second review completed

செ. ஞானன்

From Tamil Wiki
Revision as of 18:19, 10 March 2024 by Tamizhkalai (talk | contribs)
செ. ஞானன்

செ. ஞானன் (சங்கீத ஞான பாண்டியன்; செ. ஞானபாண்டியன்) (ஏப்ரல் 15, 1942 – மார்ச் 09, 2013) கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர். பொது வாசிப்புக்குரிய பல படைப்புகளை எழுதினார். அஞ்சல் நிலைய அதிகாரியாகப் பணியாற்றினார். தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றத்தின் விருதுநகர் மாவட்டப் பொறுப்பாளர்களுள் ஒருவர்.

பிறப்பு, கல்வி

சங்கீத ஞானபாண்டியன் என்னும் இயற்பெயரை உடைய செ. ஞானபாண்டியன் எனும் செ. ஞானன், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வேலன்குளத்தில், ஏப்ரல் 15, 1942 அன்று, புதியம்புத்தூர் செல்லையா என்ற தமிழ் வைத்தியருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்வி கற்ற இவர், பிற்காலத்தில் இசையை முழுமையாகக் கற்றார்.

தனி வாழ்க்கை

செ. ஞானன் சிவகாசியில் அஞ்சல் நிலைய அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். மணமானவர்.

செ. ஞானன் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

செ. ஞானன் கவிதைகள் எழுதிக் கவிஞராக அறிமுகம் ஆனார். 1969-ம் ஆண்டு குமுதம் வெளியிட்ட வெண்பா கவிதை அரங்கத்தை விமர்சித்து விமர்சகராக அறிமுகமானார். தொடர்ந்து பொது வாசிப்புக்குரிய சிறுகதை, கட்டுரை, நாவல்களை எழுதினார். சிறார்களுக்காகவும் பல படைப்புகளை எழுதினார். 28 நூல்களை எழுதினார். வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றில் பங்கேற்றார்.

செ. ஞானன், ஸ்ரீபதி உள்ளிட்ட பலருக்கு மரபுக் கவிதைகள் இயற்றுவதற்கான பயிற்சி அளித்தார். செ. ஞானன் படைப்புகளை ஆராய்ந்து பல மாணவர்கள் இள முனைவர், முனைவர் பட்டங்களைப் பெற்றனர்.

செ. ஞானன் (படம் நன்றி: கவிஞர் பாண்டூ தளம்)

அமைப்புப் பணிகள்

செ. ஞானன், கந்தகப் பூக்கள் இலக்கிய அமைப்பு, தமிழ்ச்சுடர் இலக்கியப் பேரவை, வல்லிக்கண்ணன் இலக்கியப் பேரவை, பாரதி இலக்கியச் சங்கம், லில்லி தேவசிகாமணி அறக்கட்டளை, நீலநிலா இதழ்க் குழுமம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி அறக்கட்டளை, அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம், களம் இதழ் அமைப்பு, கொடி இதழ் அமைப்பு, கதவு இதழ் அமைப்பு எனப் பல இலக்கிய அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு பல்வேறு இலக்கிய நிகழ்வுகளை முன்னெடுத்தார்.

முற்போக்கு இயக்கங்களுடனும், இலக்கியவாதிகளுடனும் தொடர்புகொண்டு, தமிழ்நாடெங்கும் சென்று பல இலக்கிய நிகழ்வுகளில் கலந்துகொண்டார். இளைஞர்கள் பலரை ஊக்குவித்து இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தினார். விருதுநகர், சிவகாசியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றக் கிளைகள் பலவற்றை ஏற்படுத்தினார்.

இசை வாழ்க்கை

செ. ஞானன் முறையாக இசை கற்றவர். சந்தத்தோடு தமிழ் பாடல்கள் பலவற்றை இயற்றினார்.

நாடகம்

செ. ஞானன் நாடகங்கள் பலவற்றை எழுதினார். அவற்றில் சில இலக்கிய நிகழ்வுகள் நடந்த மேடைகளில் அரங்கேறின.

பொறுப்புகள்

  • இலக்கிய அமைப்புகள் பலவற்றின் ஆலோசகர்.
  • தமிழ்நாடு கலை, இலக்கியப் பெருமன்றத்தின் விருதுநகர் மாவட்டப் பொறுப்பாளர்.
  • விருதுநகர் மாவட்டக் கலைஞர்கள் குழுவின் கௌரவ ஆலோசகர்.
  • கோவை லில்லி தேவசிகாமணி இலக்கியப் பரிசுகள் திட்டப்பணிச் செயலாளர்.

விருதுகள்

  • ஞானக்குயில் பட்டம்
  • சீர்தமிழ்ச்செம்மல் பட்டம்

மறைவு

செ. ஞானன், மார்ச் 09, 2013 அன்று, தனது 71-ம் வயதில் காலமானார்.

மதிப்பீடு

செ. ஞானன் முறையாக மரபிலக்கியம் கற்ற கவிஞர். விமர்சகராகவும் செயல்பட்டார். பொது வாசிப்புக்குரிய பல படைப்புகளைத் தந்தார். “சிறந்த தமிழ் எழுத்தாளராக மட்டுமின்றி, பண்பு மிக்க சிறந்த மனிதராகவும் – தோழராகவும் – கலைஞராகவும் விளங்கியவர், கவிஞர் ஞானன்” என்று மதிப்பிட்டார் தி.க. சிவசங்கரன். செ. ஞானன் முற்போக்கு முகாமைச் சேர்ந்த எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.

நூல்கள்

  • ஒளிகள்
  • வேறு வழி இல்லை
  • நாடக வடிவில் நளவெண்பா
  • நெஞ்ச ஊஞ்சல்
  • இதயம் இனிக்கும் இலக்கிய காட்சிகள்
  • என்ன சொல்லி அழைக்க…
  • ஒன்று கூடிச் சமமாய் வாழ்ந்திடுவோம்
  • காலங்கள் உதிர்ந்தாலும்
  • சிந்தனை மின்னல்கள்
  • தாமிரபரணிக் கரையினிலே
  • பாடு! குயிலே பாடு!
  • வறுமை ஒரு தடையல்ல

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.