under review

மாணிக்கவாசகம் ஆசிர்வாதம்

From Tamil Wiki
Revision as of 22:58, 20 August 2023 by ASN (talk | contribs) (Para Added and Edited; Link Created: Proof Checked)

மாணிக்கவாசகம் ஆசிர்வாதம் (மா. ஆசிர்வாதம்; எம். ஆசிர்வாதம்; ராவ்சாகிப் ஆசிர்வாதம்; அருட்தந்தை ஆசிர்வாதம்; ஆசிர்வாதம் ஐயர்) (ஜூலை 1, 1865 - ஜூலை 13, 1948) கிறித்தவ மத போதகர்; இறையியலாளர். கவிஞர். ரெட்டியார்பட்டியில் ஆரம்பப் பள்ளியை நிறுவி கல்விப் பணி ஆற்றினார். இயேசு கிறிஸ்துவின் மீது ‘திரு அவதாரம்’ என்னும் காப்பிய நூலை இயற்றினார். ‘இரண்டாம் கிறித்தவக் கம்பர்’ என்று போற்றப்பட்டார்.

பிறப்பு, கல்வி

மாணிக்கவாசகம் ஆசிர்வாதம், திருநெல்வேலி மாவட்டத்தில் டோனாவூருக்கு அருகிலுள்ள சூரங்குடி என்னும் சிற்றூரில், ஜூலை 1, 1865 அன்று, மாணிக்கவாசகம் பிள்ளை - முத்துநாயகம் அம்மை இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்வியை சூரங்குடியிலும் டோனாவூரிலும் கற்றார். உயர் கல்வியை திருநெல்வேலியிலிருந்த சி.எம்.எஸ். (C.M.S.) கல்லூரியில் படித்தார். 1899-ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

மாணிக்கவாசகம் ஆசிர்வாதம், பிரிட்டிஷ் அரசின் வருவாய்த்துறையில் அதிகாரியாகப் பணியாற்றினார். ஓராண்டிற்குப் பின் அப்பணியைத் துறந்து மதப் பணிகளில் ஈடுபட்டார். மனைவி: மேரி ஞானம் அம்மையார். இவர்களுக்கு இரண்டு மகன்கள்.

இலக்கிய வாழ்க்கை

மாணிக்கவாசகம் ஆசிர்வாதம், ‘திருச்சபை ஐக்கியம்' என்னும் பொருள் பற்றி, தமிழ்ச் சபைத் தீபிகை, நற்போதகம் போன்ற இதழ்களில் கட்டுரைகள், தொடர்களை எழுதினார். விவிலியத்திலுள்ள நான்கு நற்செய்தி நூல்களின் அடிப்படையில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றைக் காப்பியமாக திரு அவதாரம் என்ற தலைப்பில் எழுதினார். இதன் ஒரு பகுதி, பிப்ரவரி 1936, நற்போதகம் இதழில் தொடங்கி, ஆகஸ்டில் நிறைவு பெற்றது. மாணிக்கவாசகம் ஆசிர்வாதத்தின் மகன் ஆர்தர் ஆசீர்வாதம், 1979-ல், இதனை நூலாக அச்சிட்டு வெளியிட்டார்.

மதப்பணிகள்

குருப்பட்டம் பெற்ற மாணிக்கவாசகம் ஆசிர்வாதம், சேரன்மாதேவி, பண்ணைவிளை, திருவில்லிபுத்தூர், பாளையங்கோட்டை, நல்லூர் போன்ற ஊர்களில் மதப் பரப்புரையாளராகப் பணியாற்றினார். பணி ஓய்வுக்குப் பின் உக்கிரமன் கோட்டை, பார்வதியாபுரம் போன்ற இடங்களில் இறைப்பணியாற்றினார் . பாளையங்கோட்டையிலுள்ள சமாதானபுரம் கிறிஸ்து ஆலயத்திற்கு கால்கோள் நாட்டினார்.

கல்விப் பணிகள்

மாணிக்கவாசகம் ஆசிர்வாதம், மக்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என விரும்பினார். அதற்காகப் பல முயற்சிகளை மேற்கொண்டார். பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்தார். இறுதியில் ரெட்டியார்பட்டியில், எஸ் .ஏ. பொன்னையா உபதேசியாரின் துணையுடன் தம் கைப் பொருளைச் செலவிட்டு ஆரம்பப் பாடசாலை ஒன்றை உருவாக்கி நடத்தினார்.

விருதுகள்

  • பிரிட்டிஷ் இந்திய அரசின் ராவ் சாகிப் பட்டம்
  • இரண்டாம் கிறித்தவக் கம்பர் பட்டம்

மறைவு

மாணிக்கவாசகம் ஆசிர்வாதம், ஜூலை 13, 1948-ல், தனது 83 ஆம் வயதில் காலமானார்.

மதிப்பீடு

மாணிக்கவாசகம் ஆசிர்வாதம், பாளையங்கோட்டைப் பகுதிகளில் சிறந்த போதகராக அறியப்பட்டார். ஏழை மாணவர்கள் கல்வி அறிவு பெறுவதற்காகப் பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆரமப்ப் பாடசாலையை உருவாக்கி நடத்தினார். இவர் எழுதிய திரு அவதாரம் காப்பியம், கிறித்தவக் காப்பியங்களுள் முதன்மையானதொரு காப்பிய நூலாகக் கருதப்படுகிறது.

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.