கோவிலடி ரங்கநாத பெருமாள் ஆலயம்

From Tamil Wiki
அப்பாள ரங்கநாதர் கோயில்

கோவிலடி ரங்கநாதப் பெருமாள் ஆலயம் ( ) (கோயிலடி அப்பாள ரங்கநாதர் ஆலயம். அப்பால ரங்கநாதர் கோயில்) தஞ்சை மாவட்டத்தில் அமைந்த விஷ்ணு ஆலயம். ஆழ்வார்களின் பாடல்பெற்ற நூற்றெட்டு திவ்யதேசங்களுள் எட்டாவது ஆலயம். சோழநாட்டின் ஆறாவது திருத்தலம்.

இடம்

தஞ்சாவூர் அருகே திருக்காட்டுப்பள்ளியை ஒட்டி கோயிலடி என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது.

தெய்வங்கள்

  • மூலவர்: அப்பால ரெங்கநாதர் (அப்பக் குடத்தான்).
  • தாயார் : ஸ்ரீமத் கமலவல்லி தாயார், இந்திரா தேவி.
  • பிறதெய்வங்கள்: விநாயகர், நம்மாழ்வார், ராமானுஜர், ஆழ்வார்கள், கருடன், வேணுகோபாலன், விஷ்வக்சேனர்.
  • தீர்த்தம் : இந்திர புஷ்கரிணி.

தொன்மம்

நம்மாழ்வார் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளை கடைசியாக மங்களாசாசனம்  செய்துவிட்டு இங்கேயே வீடுபேறடைந்தார் என்று நம்பப்படுகிறது.

வரலாறு

இந்த ஆலயம் இருக்கும் கோவிலடி ஊரின் பழைய பெயர் திருப்பேர் நகர். காவேரிக்கரையில் விஷ்ணு பள்ளி கொண்டிருக்கும் பஞ்சரங்க தலங்களில் ஒன்று.அப்பாலரங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தை நான்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

ஆலய அமைப்பு

ஆலயக் கருவறையில் ரங்கநாதர் புஜங்க  சயனத்தில் (ஒருக்களித்து படுத்த கோலத்தில்) மேற்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். பெருமாளின் மார்பில் ஸ்ரீதேவி பொறிக்கப்பட்டிருக்கிறாள். அருகில் மார்க்கண்டேய  மகரிஷி அமர்ந்திருகிறார். பெருமாள் அப்பக் குடத்தைப் பற்றியபடி காட்சி தருகிறார். வெளியே தனிச் சந்திதியில் கமலவல்லித்தாயார் கிழக்கு நோக்கி கோயில்கொண்டிருக்கிறார்.  உட்பிரகாரத்தில்  விநாயகர், நம்மாழ்வார், ராமானுஜர், ஆழ்வார்கள், கருடன், வேணுகோபாலன், விஷ்வக்சேனர்  ஆகியோர் இருக்கிறார்கள்

இக்கோயிலுக்கு சோழ, பல்லவ மன்னர்களும், அதன்  பின்பு விஜயநகர மன்னர்களும் திருப்பணி செய்திருக்கிறார்கள்.

உசாத்துணை

அப்பக்குடத்தான் ஆலயம். வரலாறு