first review completed

சந்திரா தங்கராஜ்

From Tamil Wiki
Revision as of 07:43, 21 January 2023 by Ramya (talk | contribs)
Chandra2.jpg
Chandra1.jpg

சந்திரா தங்கராஜ் (பிறப்பு: ஜூன் 11, 1977) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், திரைப்பட இயக்குனர்.

பிறப்பு,கல்வி

சந்திரா தங்கராஜ், தேனி மாவட்டம் கூடலூரில் விவசாயக் குடும்பத்தில் பேச்சியம்மாள், தங்கராஜ் இணையருக்கு ஜூன் 11,1977-ல் பிறந்தார். பள்ளிக் கல்வியை கூடலூர் திருவள்ளுவர் நடுநிலைப்பள்ளியிலும், மேல்நிலைக் கல்வியை என்.எஸ்.கே பொன்னையா கவுண்டர் உயர்நிலைப்பள்ளியிலும் பயின்றார்.

பொதுவுடமைக் கொள்கைமேல் மிகுந்த பற்று கொண்ட தந்தை வாலண்டினா என்று அவருக்குப் பெயரிட்டார். குடும்பத்தினரால் உச்சரிக்க முடியாததால் சந்திரா என்ற பெயர் நிலைத்தது.

தனி வாழ்க்கை

சந்திராவுக்கு 18 வயதில் உறவினரான வீ.கே.சுந்தருடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப்பின் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். குழந்தை பிறந்ததால் படிப்பைத் தொடரமுடியவில்லை. குழந்தைகள் பௌஷ்யா, அபினவ்.

இதழியல்

சந்திரா ஓரிரு மாதங்கள் சுயாதீனப் பத்திரிகையாளராக (free lancer) கட்டுரைகள் எழுதினார். 21-ஆவது வயதில் ஆறாம்திணை பத்திரிகையில் நிரூபராக இணைந்து, 1999 முதல் 2003 வரை விகடன், குமுதம் இதழ்களிலும் பணியாற்றினார். அவள் விகடன் இதழுக்காக பல கிராமங்களில் பெண்களைச் சந்தித்து, அவர்களின் சாதனைகளையும், எதிர்நோக்கும் பிரச்சினைகளயும் பற்றிக் கட்டுரைகள் எழுதினார்.

இலக்கிய வாழ்க்கை

கணவரின் நண்பரான கவிஞர் நா. சுகுமாரனின் நட்பால் நவீனத் தமிழ் இலக்கியம் அறிமுகமாகியது.

சிறுகதைகள்
udumalai.com

சந்திராவின் முதல் சிறுகதை புளியம்பூ[1] 2000-ல் எழுதப்பட்டது. 2006-ல் காலச்சுவடு பெண் எழுத்தாளர்களுக்கான புதுமைப்பித்தன் நினைவு சிறுகதைப் போட்டிக்கு அனுப்பிய புளியம்பூ மற்றும் கிழவிநாச்சி[2] சிறுகதைகள் முறையே இரண்டாம், மூன்றாம் பரிசைப் பெற்றன. வாய்மொழிக்கதைகள் சொல்லும் கதைசொல்லியின் சாயலில் அவரது தொடக்ககாலக் கதைகள் இருந்தன. முதல் சிறுகதைத் தொகுப்பு பூனைகள் இல்லாத வீடு உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடாக 2007-ல் வெளிவந்தது.

பிற்காலக் கதைகளில் பல பெருநகருக்கு வரும் சிற்றூர் மக்களின் மிரட்சியும், பெருநகர வாழ்வும், திரைப்படத்துறையையும் களங்களாகக் கொண்டவை.

