first review completed

நாச்சியார் திருமொழி

From Tamil Wiki
Revision as of 14:45, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)

நாச்சியார் திருமொழி (பொ.யு. 7-ஆம் நூற்றாண்டு) பக்தி இலக்கிய கால நூல். பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான ஆண்டாள் பாடியது. வைணவ பாசுரங்கள் அடங்கிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் தொகுக்கப்பட்டது.

நூல் பற்றி

பொ.யு. 7-ஆம் நூற்றாண்டில் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடியது. நூற்றி நாற்பத்து மூன்று பாடல்களைக் கொண்டது. நாயகன் நாயகி பாவம் என்ற உத்தியைக் கொண்டு எழுதப்பட்டது. கண்ணனைத் தன் நாயகனாகக் கொண்டு அவன் மீதுள்ள காதலையும், பிரிவாற்றாமையையும் பாடுவதாக அமைந்துள்ளது.

நூல் அமைப்பு

நாச்சியார் திருமொழியில் நூற்றி நாற்பத்து மூன்று பாடல்கள், பதினாங்கு தலைப்புகளின் கீழ் உள்ளது. பாடல்கள் அனைத்தும் அறுசீர், எழுசீர், எண்சீர் கழிநெடிலடி ஆசிரியப்பாக்களாலும் கலிப்பாக்களாலும் ஆனவை.

பாடுபொருள்

காமனிடம் வேண்டுதல், கண்ணனுக்கு அவள் விடும் மேக தூது, குயில் தூது, அழகருக்குப் பாடிய பாடல்கள், திருமணக் கனவு, பிரிவாற்றாமை, வேதனை, தன்னை பிருந்தாவனத்திலோ, துவாரகையிலோ கண்ணன் இருக்குமிடம் சென்று சேர்க்கும்படி உற்றாரிடம் வேண்டல் போன்றவற்றை பாடுபொருளாகக் கொண்டது. கண்ணன் எனும் பிம்பம் விளையாட்டுத்தோழனாய், குறும்புக்கார சிறுவனாய், மாயங்கள் பல புரியும் சாகசக்காரனாய் என பல வடிவங்கள் எடுத்துக்கொண்டே சென்று காதலன், மணாளன் என்ற நிலையை எட்டுகிறது.

பத்துகள்

  • முதற் பத்து: தையொரு திங்கள்: கண்ணனோடு கூடுவதற்காக காமனைத் தொழுதல்.
  • இரண்டாம் பத்து: நாமமாயிரம்: இடைப்பெண்கள் சிற்றில் சிதைக்க வேண்டாவென்று கண்ணனை வேண்டுதல்.
  • மூன்றாம் பத்து: கோழியழைப்பதன்: கண்ணன் கன்னியரோடு விளையாடல், அவன் கவர்ந்த உடைகளை கன்னியர் இரத்தல்
  • நான்காம் பத்து: தெள்ளியார் பலர்: கூடல் இழைத்தல் பற்றியன. "நீ கூடிடு கூடலே” என இறுதி முடிகிறது
  • ஐந்தாம் பத்து: மன்னு பெரும்புகழ்: முன் தானும் எம்பெருமானும் கூடியிருந்த காலத்திலே உடன் இருந்த குயிலை விளித்து தன்னை அவருடன் சேர்த்து வைக்க இறைஞ்சுதல்.
  • ஆறாம் பத்து: வாரணமாயிரம்: திருமால் தன்னை மணஞ்செய்வதாகக் கண்ட கனவைத் தோழிக்கு உரைப்பதாக அமைகின்றன. “கனாக்கண்டேன் தோழீ!” என பாடல் முடிகிறது.
  • ஏழாம் பத்து: கருப்பூரம் நாறுமோ: கண்ணன் ஊதும் வெண்சங்கின் மேன்மையைக் கூறுவனவாக பாடல் அமைந்துள்ளது.
  • எட்டாம் பத்து: விண்ணீல மேலாப்பு: மேகவிடுதூதாக அமைந்துள்ளன.
  • ஒன்பதாம் பத்து: சிந்துரச் செம்பொடி: பிரிவில் துன்பம் தரும் மலர்கள் பற்றியும், திருமாலை வழிபடும் பாங்கிலும் அமைந்துள்ளன.
  • பத்தாம் பத்து: கார்க்கோடல் பூக்காள்: பிரிவாற்றாமையால் அரற்றுவதாக அமைந்துள்ளன.
  • பதினோராம் பத்து: தாமுகக்கும்: திருவரங்கத்துச் செல்வனைக் காமுறுவதாக அமைந்துள்ளன.
  • பன்னிரண்டாம் பத்து: மற்றிருந்தீர்கட்கு: தன்னை கண்ணனிடத்தில் சேர்ப்பதே உய்யும் வழி என்பதை திட்டவட்டமாகக் கூறுவனாக அமைந்துள்ளன.
  • பதிமூன்றாம் பத்து: கண்ணனென்னும்: “அவலம் தணி” என இறைவனை வேண்டுகின்றன.
  • இறுதிப் பத்து: பட்டி மேய்ந்து: பிருந்தாவனத்தில் பரந்தாமனைக் கண்டது பற்றிக் கூறுகின்றன.

இலக்கிய இடம்

நாச்சியார் திருமொழி திருப்பாவை முடிந்த இடத்தில் தொடங்குகிறது என வைணவ அறிஞர்கள் கருதுகின்றனர். அகப்பொருள் கூறுகளைக் கொண்டவை. தமிழரின் வழிபாட்டு முறைகளையும் புலப்படுத்துபவை. பெண்ணின் அகமொழியும், அகவெளியும் பெண் சார்ந்த எந்த வரையறைகளுக்கும், ஒழுக்க நியதிகளுக்கும் உட்படாமல் கட்டற்று வெளிப்படும் ஓர் படைப்பாகவும் விளங்குகிறது.

பாடல் நடை

  • முதல் திருமொழி: முதல் பாடல்

தையொரு திங்களும் தரைவிளக்கித்
தண் மண்டலம் இட்டு மாசி முன்னாள்
ஐய நுண் மணல் கொண்டு தெரு அணிந்து
அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா!
உய்யவும் ஆங்கொலோ? என்று சொல்லி
உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யது ஓர் தழல் உமிழ் சக்கரக் கை
வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே!

  • நான்காம் திருமொழி: எட்டாவது பாடல்

ஆவல் அன்புடையார் தம் மனத்தன்றி
மேவலன் விரை சூழ் துவராபதிக்
காவலன் கன்று மேய்த்து விளையாடும்
கோவலன் வரில் கூடிடு கூடலே!

  • ஆறாம் திருமொழி: முதல் பாடல்

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புரம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ! நான்

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.