கார்மேகக் கவிஞர்

From Tamil Wiki

கார்மேகக் கவிஞர் (பொயு 11 ஆம் நூற்றாண்டு) கார்மேகக் கவிஞர் கொங்குமண்டல சதகம் என்னும் நூலின் ஆசிரியர். சமணமதத்தைச் சேர்ந்தவர்.

வரலாற்றுச் சான்றுகள்

கார்மேகக் கவிஞரின் வரலாறு பற்றி ஆதாரபூர்வச் செய்திகள் குறைவு. கொங்குமண்டல சதகம் நூலை பதிப்பித்த தி. அ. முத்துசாமிக் கோனார் சுவடிக்குறிப்புகள் மற்றும் வாய்மொழித் தொன்மங்களின் அடிப்படையில் சுருக்கமான ஒரு வரலாற்றை அளிக்கிறார்

பிறப்பு, கல்வி

கார்மேகக் கவிஞரின் இயற்பெயர் ஜினேந்திரன். கொங்கு மண்டலத்தில் குறுப்புநாட்டில் விஜயமங்கலம் என்னும் சமணத்தலத்தில் இருக்கும் சமண ஆலயமான ஸ்ரீசந்திரப்பிரப தீர்த்தங்கரர் சன்னிதிக்கு ஸ்ரீவத்ஸ கோத்திரம், ஒளபாக்ய சூத்திரம் விருத்தானிய யோகசாகை காசிபப்பிரவரமான ஜைனப்பிராமண குலத்தில் பதுமநாப அய்யர் என்பவர் பூஜை செய்துவந்தார். அவர் மனைவி ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர். அவர்களுக்கு ஜினேந்திரன் பிறந்தார்.

தந்தையிடமும் சமண ஆசிரியரிடமும் சமணநூல்களையும், சம்ஸ்கிருதம் தமிழ் மொழிகளையும் ஜினேந்திரன் கற்றார். ஒருமுறை அவையொன்றில் ஸ்ரீ பாரிச தீர்த்தங்கரர் பற்றி ஒரு வெண்பாக் கூறுமாறு சந்திரப்பிரபா ஆலத்தின் பூசகர் கோரியபோது

பச்சை மணிவடிவாய்ப் பாரில்விசுவ சேனனக

மெச்சு மகவாய் வெளிவந்த - உச்சிதனாம்

பாரிச நாதன் பதநினைந்தோர் வாழ்வரே

சீரிசைநூ லின்பஞ் சிறந்து

என்ற பாடலை பாடினார்.

அவருடைய சைவக் கல்வியை சோதனை செய்யும்பொருட்டு ஸ்ரீ சுப்ரமணியர் மீது ஒரு செய்யுள் கூறுமாறு வேண்டினர். அவர் உடனே

ஆறு விழியிலுறு மாறுபொறி நீர்க்கரையில்

ஆறுமக வாயொன்றா யன்னைசத்தி வீறுகொடு

ஆறுபடை வீடுற் றசுரரறத் தேவர்தொழும்

ஆறுமுக னம்மையளிப் பான்

என்னும் பாடலைப் பாடினார்