under review

மு. பவுல் இராமகிருட்டிணன்

From Tamil Wiki
Revision as of 10:11, 25 November 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (category and template text moved to bottom of text)

மு. பவுல் இராமகிருட்டிணன் (முத்துக்கருப்பப் பிள்ளை இராமகிருட்டிணன்) (செப்டம்பர் 26, 1916 – டிசம்பர் 6, 1987) ஒரு தமிழக எழுத்தாளர். கவிஞர். பள்ளி ஆசிரியராகவும், கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றினார். கிறிஸ்தவ சமயத்தை ஏற்று, அம்மதம் சார்ந்து பல நூல்களை இயற்றினார். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை, ‘மீட்பதிகாரம் என்னும் பேரின்பக் காப்பியம்’ என்ற தலைப்பில் நூலாக இயற்றினார்.

பிறப்பு, கல்வி

முத்துக்கருப்பப் பிள்ளை இராமகிருட்டிணன் என்னும் மு. பவுல் இராமகிருட்டிணன், செப்டம்பர் 26, 1916 அன்று, மதுரையில் உள்ள கீரைத்துறையில், முத்துக்கருப்பப் பிள்ளை - மீனாட்சி தம்பதியினருக்குப் பிறந்தார். இவரது பெற்றோர் வைணவ சமயத்தைச் சார்ந்தவர்கள். மு. பவுல் இராமகிருட்டிணன், மதுரை கீழவாசலில் உள்ள கத்தோலிக்கக் கிறித்தவப் பள்ளியில் கல்வி கற்றார். அமெரிக்கன் கல்லூரியில் வரலாற்றுப் பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஆசிரியர் பணிக்கானப் பயிற்சியை முடித்துப் பட்டம் பெற்றார். தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

மு. பவுல் இராமகிருட்டிணன், காவல்துறை, திரைப்படத்துறை, கூட்டுறவுத்துறை ஆகியவற்றில் பணியாற்றினார். பின்னர் மதுரையிலுள்ள செளராஷ்டிரா உயர்நிலைப் பள்ளியிலும், ஃபாத்திமா பெண்கள் பள்ளியிலும் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். மதுரையிலுள்ள தியாகராஜர் உயர்நிலைப் பள்ளியிலும், இராஜபாளையத்திலுள்ள அன்னப்ப ராஜா நினைவு உயர்நிலைப் பள்ளியிலும், மதுரையிலுள்ள பிள்ளைமார் சங்க உயர்நிலைப் பள்ளியிலும் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார் .

பவுல் இராமகிருட்டிணன் 1965 -ஆம்ஆண்டு முதல் 1976 வரை வாணியம்பாடியிலுள்ள இஸ்லாமியர் கல்லூரியிலும், கோயம்புத்தூரிலுள்ள சுவாமி விவேகானந்தர் கல்லூரியிலும், தரங்கம்பாடிக்கு அருகிலுள்ள பொறையாறில் அமைந்துள்ள தமிழ் நற்செய்தி லுத்தரன் கல்லூரியிலும் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மணமானவர். மனைவி: மனோன்மணி. இவர்களுக்கு ஏழு பிள்ளைகள்.

இலக்கிய வாழ்க்கை

மு. பவுல் இராமகிருட்டிணன், ஈ.வெ.ரா. பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக இருந்தார். பின் இஸ்லாமிய நூல்களைப் பயின்று, உலகத்தைப் படைத்த ஓர் இறைவன் உண்டு என்ற புரிதலுக்கு ஆட்பட்டார். இஸ்லாமியர்களால் ’ஈசாநபி’ என்று அழைக்கப்படும் இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் விவிலியத்தைப் பற்றியும் அறிந்தார். அதன் விளைவாக 1972 -ஆம் ஆண்டு தமது 56 -ஆவது வயதில் கிறிஸ்தவராக மதம் மாறினார். அதுவரை இராமகிருட்டிணன் ஆக இருந்தவர், திருமுழுக்குப் பெற்று பவுல் இராமகிருட்டிணன் ஆனார். கிறிஸ்தவராக மாறிய பின்னர் துதிப் பாடல்கள், நீதி நூல்கள், காப்பியம் ஆகியவற்றைப் படைத்தார். அவற்றுள், இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் மீட்பதிகாரம் என்னும் பேரின்பக் காப்பியம் குறிப்பிடத்தகுந்த நூல்.

மறைவு

மு. பவுல் இராமகிருட்டிணன், டிசம்பர் 6, 1987 அன்று, தமது 72-ஆம் வயதில் காலமானார்.

மதிப்பீடு

மு. பவுல் இராமகிருட்டிணன் தமிழ் இலக்கிய நூல்களின் நயங்களை தான் படைத்த ‘மீட்பதிகாரம் என்னும் பேரின்பக் காப்பியம்’ நூலில் சிறப்புறக் கையாண்டார். இது பற்றிக் கிறிஸ்தவ ஆய்வாளர்கள், “பல்சமயவுறவும் பல்தொழிற்பட்டறிவும் பன்னூற் பயில்வும் பட்டாங்கின் தெளிவும் வாய்க்கப் பெற்ற பவுல் இராமகிருட்டிணர் பாருக்குப் பாங்குடன் வழங்கிய மாண் காப்பியம் மீட்பதிகாரம்” என்று மதிப்பிட்டுள்ளனர். இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை எளிய தமிழில் எழுதிய கிறித்தவ இலக்கியப் படைப்பாளிகளின் வரிசையில் மு. பவுல் இராமகிருட்டிணனும் இடம் பெறுகிறார்.

நூல்கள்

  • திருவடிமாலை (கிறிஸ்துவின் மீதான துதிப்பாடல்கள்) - 1977
  • சாலமோன் திருவருட் கோவை என்னும் தெய்வத் திருமுல்லை - 1982
  • மீட்பதிகாரம் என்னும் பேரின்பக் காப்பியம் - 2011

உசாத்துணை

  • கிறித்தவக் காப்பியங்கள், முனைவர் யோ. ஞான சந்திர ஜாண்சன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியிடு, முதல் பதிப்பு, 2013.


✅Finalised Page