கவிதை

சந்திரா 2009-ல் தந்தையின் மறைவின் பாதிப்பினால் கவிதைகள் எழுதத் துவங்கி தன் வலைத்தளத்தில் வெளியிட்டார். உயிரெழுத்து இதழிலும் அவை வெளிவந்தன. 2009-ல் அக்கவிதைகளை விலகிச் செல்லும் பேரன்பு என்ற தொகுதியாக உயிரெழுத்து பதிப்பகம் வெளியிட்டது. கடின உழைப்பாளியும், தன் மக்களின்மேல் பேரன்பு கொண்டவருமான ஓர் விவசாயித் தகப்பனின் தந்தைமையின் சித்திரமும், மேற்குத் தொடர்ச்சி மலையின் காடுகளும், தோட்டங்களும், வாழ சொந்தமான இடம் இல்லாமல் இடம் பெயர்வதன் வலியும் இக்கவிதைகளில் உள்ளன.

சந்திராவின் படைப்புகளின் மொழியாக்கம்

சந்திராவின் பூனைகள் இல்லாத வீடு[3] சிறுகதை பத்மஜா அனந்தால் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு[4] மொழி குழுமத்தின்[5] மொழியாக்கப் போட்டியில் முதல் பரிசு பெற்றது. [6]

திரைப்படத் துறை

சந்திரா திரைத்துறையில் இருந்த ஆர்வத்தால் உதவி இயக்குனராக ராம் , பருத்தி வீரன் (இயக்குனர் அமீர்),கற்றது தமிழ் (இயக்குனர் ராம்), யோகி( இயக்குனர் சுப்ரமண்ய சிவா) ஆகிய திரைப்படங்களில் பணியாற்றினார். சூரரைப் போற்று திரைப்படத்தில் சுதா கோங்குராவுடன் இணை இயக்குனராகவும் ரெட்டைச்சுழியில் இயக்குனர் தாமிராவுடன் துணை இயக்குனராகவும் பணியாற்றினார்.

மார்ச் 2022-ல் சந்திராவின் இயக்கத்தில் கள்ளன் திரைப்படம் வெளிவந்தது. வேட்டைத் தொழில் தடை செய்யப்பட்ட நிலையில் வாழ்வாதாரத்திற்காகக் குற்றச்செயலில் ஈடுபடும் மனிதனின் கதையில் கரு. பழனியப்பன் நடித்தார். கள்ளன் குற்றங்களை விவரிப்பதைவிட, குற்றம் நிகழும் சூழலைப் பேசிய திரைப்படம்.

இலக்கிய இடம்

ஜெயமோகன் சந்திராவின் அறைக்குள் புகுந்த தனிமை[7] சிறுகதையைப் பற்றி "ஆண்-பெண் உறவின் பாவனைகளின் நடனம் இந்தக்கதை. நாம் வாழ்க்கையில் காணும் எல்லாவகையான ஆண்-பெண் உறவுகளுடன் இதைப் பொருத்தி விரித்துக்கொள்ளமுடியும். ஒவ்வொரு தளத்திலும் நம் வாழ்க்கையை நாம் புரிந்துகொள்ள திறப்புகளை அளித்துக்கொண்டே செல்கிறது" என்று குறிப்பிடுகிறார்[8].

"காட்சித்தொகுப்பாக அமைந்திருக்கும் அதே வேளையில், எளிதாகக் கடந்து செல்லமுடியாதபடி ஒவ்வொரு காட்சியிலும் மனத்தை அசைக்கும் புள்ளிகள் நிறைந்து தனித்தன்மை கொண்டதாக மாற்றுகின்றன. கவிதையின் சாரமாக அமைந்திருக்கும் அந்தப் புள்ளிகள் சிற்சில தருணங்களில் பரவசமளிக்கின்றன. சிற்சில தருணங்களில் அமைதியிழக்க வைக்கின்றன" என்று எழுத்தாளர் பாவண்ணன் மிளகு தொகுப்பைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.


