first review completed

தமிழ்நதி

From Tamil Wiki
தமிழ்நதி

தமிழ்நதி (கலைவாணி) (பிறப்பு: ஆகஸ்ட் 15, 1966) ஈழத்து தமிழ்க் கவிஞர், எழுத்தாளர்.

வாழ்க்கைக்குறிப்பு

தமிழ்நதியின் இயற்பெயர் கலைவாணி. தமிழ்நதி ஈழத்தின் திருகோணமலை அன்புவழிபுரத்தில் ஆகஸ்ட் 15, 1966-ல் செல்வரட்ணம், சிவபாக்கியம் இணையருக்கு மகளாகப் பிறந்தார். தந்தையின் வேலை இடமாற்றங்கள் காரணமாக முதலாம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்பு வரையான காலப்பகுதிக்குள் பதினொரு பாடசாலைகளில் கல்விகற்றார். திருகோணமலை சண்முகா வித்யாலயாவில் பள்ளிக்கல்வி நிறைவு செய்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டம் பெற்றார். ஈழத்தின் அரசியல் சிக்கல் காரணமாக 1992-ல் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

தமிழ்நதி என்னும் புனைபெயரில் 1986 முதல் எழுத ஆரம்பித்தார். சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள் எழுதினார். 1996-ல் தான் முதல் அச்சுப்புத்தகம் வெளியானது. 2016-ல் 'பார்த்தீனியம்' நாவல் வெளியானது. தொடர்ந்து சிறுகதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார்.

இலக்கிய இடம்

"தமிழ்நதிக்கு வாய்த்திருக்கும் மொழி அபூர்வமானது. அவர் சொற்கள், நிலைபெற்ற அர்த்தத்தோடு, யோசித்துப் பெறத்தக்க ஆழப் பொருள்களைக் கொண்டதாக இருக்கும். ஆடம்பரம் அற்ற, அடக்கமான தொனியுடன் கூடிய அவர் கதைகள், பாத்திரங்களின் செயற்பாடுகளை மேற் கட்டுமானமாகவும், அச்செயற்பாடுகளின் மன ஊக்கிகளை அடிகட்டு மானமாகவும் கொண்டிருக்கும். நாளின் நிகழ்வுகளைப் பட்டியலிடும் யதார்த்தக் கதைகள் அல்ல, தமிழ் நதியுடையது. நிகழ்வுகளின் மனக் காரணிகளைச் சித்தரிக்கும் ஆழ் யதார்த்தக் கதைகள் அவருடையவை." என எழுத்தாளர் பிரபஞ்சன் மதிப்பிடுகிறார்.

விருதுகள்

  • 2016-ல் அமுதன் அடிகளார் இலக்கிய விருது, இயக்குநர் மணிவண்ணன் விருது ஆகியவை பார்த்தீனியம் நாவலுக்காக கிடைத்தன
  • 2017-ல் அவள் விகடன் ‘இலக்கிய ஆளுமை’ விருது கிடைத்தது

நூல்கள் பட்டியல்

கவிதைகள்
  • சூரியன் தனித்தலையும் பகல் (2007, பனிக்குடம் பதிப்பகம்)
  • இரவுகளில் பொழியும் துயரப்பனி
  • அதன்பிறகும் எஞ்சும்
நாவல்
  • பார்த்தீனியம் (2016)
  • கானல் வரி (குறுநாவல்)
சிறுகதைத் தொகுப்பு
  • நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது
  • மாயக்குதிரை
கட்டுரைகள்
  • ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம்

உசாத்துணை

இணைப்புகள்



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.