under review

துஞ்சத்து எழுத்தச்சன்

From Tamil Wiki
Revision as of 21:06, 15 November 2023 by Tamizhkalai (talk | contribs)
துஞ்சத்து எழுத்தச்சன்

துஞ்சத்து எழுத்தச்சன் (துஞ்சத்து ராமானுஜன் எழுத்தச்சன்) (பொ.யு. 15-ஆம் நூற்றாண்டு) மலையாளக் கவிஞர். மலையாள எழுத்துக்களை ஒருங்கிணைத்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

துஞ்சத்து எழுத்தச்சன் பொ.யு 15-16-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திரூர் நகரை அடுத்துள்ள இடத்தில் பிறந்தார். இந்த இடம் தற்போது துஞ்சன்பரம்பு என அழைக்கப்படுகிறது. எழுத்தச்சன் என்பது குலப்பெயர் அல்லவென்றும் இவரது இயற்பெயர் ராமானுஜன் எனவும் சில வரலாற்றாளர்கள் கருதினர். பிராமணராக இல்லாதபோதும் வேதங்களையும் சமஸ்கிருதத்தையும் கற்றார். பல நாடுகளையும் சுற்றிவந்து இறுதியில் திருக்கண்டியூர் என்னுமிடத்தில் தங்கினார்.

இலக்கிய வாழ்க்கை

மலையாள எழுத்துகள் ஒருங்கிணைப்பு

எழுத்தச்சன் காலத்திற்கு முன்பு மலையாள மொழியில் வட்டெழுத்து (முப்பது எழுத்துகள்கொண்ட தமிழை ஒத்த மலையாள அரிச்சுவடி), சமஸ்கிருதத்தை ஒத்த அரிச்சுவடி, நம்பூதிரிகள் பயன்படுத்திய சமஸ்கிருத அரிச்சுவடி, கிரந்தமும் வட்டெழுத்தும் பல்வேறு வகைகளில் இணைந்த பல்வேறு மலையாள அரிச்சுவடிகள் என தனித்தனி எழுத்து அமைப்புகளை ஒவ்வொருவரும் கொண்டிருந்தனர்.

எழுத்தச்சன் அரிநாம கீர்த்தனையை தான் உருவாக்கிய ஐம்பத்தியொரு (51) எழுத்துகள் கொண்ட அரிச்சுவடியைப் பயன்படுத்தி எழுதினார். அவரது பாடல் பிரபலமானதால், அவர் அமைத்த எழுத்துமுறையும் பிரபலமானது. முப்பத்தியொரு எழுத்துகள் கொண்ட வட்டெழுத்துகள் பள்ளிகளில் கற்பிக்கப்பட்டு வந்தபோதும், ஆங்கில அரசு அரசு ஆவணங்கள், ஆணைகளுக்கு எழுத்தச்சனின் எழுத்துமுறையைப் பயன்படுத்தியது.

எழுத்து

எழுத்தச்சன் இராமாயணத்தின் பல்வேறு வடிவங்களை ஒருங்கிணைத்து 'அத்யாத்மராமாயணம்' என்ற காவியத்தைப் படைத்தார். 'மகாபாரதம்' என்னும் நூலை எழுதினார்.

ஏடு துவக்குதல்

'ஹரி ஸ்ரீ கணபதியே நமஹ' என்ற வாசகத்தைக் கொண்டு எழுத்தச்சன் சிறார்களுக்கு ஏடு தொடங்கி வைத்தார். இது மலையாள மொழியில் ஐம்பத்தியொரு எழுத்துக்களைக் கொண்டது. கேரள மக்கள் விஜயதசமி அன்று அவர் வசித்த துஞ்சன்பரம்புக்கு வந்து அங்குள்ள மண்ணைக் கொண்டு தங்கள் குழந்தைகளின் கல்வியைத் துவக்குவது மரபாக உள்ளது.

மதிப்பீடு

"பக்தி இயக்கத்தின் சமூக அரசியல் மாற்றத்தின் குரலை கேரளத்துக்குக் கொண்டு வந்தவர் எழுத்தச்சன். எளிய நாட்டார் வாய்மொழி சந்தத்தில் ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் எழுதி முழுமுதல்தெய்வத்தை கேரள மண்ணில் நிறுவியவர் அவர். மலையாளமொழி இலக்கியத்தின் தொடக்கப்புள்ளி, கேரள தேசியத்தின் விதை, கேரள எளிய மக்களின் முதல் பிரதிநிதி, கேரள சமூகத்தின் பண்பாட்டு அடித்தளத்தை உருவாக்கியவர் எழுத்தச்சனே என்று இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாட் குறிப்பிடுவது இதனாலேயே." என ஜெயமோகன் குறிப்பிட்டார்.

நூல்கள் பட்டியல்

  • ஆத்யாத்மராமாயணம்
  • கேரளோபதி
  • அரி நாம கீர்த்தனம்
  • கணபதிஸ்தவம்
  • கிளிப்பாட்டு பிரஸ்தானம்
  • தேவி மகாத்மியம்
  • கேரளா நாடகம்

உசாத்துணை


✅Finalised Page