under review

எண்களின் சிறப்பு: எண் 4

From Tamil Wiki
Revision as of 23:34, 19 March 2024 by ASN (talk | contribs) (Page Created: Para Added: Link Created: Proof Checked.)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

எண்ணிக்கையைக் குறிப்பதற்குப் எண்கள் பயன்படுகின்றன. எண்கள் ஒன்று தொடங்கி கோடிக்கும் மேல் பயன்பட்டில் உள்ளன. இவற்றில் எண் 4 ஆன்மிகத்திலும் இலக்கியத்திலும் சிறப்பிக்கப்பட்ட எண்.

எண் 4-ன் சிறப்புகள்

ஒன்றிலிருந்து தொடங்கும் எண் வரிசையில் நான்காவதாக வருவது 4. ’சதுர்’ என்று ஆன்மிகத்திலும் ’சதுரம்’ என்று இலக்கியத்திலும் பயின்று வரும். எண் 4அ-க் குறிக்கும் வகையில் நான்கு, நால், நாலு என்று இலக்கியத்தில் சொற்கள் பயின்று வந்துள்ளன.

ஆன்மிக - இலக்கியச் சிறப்புகள்

  • நால்வகை நிலங்கள் - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்
  • நால்வகை உண்ணும் முறைகள் - உண்டல், தின்னல், நக்கல், பருகல்
  • நால்வகை உரைகள் - கருத்துரை, பதவுரை, பொழிப்புரை, அகலவுரை
  • நால்வகைப் படைகள் - தேர்ப்படை, குதிரைப்படை, யானைப்படை, காலாட்படை
  • நால்வகைச் சொற்கள் - பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்
  • நால்வகைப் பாக்கள் - வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா
  • நால்வகைப் பொருள்கள் - அறம், பொருள், இன்பம், வீடு
  • பெண்டிரின் நால்வகைக் குணங்கள் - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
  • நால்வகை அரண்‌கள் - மலை அரண்‌, காட்டு அரண்‌, மதில்‌ அரண்‌, நீர்‌ அரண்‌
  • நால்வகைக் கரணங்கள் - மனம், புத்தி, சித்தம், அகங்காரம்.
  • நான்கு வேதங்கள் - ரிக், யஜுர், சாமம், அதர்வணம்
  • நால்வகைக்‌ கதிகள் - உம்பர்‌, மக்கள்‌, விலங்கு, நரகர்‌
  • நால்‌ வகை இழிச்‌ சொல் - பொய்‌, குறளை, கடுஞ்‌ சொல்‌, பயனில்‌ சொல்‌
  • நால் வகைக் கணக்குகள் - கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல்
  • நால்‌ வகைப்‌ புலமை - கவியே, கமகன்‌, வாதி, வாக்கி
  • நால் வகைக் கவிகள் - ஆசுகவி, மதுரகவி‌, சித்திரக்கவி‌, வித்தாரக் கவி
  • நான்கு யுகங்கள் - கிரதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம்
  • உபாயங்கள் நான்கு – சாம, பேத, தான, தண்டம்
  • பருவங்கள் நான்கு – வசந்தகாலம், கோடைக்காலம், கார்காலம், குளிர்காலம்
  • மனிதப் பருவங்கள் நான்கு – பால்யம், யௌவனம், கௌமாரம், வயோதிகம்.
  • வாழ்வுமுறை நான்கு – பிரம்மச்சரியம், கிரகஸ்தம், வானப்ரஸ்தம், சந்நியாசம்
  • வழிகாட்டிகள் நால்வர் – தாய், தந்தை, உடன்பிறந்தோர், குரு
  • நான்கு திசைகள் - கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு
  • நால்வர் - சைவ சமயக் குரவர்கள்; அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்
  • நால்வகைச் சாந்து – கலவை, வீதம், புலி, வட்டிகை எனும் சந்தனச் சாந்து
  • நால்வகைத் தேவர் – பவணர், வியத்தகர், கோதிஷ்கர், கப்ல வாசியர்
