்பும் தலைவன் காத்திருக்கும் தலைவியை நோக்கி விரைந்து செல்ல தேர்ப்பாகனிடம் சொல்லியது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • கார்காலம்: ஈரம் மிக்க ”பிடவம்” இலை இல்லாத புதர்ச்செடியில் அரும்பு விட்டிருக்கிறது. புதரில் படர்ந்திருக்கும் ”தளவம்” பூக்கொடி மலர்ந்திருக்கிறது. ”கொன்றை” பொன் போல் மலர்ந்திருக்கிறது. மணி போன்ற நீல நிறத்தில் ”காயாம்பூ” சிறிய கிளைகளில் கொத்தாக மலர்ந்திருக்கிறது.
  • கார்காலம்: களர் நிலத்தில் செல்லும் மான் கூட்டத்தில் பேதைப் பெண்மான் ஒன்று கண்ணை விழித்துப் பார்த்துக்கொண்டு இனத்தை விட்டு ஓட, அதனை இரலை ஆண்மான் காம உணர்வோடு தேடிக்கொண்டிருக்கிறது.

பாடல் நடை

நற்றிணை 242

இலை இல பிடவம் ஈர் மலர் அரும்ப,
புதல் இவர் தளவம் பூங் கொடி அவிழ,
பொன் எனக் கொன்றை மலர, மணி எனப்
பல் மலர் காயாங் குறுஞ் சினை கஞல,
கார் தொடங்கின்றே காலை; வல் விரைந்து
செல்க பாக! நின் தேரே: உவக்காண்
கழிப் பெயர் களரில் போகிய மட மான்
விழிக் கட் பேதையொடு இனன் இரிந்து ஓட,
காமர் நெஞ்சமொடு அகலா,
தேடூஉ நின்ற இரலை ஏறே.

உசாத்துணை