"மனித உறவுகளை விரும்பி நாடும் ஜீவன்கள் எதிர்கொள்ளும் அவஸ்தைகளைப் பேசுகின்றன சந்திராவின் கதைகள்.நேரான சொல்லல் முறையைக் கொண்டுள்ள இக்கதைகள் பால் சார்பற்றுக் கிளைத்தெழுகின்றன. பெண் மனம் தனித்து அவதானிக்கக்கூடிய நுட்பமான விஷயங்களைப் பதியும் சந்திராவின் கதையுலகில் இயற்கை பிரிக்க முடியாத கூறாக விளங்குகிறது. ஒரு மலைக்கிராமம் தொடங்கி சூது நிரம்பிய பெருநகரம்வரை புவியியல் அடையாளங்களாகக் கொண்ட சந்திராவின் கதையுலகப் பரப்பு வசீகரமானது" என எழுத்தாளர் நஞ்சுண்டன் குறிப்பிடுகிறார்.

"தனித்த பறவையொன்றின் கீதமாய் காற்றில் கலந்து சன்னமாய் மனதிற்குள் ஒலிக்கச் செய்கின்றன சந்திராவின் கவிதைகள். மீளாத் துயரொன்றின் மீதேறிய கண்ணீரின் வார்த்தைகள் அவை. துரோகமும் மரணமும் அன்பு முறிதலுமாய் வாழ்க்கை துன்பங்களை பரிசளிக்கையில் அதற்கு பதிலாய் மொழியின் வாயிலாக வெறுமையின் வரைபடங்களை கவிதைகளாக வெளிப்படுத்துகிறார் சந்திரா" என்று சந்திராவின் கவிதைகளைப் பற்றி கவிஞர் உமாஷக்தி குறிப்பிடுகிறார்.

கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது

விருதுகள், பரிசுகள்

  • புதுமைபித்தன் நினைவுச் சிறுகதை பரிசு, காலச்சுவடு
  • சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான ஆனந்த விகடன் விருது (2008)
  • சுந்தர ராமசாமி விருது (நெய்தல் அமைப்பு),
  • சிகரம் தொட்ட பெண்கள் விருது (விஜய் டிவியின் இலக்கியத்திற்கான விருது)
  • மதிப்புறு பெண் இயக்குனர் விருது, தமிழ்நாடு முற்போக்கு கலை, இலக்கிய சங்கம் (2019)
  • சிறந்த கவிதைத் தொகுப்புக்கான தேவதேவன் விருது மிளகு கவிதைத் தொகுப்பிற்காக,கோட்டை தமிழ் மன்றம் (2021)
  • கலைஞர் பொற்கிழி விருது, சோளம் கதைத் தொகுப்பிற்காக (2022)

படைப்புகள்

சிறுகதைத் தொகுப்புகள்
  • பூனைகள் இல்லாத வீடு (உயிர்மை 2007)
  • காட்டின் பெருங்கனவு (உயிரெழுத்து,2009)
  • அழகம்மா (உயிரெழுத்து 2011)
  • சோளம் (மொத்த கதைகளின் தொகுப்பு)(2022)
கவிதைத் தொகுப்புகள்
  • நீங்கிச் செல்லும் பேரன்பு ( உயிரெழுத்து,2009)
  • வழிதவறியது ஆட்டுக்குட்டியல்ல கடவுள் (2015)
  • மிளகு (எதிர் வெளியீடு,2020)

திரைத்துறையில் பங்களிப்புகள்

இயக்குனர், உதவி, துணை, இணை இயக்குனராகப் பங்களித்த திரைப்படங்கள்

இயக்குனர்

கள்ளன் (2022)

இணை இயக்குனர் (Associate director) /மதுரை வட்டார வழக்கு பயிற்றுனர்

சூரரைப் போற்று (இயக்குனர் சுதா கோங்குரா)

துணை இயக்குனர்
  • ரெட்டைச்சுழி( இயக்கம்: தாமிரா)
உதவி இயக்குனர்
  • ராம் (இயக்கம்:அமீர்)
  • பருத்திவீரன் (இயக்கம்:அமீர்)
  • கற்றது தமிழ்( இயக்கம்:ராம்)
  • யோகி (இயக்கம்: சுப்ரமண்யசிவா)
தொலைக்காட்சி

திரை வடிவ எழுத்து (script writing) கலர்ஸ் டிவியின் கோடீஸ்வரி

உசாத்துணை

இணைப்புகள்

அடிக்குறிப்புகள்



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.