under review

சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்

From Tamil Wiki
Revision as of 14:42, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)
செய்யூர் கந்தசாமி கோவில் நன்றி:தினமலர்

சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் மதுராந்தகத்திற்கு அருகிலுள்ள சேயூரில் (செய்யூரில்) கோவில் கொண்ட முருகனைக் குழந்தையாகப் பாவித்து பாடப்பட்ட பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியம். அந்தகக்கவி வீரராகவ முதலியாரால் இயற்றப்பட்டது.

ஆசிரியர்

சேயூர் முருகன் பிள்ளைத்தமிழை இயற்றியவர் அந்தகக்கவி வீரராகவ முதலியார். பார்வை இழந்தவராதலால் 'அந்தகக்கவி' என அழைக்கப்பட்டார். சிலேடை நயத்துடன் பல பாடல்கள் புனைந்தவர். பார்க்க: அந்தகக்கவி வீரராகவ முதலியார் தொண்டை மண்டலத்திலிருந்த சேயூரில் கோவில் கொண்ட முருகன் மேல் இப்பிள்ளைத்தமிழ் பாடப்பட்டது.

நூல் அமைப்பு

இந்நூலுக்கு சேயூர்க்கந்தர் பிள்ளைத்தமிழ், சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ், சேயூர்ச் சுப்பிரமணியர் பிள்ளைத்தமிழ், என்று மூன்று பெயர்கள் உண்டு. சேயூர் வளவநகரி என்றும் அழைக்கப்பட்டது. விநாயகர் துதி நீங்கலாக 100 பாடல்களைக் கொண்டது. காப்பு, செங்கீரை, தாலம், சப்பாணி, முத்தம், வாரனை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் ஆகிய ஒவ்வொரு பருவத்திலும் 10 பாடல்கள் கொண்டது.

பாடல் நடை

நகைத்தண் டரளத் திரளரிசி நறுந்தே னுலையுங் கவிழாதோ
நந்தின் கடமு முடையாதோ நளிமா துளைத்தீ யவியாதோ
தொகைத்தண் பவள விளக்கணைந்து விடாதோ வடியேம் வதுவையெனச்
சொல்லிச் சொல்லிக் கொணர்ந்தசிறா விருந்தும் வருந்திச் சோராதோ
முகைப்புண் டரிக முரம்பிணித்து முலையென் றறிந்து னிடத்திரங்கி
மொழிந்து துயிற்று மணற்குழந்தை முழுத்தா மரைக்கண் விழித்துமனந்
திகைப்புண் டழுது தேம்பாதோ சிறியேஞ் சிற்றில் சிதையேலே
சேயே சேயூர்ப் பெருமானே சிறியேஞ் சிற்றில் சிதையேலே.

சிறுமியர் ஒளிபொருந்திய குளிர்ச்சியான அழகான முத்துக்களை அரிசியாக வைத்துக்கொண்டு, அதில் இனிமையான தேனையும் வார்த்து உலையில் இட்டுப் பொய்தல் விளையாட்டு விளையாடுகிறார்கள்; அதாவது சோறு சமைப்பது போலப் பாவனை செய்து விளையாடுகிறார்கள். இது உண்மைச் சோறு இல்லையானதால் பொய்தல் விளையாட்டு எனப்படும். “இந்த உலையைக் கவிழ்த்து விடாதே முருகா!” எங்கின்றாள் மங்கையர்க்கரசி எனும் சிறுமி. சங்கினைச் சோறு சமைக்கும் பாத்திரமாக வைத்துக் கொண்டுள்ளனர்; நெருப்பின் நிறம் கொண்ட மாதுளை மலர்களை, அடுப்பில் தீ எரிவது போலப் போட்டுவைத்துள்ளார்கள். குளிர்ச்சி பொருந்திய பவளக்கொடிகளை தாம் கட்டியுள்ள சிறுவீட்டினுக்கு விளக்குகளாகப் பொருத்தி உள்ளனராம். “இந்த சங்குக்கடத்தை உடைத்து விடாதே! மாதுளைத்தீயை அவித்துவிடாதே! பவளவிளக்கை அணைத்து விடாதே!” எனவெல்லாம் கமலம் முருகனை வேண்டுகிறாள்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page