கு. சின்னப்ப பாரதி
கு. சின்னப்ப பாரதி (சின்னப்பன்; கு.சி.பா.) (மே 2, 1935-ஜூன் 13, 2022) கவிஞர். எழுத்தாளர். அரசியல்வாதி. தொழிற்சங்கவாதி. இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் முழுநேர ஊழியராகப் பணியாற்றினார். இடதுசாரிக் கொள்கைகளைத் தனது படைப்புகளில் முன் வைத்தார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார்.
பிறப்பு, கல்வி
கு. சின்னப்ப பாரதி, நாமக்கல்லில் உள்ள பொன்னேரிப்பட்டியில் குப்பண்ணக் கவுண்டர்-பெருமாயி இணையருக்குப் பிறந்தார். உள்ளூர் திண்ணைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். உயர்நிலைப் பள்ளிக் கல்வியை பரமத்தி வேலூரில் உள்ள கந்தசாமிக் கண்டர் உயர்நிலைப் பள்ளியில் கற்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இண்டர்மீடியட் படித்தார். டெல்லிப் பல்கலைக்கழகத்தில் ரஷ்ய மொழிபெயர்ப்புப் பாடப்பிரிவில் சேர்ந்தார். பெற்றோரின் வற்புறுத்தலுக்கு இணங்கி அப்படிப்பைக் கைவிட்டார்.
தனி வாழ்க்கை
கு. சின்னப்பபாரதி விவசாயத் தொழிலை மேற்கொண்டார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் முழுநேர ஊழியராகப் பணியாற்றினார். மனைவி செல்லம்மா. மகள்கள் பாரதி, கல்பனா.
இலக்கிய வாழ்க்கை
கு. சின்னப்ப பாரதி பள்ளியில் படிக்கும்போது திராவிடக் கொள்கையால் ஈர்க்கப்பட்டார். நண்பர் மூலம் மார்க்சிய சித்தாந்த அறிமுகம் ஏற்பட்டது. பொதுவுடைமை இயக்க நூல்கள் அறிமுகமாகின. மேலைநாட்டுப் புரட்சிகளையும், மார்க்சியத்தையும் அறிந்து கொண்டார். பாரதியின் கவிதைகளும், மு.வ. வின் எழுத்துக்களும் இவரைக் கவர்ந்தன. பாரதி மீது கொண்ட பற்றால் சின்னப்ப பாரதி என்ற பெயரில் எழுதினார்.
நில உடைமை எப்போ? என்னும் தலைப்பிலான முதல் கவிதை, 1955-ல் வெளிவந்தது. கவிஞர் தமிழ் ஒளி இக்கவிதையைப் பாராட்டினார். ஜனசக்தியில் இவரது கவிதைகள் தொடர்ந்து வெளியாகின. அவை தொகுக்கப்பட்டு நில உடைமை எப்போ? என்னும் தலைப்பில் நூலாக வெளிவந்தன. முதல் சிறுகதை தெய்வமாய் நின்றான். ஒட்டர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து கிணற்றோரம் என்னும் படைப்பைத் தந்தார். தொடர்ந்து சமூக உயர்வை அடிப்படையாக வைத்துப் பல நாவல்களை எழுதினார். கொல்லிமலையில் வாழும் மக்களின் சிரமங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட புதினம் சங்கம். பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் தமிழ் புதினமாக இது கருதப்படுகிறது. இவரது சுரங்கம் என்ற நாவல் நிலக்கரிச் சுரங்கத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாகும். மேற்கு வங்காளம் அசன்சாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களுடன் பல மாதங்கள் தங்கிகள ஆய்வு செய்து இந்நாவலை எழுதினார்.
இவரது நாவல்களில் சில சமஸ்கிருதம், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, வங்காளம், மராத்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, டேனிஷ், சிங்களம், உஷ்பேக் உள்ளிட்ட 13 மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.
இதழியல்
கு. சின்னப்ப பாரதி, கே.முத்தையாவுடன் இணைந்து செம்மலர் இதழ் உருவாக்கத்தில் பங்களித்தார். இரண்டு ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பல கட்டுரைகளை, விமர்சனங்களை அதில் எழுதினார்.
ஆங்கிலத்தில் ILA quarterly (Indian Literature and Art-quarterly) என்கிற காலாண்டு இலக்கிய இதழை நடத்தினார்.
அரசியல்
கு. சின்னப்ப பாரதிக்கு, கல்லூரிக் காலகட்டத்தில் பொதுவுடைமைக் கட்சியின் மாணவர் இயக்கத்தினருடன் தொடர்பு ஏற்பட்டது. மாணவர் அமைப்பை வலுப்படுத்த பல கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களை அமைப்பில் சேர்த்தார். 1957ல், மாஸ்கோவில் நடந்த சர்வதேச இளைஞர் மாநாட்டில், தமிழக மாணவர் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார். 1960-ல், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் முழு நேர உறுப்பினரானார். கிராமப் பகுதிகளுக்கும் மலைப்பகுதிகளுக்கும் சென்று மக்களிடம் பொதுவுடைமை இயக்கத்தைப் பரப்பினார்.
கு. சின்னப்ப பாரதி, பொதுவுடைமைக் கட்சியின் நாமக்கல் மாவட்ட நகரச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினராகப் பணியாற்றினார். சேலத்தில் கரும்பு விவசாயிகள் சங்கம், ஆலைப்பாட்டாளிகள் சங்கம் அமையக் காரணமானார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கத்திற்கு உழைத்தவர்களுள் கு. சின்னப்பபாரதியும் ஒருவர்.
இந்தியாவின் பல பகுதிகளுக்கும், சீனா, இலங்கை, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்குப் பயணம் செய்து அங்குள்ள இடதுசாரி எழுத்தாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு செயல்பட்டார்.
திரை வாழ்க்கை
கு. சின்னப்ப பாரதி, பாதை தெரியுது பார் திரைப்படத்திற்கான மூலதனத்தை நாமக்கல்லில் திரட்டிக் கொடுத்ததுடன் தானும் அப்பட்டத்திற்கு முதலீடு செய்தார். மலையாளத்தில் உருவான பொய்முகங்கள் படத்தின் உருவாக்கத்திற்கும் நிதி மூலதனம் அளித்தார். ஜனசக்தி பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் பெரும் பணத்தை முதலீடு செய்து இழப்புக்கு உள்ளானார்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.