கல்லாடனார் (சங்க காலம்)

From Tamil Wiki
Revision as of 08:20, 10 February 2022 by Jeyamohan (talk | contribs)

கல்லாடனார் (பொயு 2க்கு முன்பு) சங்க காலத்தில் வாழ்ந்தவர். தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடியவர். கள்வர்கோமான் புல்லி, பொறையாற்றூர் கிழான் அம்பர் கிழான் அருவந்தை (அருவன் தந்தை) ஆதரிக்கப்பட்டவர்.

ஊர், பெயர், வரலாறு

இவர் கல்லாடம் என்னும் ஊரைச்சேர்ந்தவர் என்பதனால் இப்பெயர் பெற்றிருக்கலாம். கல்லாடம் வேங்கட மலைக்கு வடக்கே ஆந்திர மாநிலத்தில் உள்ள ஊர்*. இவர் வேங்கட மலையையையும் அதன் சாரலில் ஆட்சி செய்த கள்வர் குலத்துச் சிற்றரசன் புல்லியையும் ஒரு பாடலில் குறிப்பிடுகிறார். ’கல்லா இளையர் பெருமகன் புல்லி வியன்தலை நல்நாட்டு வேங்கடம் கழியினும்’ (அகநாநூறு 83 ) புல்லிய வேங்கட விறல் வரைப் பட்ட ஓங்கல் வானத்து உறையினும் பலவே! என புறநானூறு 385 ஆம் பாடலில் குறிப்பிடுகிறார். தன் குடும்பம் பசியால் வாடியபோது தெற்கே சோழநாடு வந்தார். வழியில் பொறையாற்று கிழான் அம்பர்கிழான் அருவந்தை இவருக்கு உதவினான். வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென ஈங்கு வந்து இறுத்த என் இரும் பேர் ஒக்கல் என புறநாநூறு 391 ஆம் பாடலில் குறிப்பிடுகிறார்.

புறநாநூறு 385 ஆம் பாடலில் அம்பர் கிழான் அருவந்தையை காவிரி அணையும் தாழ்நீர்ப் படப்பை நெல்விளை கழனி அம்பர் கிழவோன் நல்அரு வந்தை, வாழியர் ( காவிரி ஓடும் அம்பர் கிழான் அருவந்தை வாழ்க) அம்பர் என இங்கே குறிப்பிடப்படுவது தரங்கம்பாடியை அடுத்துள்ள பொறையாறு. சங்ககாலத்தில் பெரியன் என்னும் பெயர் கொண்ட மன்னன் இங்கு இருந்துகொண்டு ஆண்டுவந்தான்.

கல்லாடனார் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்தில் பகைவரை வெற்றி கொண்ட காட்சியை பாடியிருக்கிறார். புறநாநூறு 23 ஆம் பாடலில் தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் அழிக்கப்பட்ட தலையானங்கானத்தை பாடியிருக்கிறார். புறநாநூறு 25 ஆம் பாடலில் நெடுஞ்செழியனின் தலையானங்கானத்து வெற்றியை பாடியிருக்கிறார்.புறநாநூறு 371 லும் நெடுஞ்செழியன் பாடப்பட்டிருக்கிறான்

பாடல்கள்

சங்கநூல்களில் கல்லாடனார் பாடிய 14 பாடல்கள் உள்ளன. இவர் பாடிய பாடல்கள் அகநானூறு (பாடல் எண் 9, 63, 113, 171, 199, 209, 333) குறுந்தொகை (பாடல் எண் 260, 269) புறநானூறு (பாடல் எண் 23, 25, 371, 385, 391) ஆகியவை.