under review

தேவசீமா

From Tamil Wiki
Revision as of 09:43, 3 November 2023 by Logamadevi (talk | contribs)
தேவசீமா
தேவசீமா

தேவசீமா தேவி பிரியா) (பிறப்பு: ஆகஸ்டு 4, 1977) கவிஞர், தமிழில் நவீன கவிதைகள் எழுதி வருகிறார். குழந்தைகள் பாலியல் வன்முறைக்குட்படுவதை எதிர்த்து இவரது பெரும்பாலான கவிதைகள் எழுதப்படுகின்றன.

பிறப்பு, கல்வி

தேவசீமா கரூர் மாவட்டம் குளித்தலையில் ஆகஸ்டு 4, 1977 அன்று கைலாசம்- மீராபாய் இணையருக்குப் பிறந்தார். இவரது இயற்பெயர் தேவி பிரியா. பள்ளிக்கல்வியை மந்தைவெளியிலுள்ள சென்னை இராஜலட்சுமி மெட்ரிகுலேஷன் பள்ளி, பெரியார் நகரிலுள்ள பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி, புரசைவாக்கத்திலுள்ள பென்டிங்க் மேல்நிலைப் பள்ளிகளில் படித்தார். காயிதே மில்லத் கல்லூரியில் சத்துணவியலில் இளங்கலைப் பட்டம் (BSc Nutrition) பெற்றார்.

தனி வாழ்க்கை

தேவசீமாவின் திருமணம் 2002-ஆம் ஆண்டு நடைபெற்றது. கணவர் மரு.வே.சரவணன், கால்நடை மருத்துவர். தற்போது, இரு குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வரும் தேவசீமா தமிழ்நாடு அரசு அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

It is my own work.jpg
நீயேதான் நிதானன் நூலிலிருந்து நன்றி:https://vimarsanam.in/interview-with-devasema/

தேவசீமா, வாசிப்பின் வழியாக தனக்கு இலக்கியப் பரிச்சயம் ஏற்பட்டதாகவும், தன் இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக ராகுல் சாங்கிருத்யாயன், லா.ச.ரா, தி.ஜானகிராமன், ஜெயமோகன் ஆகியோரையும் குறிப்பிடுகிறார்.

தேவசீமாவின் 'படிமம்' என்ற முதல் கவிதை 2018-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஆனந்த விகடன் இதழில் வெளியானது. தேவசீமாவின் முதல் கவிதைத் தொகுப்பு 'வைன் என்பது குறியீடல்ல' ஜனவரி, 2020-ல் தேநீர் பதிப்பகம் மூலம் வெளியானது. இரண்டாவது தொகுப்பு 'நீயேதான் நிதானன்' 2022-ல் வெளியானது. இந்நூல் ஆரிகாமி(Origami) வடிவம் கொண்டது. 'நீயேதான் நிதானன்' என்ற இவரின் தொகுப்பிற்காக தனியாக 'தேவசீமா' என்ற எழுத்துரு உருவாக்கப்பட்டு அந்த எழுத்துருவைக் கொண்டு இந்த தொகுப்பு வடிவமைக்கப்பட்டது.

விருதுகள்

  • பொதிகை தமிழ்ச்சங்கம் மற்றும் ழகரம் வெளியீடு விருது 2021
  • திருப்பூர் தமிழ்ச்சங்க விருது 2021
  • சௌமா இலக்கிய விருது 2021
  • படைப்புக் குழும விருது 2021

இலக்கிய இடம்

"கவிஞர் தேவசீமா "வைன் என்பது குறியீடல்ல" தொகுப்பின் மூலம் இடம், காலம், இருத்தல் எனும் அபத்தங்களுக்குள் ஊடுருவி இருக்கிறார். அவரது பகடியும் வன்மமும் சற்றே நம்மைச் சமன்குலையச் செய்கிறது. இன்னும் உள்ளே சலனமுறும் மொழியின் ஆற்றல் லாவாவைப் போல இருக்கிறது. தொடர்ந்து அதனைப் பயன்படுத்துவார் எனும் வகையில் தேவசீமா நம்பிக்கை தரும் ஒரு படைப்பாளி" என கவிஞர் யவனிகா ஸ்ரீராம் குறிப்பிடுகிறார்.

'யாருடைய போலச்செய்தலும் இல்லாமல் தனக்கான மொழியைத் தானே கண்டடைந்து அதனை பாடுபொருளோடு பக்குவப்படுத்திச் சமைத்துத் தந்திருக்கும் தேவசீமாவின் கவிதைகள் வாழ்க்கையின் கீற்றுகள்" என்று கவிஞர் யாழன் ஆதி குறிப்பிடுகிறார்.

நூல் பட்டியல்

கவிதைத் தொகுதிகள்
  • வைன் என்பது குறியீடல்ல -2020 (தேநீர் பதிப்பகம்)
  • நீயேதான் நிதானன் - 2022 (தேநீர் பதிப்பகம்)

உசாத்துணை


✅Finalised Page