அறிவுமதி

அறிவுமதி (மதியழகன்) (பிறப்பு: நவம்பர் 17 19?) கவிஞர், எழுத்தாளர், இதழாளர். திரைப்படப் பாடாலாசிரியர், வசன ஆசிரியர். குறும் பட, ஆவணப்பட, திரைப்பட இயக்குநர். ‘தை’ கவிதை இலக்கிய இதழின் ஆசிரியர். தமிழக அரசின் சிறந்த திரைப் பாடல் ஆசிரியர் விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றார். தமிழுணர்வோடு பல கவிதைகளைப் படைத்தார்
பிறப்பு, கல்வி
மதியழகன் என்னும் இயற்பெயரை உடைய அறிவுமதி, நவம்பர் 17 அன்று, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சு. கீணனூரில் , கேசவன் - சின்னப்பிள்ளை இணையருக்குப் பிறந்தார். சு. கீணனூர் தொடக்கப்பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். உயர்நிலைக் கல்வியை கம்மாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கற்றார். புதுமுக வகுப்பை (பி.யூ.சி.) விருத்தாசலம் திருக்கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் படித்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்று இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார்.
தமிழ்நாடு அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையில், தொல்லியல் குறித்த முதுநிலைப் பட்டயப் படிப்பு பயின்றார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ‘முருகன் நடுகல் வீரன்’ என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டார்.
தனி வாழ்க்கை
அறிவுமதி தன்னம்பிக்கைப் பேச்சாளராகவும், சுதந்திர எழுத்தாளர் மற்றும் கவிஞராகவும் செயல்பட்டு வருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
தொடக்கம்
அறிவுமதிக்கு, தந்தை மூலம் திராவிட இலக்கிய அறிமுகம் ஏற்பட்டது. தாய் வழித் தாத்தா வீரமுத்து மூலம் நாட்டுப்புற இலக்கியங்கள் அறிமுகமாகின. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும்போது, வ.சுப. மாணிக்கம், எம்.எம்.தண்டபாணி தேசிகர், வெள்ளைவாரணார் போன்ற பேராசிரியர்களால் சங்க இலக்கிய ஆர்வம் பெற்றார். கவிதையின் மீது கொண்ட ஆர்வத்தால் ‘அவிழரும்பு’ என்ற கையெழுத்து இதழை நடத்தினார். நண்பன் அறிவழகன் பெயரையும் தனது பெயரையும் இணைத்து ‘அறிவுமதி’ என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கினார். ’என் பிரிய வசந்தமே’ என்பது அறிவுமதியின் முதல் கவிதை நூல்.