being created

குரு நமசிவாயர்

From Tamil Wiki
Revision as of 23:49, 18 December 2022 by ASN (talk | contribs) (Para Added: Images Added)
குரு நமசிவாயர்
திரு அண்ணாமலை
குகை நமசிவாயர்

குரு நமசிவாயர், திருவண்ணாமலையில் வாழ்ந்த குகை நமசிவாயரின் சீடர். தனது குருவாலேயே ‘குரு நமசிவாயர்’ என்று அழைக்கப்பட்டார். குருவின் வாக்கை ஏற்று சிதம்பரம் திருத்தலம் சென்று, பல் வேறு ஆலய, ஆன்மிக நற்பணிகளை மேற்கொண்டு அங்கேயே வாழ்ந்து நிறைவெய்தினார். இவர் பாடிய ‘அண்ணாமலை வெண்பா’ மிக முக்கியமான ஆன்மிக நூல்.

தோற்றம்

குரு நமசிவாயரது இயற்பெயர் நமசிவாயமூர்த்தி. இவர் எங்கு பிறந்தார், எப்போது பிறந்தார் என்பது பற்றிய முழுமையான விவரங்கள் கிடைக்கவில்லை. பிறவியிலேயே ஞானம் வாய்க்கப் பெற்றிருந்த அவர் தனக்கு ஒரு நல்ல குருவைத் தேடிக் கொண்டிருந்தார். பல இடங்களுக்கும் அலைந்து திரிந்து, இறுதியில் திருவண்ணாமலையை அடைந்தார். அங்கு வாழ்ந்த துறவி குகை நமசிவாயரைத் தனது குருவாகக் கருதினார்.

குருவும் சீடரும்

குரு குகை நமசிவாயர் செல்லும் இடங்களில் எல்லாம் பின் செல்வதும், அவர் தங்கும் இடத்திலேயே தங்குவதும் சீடர் நமசிவாயத்தின் வழக்கமானது.

குருப் பிரசாதம்

குகை நமசிவாயருக்குப் பசித்தால் ஏதாவது வீடுகளின் முன் போய் நிற்பார். கையை மெல்லத் தட்டுவார். ‘அருணாசலம்! அருணாசலம்!‘ என்பார். உடனே அவ்வீட்டிலுள்ளவர்கள் வெளியே வருவர். கைகள் இரண்டையும் ஒன்று சேர்த்துக் குவிப்பார் குகை நமசிவாயர். அகல விரிந்த அந்த திருக்கரங்களில் அவ்வீட்டுப் பெண்கள் கூழையோ, பழங்கஞ்சியையோ ஊற்றுவர். அதனை உறிஞ்சிக் குடிப்பார். பின் சென்று விடுவார். சமயங்களில் அந்தக் கைகளின் வழியே மிகுதியான கஞ்சியானது கீழே வழியும். அப்படிக் கீழே விழும் அதனைக் கையேந்தி அருந்துவார் இளைஞர் நமசிவாயர். குரு உண்டு எஞ்சியவற்றை, குரு சேஷத்தை எந்த வித மன வேறுபாடுகளும் இல்லாமல், ‘குருப் பிரசாதம்‘ என்று கருதி அருந்துவார்.

சீடரின் சிரிப்பு

அண்ணாமலையின் அடிவாரத்து மலைப் பகுதியில் அமர்ந்திருப்பார் குகை நமசிவாயர். சமயங்களில் படுத்துக் கொண்டுமிருப்பார். இளைஞர் நமசிவாயம், குருவுக்கான பணிவிடைகளைச் செய்வார். பாதங்களை மெல்லப் பிடித்து விடுவார். குரு உறங்கிய பின்தான், தான் உறங்கச் செல்வார்.

ஒரு நாள்... குருவின் பாதங்களை மென்மையாகப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தார் இளைஞர் நமசிவாயம். பின் திடீரென்று பெருங்குரலில் சத்தம் போட்டுச் சிரிக்க ஆரம்பித்தார். திடுக்கிட்ட குகை நமசிவாயர், “நமசிவாயம், ஏன் சிரித்தாய், என்ன விஷயம்?” என்று கேட்டார்.

“ குருவே! திருவாரூர் தியாகராஜர் சன்னதியில் சதிர்க் கச்சேரி நடந்து கொண்டிருக்கிறது. அங்கே வேகமாக நாட்டியமாடிக் கொண்டிருந்த பெண்ணொருத்தி கால் தடுக்கிக் கீழே விழுந்து விட்டாள். அதனைப் பார்த்த மக்கள் எல்லாம் சிரித்தார்கள். அதுதான் நானும் சிரித்தேன்” என்றார்.

”இருப்பது இங்கே! ஆனால் காட்சி என்னவோ அங்கே! ஆச்சர்யம்!” என்று வியந்த குகை நமசிவாயர், சீடர் நமசிவாயத்தை ஆசிர்வதித்தார்.

அங்கேயும் அங்கேயும்

ஒருநாள்... ஆலமரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருந்தார் குகை நமச்சிவாயர். அருகே  நின்று கொண்டிருந்த சீடர் நமசிவாயம், திடீரெனத் தன் வேஷ்டி நுனியை இரண்டு கைகளாலும் கசக்கினார். எரிந்து கொண்டிருக்கும் எதையோ அணைப்பது போல பாவனை செய்தார்.

குகை நமசிவாய வியந்து, “என்னப்பா, என்ன ஆயிற்று?” என்று கேட்டார்.

”குருவே, தில்லைக் கோயிலில் எரிந்து கொண்டிருந்த விளக்குத் திரியை ஒரு எலி இழுத்து வந்து திரைச் சீலை அருகே போட்டு விட்டது. அதனால் திரைச் சீலை தீப்பற்றி விட்டது. அதைக் கண்ட குருக்கள் அந்தத் தீயை அணைத்தார். உடனே நானும் அது மேலும் எங்கும் பற்றிப் பரவி விடாமல் இருக்க அணைத்தேன்” என்றார்.

ஆச்சர்யம் அடைந்த குகை நமசிவாயர் எழுந்து கொண்டு, ”நமசிவாயம் நீ இருப்பது மிக மிக உயர் நிலையப்பா, மிக மிக உயர்நிலை” என்று சொல்லி ஆசிர்வதித்தார். இளைஞர் நமசிவாயமும், குருவின் பாதங்களில் பணிந்து வணங்கினார்.

குருவின் சோதனைகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.