  • நால்வகைத் தோற்றம் – அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம்
  • நால்வகைப் பூ – கோட்டுப் பூ, கொடிப் பூ, நீர்ப்பூ, நிலப் பூ
  • நாலம்பலம் – கோயிலுக்குள் ஒரு பகுதி
  • நாலறிவுயிர் – சுவை, ஒளி, ஊறு, நாற்றம் என்பன நாலறிவு. வண்டு, தும்பி முதலியன நாலறிவு உயிர்கள்
  • நாலா – பல. நாலா பக்கமும்
  • நாலான் சடங்கு – நாலா நீர்ச் சடங்கு. விவாகத்தின் நான்காம் நாள் மணமக்கள் புரியும் நீராட்டச் சடங்கு.
  • நாலா நீராடுதல் – மாதவிடாய் முடிந்த நான்காவது நாளில் சுத்திகரிப்புக் குளியல்.
  • நாலாம் பாதகன் – கொலை பாதகன்
  • நாலாம் பொய்யுகம் – கலியுகம்
  • நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் – பன்னிரு ஆழ்வார்கள் இயற்றிய 4000 பாடல்கள்.
  • நாலு கட்டு – நாற்பூரமும் சுற்றுக்கட்டுத் திண்ணை கொண்ட வீடு.
  • நாலு கவிப் பெருமாள் – நாலு வகைக் கவியிலும் வல்லவர். திருமங்கை ஆழ்வார்
  • நான்மணி மாலை – வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம் என மாறிமாறி மாலை போல் இசைந்து வரும், நாற்பது செய்யுட்கள் கொண்ட நூல்.
  • நான் மருப்பு யானை – நாற் கொம்புடைய யானை. ஐராவதம்
  • நான் மலத்தார் – ஆணவம், கன்மம், சுத்தமாயை, திரோதாயி என்னும் நான்கு மலங்களை உடைய பிரளயக்காரர்.
  • நான்மாடக் கூடல் – கூடல் நகரம், மதுரை மாநகர்.
  • சதுர மாடம் - நான்கு புறமும் அளவொத்து அமைந்த விளக்கேற்றும் மாடப்பிறை.
  • சதுவகை - நால் வகை
  • சதுரப் பாலை - பாலை யாழின் வகை
  • சதுரக் கள்ளி - நான்கு விளிம்புகளிலும் முட்கள் உள்ள கள்ளி
  • சதுரக் கம்பம் - நாற்கோணமாக அமைந்த தூண்
  • சதுர் வேதி - நான்கு வேதங்களிலும் வல்லமை உடைய அந்தணன்
  • சதுர்க்கோணம் – நாற்கரம், நாற்கோணம்.
  • சதுர்ப்புஜன்- நான்கு தோள்களை உடையவன்; திருமால், சிவன்
  • சதுர்முகன் – நான்கு முகங்களை உடைய பிரம்மன்
  • சதுர்த்தசம் - பதிநான்கு
  • சதுர்த்தசி - பதினான்காம் திதி
  • சதுர்த்தம் - நான்கு சுரம் உடைய ராகம்
  • சதுர்தர் - நான்காம் வருணத்தினர்
  • சதுர்தர் - சமர்த்தர்
  • சதுர்த்தி - நான்காம் திதி
  • சதுர்ப்பாதம் – சிவ ஆகமங்கள் நான்கு. சரியை, கிரியை, யோகம், ஞானம்
  • சதுர் வர்ணம் - நால் வகை வர்ணம்; அரசர், அந்தணர், வணிகர், வேளாளர்
  • சதுரகராதி - 18-ம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் தொகுத்த பெயரகராதி, பொருளகராதி, தொகையகராதி, தொடையகராதி எனும் நான்கு பிரிவுகளைக் கொண்ட அகராதி.
  • சதுரங்க சேனை - நாற்படை - நான்கு படைப்பிரிவுகள் கொண்ட முழுமையான சேனை; ரத, கஜ, துரக, பதாதி.
  • சதுரச் சந்தி - நாற்சந்தி
  • சதுக்கம் - நாற்சந்தி.
  • சதுக்க பூதம் - சிலப்பதிகாரம் கூறும் பூதம்; நாற்சந்திகளில் நின்று கொடியவரைப் பிடித்து விழுங்கும் பூதம்.
  • சதுர்முகன் தேவி - நான்முகன் தேவி; சரஸ்வதி
  • சதுர்த் தந்தம் - நான்கு தந்தங்களை உடைய யானை. ஐராவதம்.

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.