அஷ்ட லிங்க வழிபாடு

From Tamil Wiki
Revision as of 00:00, 8 December 2022 by ASN (talk | contribs) (Table Listed)
திருவண்ணாமலை

புனித மலையான திருவண்ணாமலையை மக்கள் வலம் வந்து வழிபடுவது ‘கிரிவலம்’ என்று அழைக்கப்படுகிறது. திருவண்ணாமலையில் மலையே சிவபெருமானாகக் கருதப்படுவதால், ஆலயங்களில் இறைவனை வலம் வந்து வழிபடுவதைப் போல, பக்தர்கள் மலையை வலம் வந்து வழிபடுகின்றனர். கிரிவலப் பாதையில் ‘அஷ்ட லிங்கங்கள்’ அமைந்துள்ளன. பக்தர்கள் இந்த லிங்கங்களைத் தரிசித்து தங்கள் வழிபாட்டைத் தொடர்கின்றனர்.

அஷ்டலிங்க அமைவிடம்

அஷ்ட லிங்கங்கள்

திருவண்ணாமலையில், மலை வலம் வருதல் என்பது தொன்று தொட்டுப் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டு முறைகளுள் ஒன்றாக உள்ளது. கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அஷ்ட லிங்கங்களை வழிபட்டு மக்கள் கிரிவலத்தைத் தொடர்கின்றனர்.

திருவண்ணாமலையைக் காக்கும் எண்திசைக் காவல் தெய்வங்களாக, அஷ்ட திக்கு பாலகர்களாக ‘அஷ்ட லிங்கங்கள்’ கருதப்படுகின்றன. பௌர்ணமி நாள் அன்று அஷ்ட லிங்கங்களை வழிப்பட்டால் சகல பிரச்சினைகளும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

  • இந்திர லிங்கம்
  • அக்னி லிங்கம்
  • எம லிங்கம்
  • நிருதி லிங்கம்
  • வருண லிங்கம்
  • வாயு லிங்கம்
  • குபேரலிங்கம்
  • ஈசான்ய லிங்கம்

- ஆகிய எட்டு லிங்கங்களும் அஷ்ட லிங்கங்களாகப் போற்றி வழிபடப்படுகின்றன.

அஷ்ட லிங்கங்கள்
அண்ணாமலையார் - உண்ணாமுலை அம்மன்
திருவண்ணாமலை - புனிதக் கோபுரங்கள்

அஷ்டலிங்க வழிபாடு

இந்திர லிங்கம் (கிழக்கு)

திருவண்ணாமலை தேரடி சாலையில் ராஜகோபுரத்திற்குச் சற்றுத் தொலைவில் அமைந்துள்ள லிங்கம் இந்திர லிங்கம். அஷ்ட திக்குப் பாலகர்களில் இந்திரன் கிழக்குத் திசையின் அதிபதி. ஐராவதம் என்னும் யானையை உடையவன். தேவர்களுக்குத் தலைவனான அவன், தனது இந்திர பதவி நிலைத்திருக்க வேண்டி தவம் செய்து அண்ணாமலையாரை வணங்கி வழிபட்டான். அவ்வாறு அவன் வழிபட்ட லிங்கம்,  அவன் பெயரில் ‘இந்திர லிங்கம்’ என அழைக்கப்படுகிறது.

அக்னி லிங்கம் (தென் கிழக்கு)

அக்னிப் பிழம்பான அண்ணாமலையாரை, அக்னிக் கடவுள் வழிபட்ட லிங்கமே அக்னி லிங்கம். பஞ்சபூதத் தலங்களில் நெருப்பைக் குறிக்கும் இத்தல ஈசனை, வேத வழிபாட்டில் மிக முக்கிய இடம் பிடித்த வேள்விக் கடவுளான அக்னி, வழிபட்டு புனிதமடைந்தான்.

இந்த லிங்கத்தின் அருகில் அக்னி தீர்த்தம் உள்ளது. இந்தத் தீர்த்தம், அண்ணாமலையில் உள்ள 360 புனித தீர்த்தங்களுள் ஒன்று.

ஸ்ரீ எமலிங்கம் (தெற்கு)

எமன் அறக்கடவுள். தர்மராஜன் என்று போற்றப்படுபவன். வேண்டியவர், வேண்டாதவர் பாராது தன் கடமைகளைச் செய்கிறவன். அவன் பூஜித்த லிங்கம் இது. எமன் கட்டளை நிறைவேற்றும் கிங்கரர் முதலானோர் இங்கிருந்து தான் புறப்பட்டு செல்லுகின்றனர் என்ற நம்பிக்கை உள்ளது.

நிருதி லிங்கம் (தென்மேற்கு)

தென்மேற்கு திசைக்கு அதிபதி நிருதி. இவர், தாணு என்ற இயற்பெயர் கொண்டவர். பிரம்மாவின் புத்திரர். நீண்ட தவம் செய்து அஷ்டவசுக்கள் ஆகும் பாக்கியம் பெற்றார். இவர் அண்ணாமலைக்கு வந்து தவம் செய்து சிவனைப் பூஜித்து வழிப்பட்டார். அந்த லிங்கமே லிங்கம் ’நிருதி லிங்கம்’ என அழைக்கப்படுகிறது. இதன் அருகே ’சனி தீர்த்தம்’ உள்ளது.

நிருதி லிங்கத்தின் அருகே, பார்வதி தேவிக்கு, சிவபெருமான், ரிஷப வாகனத்தில்  காட்சி அளித்தார். இங்கிருந்து மலையைக் காணும்போது ’நந்தி’யின் (ரிஷபம்) முகம் தெரியும். வேறு எங்கிருந்தும் இந்தத் தோற்றம் தெரியாது என்பது இதன் சிறப்பு.

ஸ்ரீ வருண லிங்கம் (மேற்கு திசை)

மழைக்கடவுளான வருணன், சிவபெருமானைப் பூஜித்து வழிபட்ட லிங்கம் வருண லிங்கம். இதன் அருகே வருண தீர்த்தம் உள்ளது.

ஸ்ரீ வாயு லிங்கம் (வட மேற்குத்திசை)

காற்றுக் கடவுள். ஜீவராசிகள் உயிர் வாழ அடிப்படைத் தேவையான காற்றின் தெய்வம் வாயு பகவான் என்று போற்றப்படுகிறார். அவர், திருவண்ணாமலையில் தவம் செய்து வழிபட்டார். காற்றுக் கடவுள் வழிபட்ட லிங்கம், ‘வாயு லிங்கம்’ என அழைக்கப்படுகிறது. இதன் அருகே ‘வாயு தீர்த்தம்’ உள்ளது.

குபேர லிங்கம் (வடக்கு)

செல்வங்களுக்கு அதிபதியாகப் போற்றப்படும் குபேரன் வழிபட்ட லிங்கம், குபேர லிங்கம். சாபத்தால் தன் செல்வங்களை இழந்த குபேரன், இங்கு இறைவனை பூஜித்து, இழந்த செல்வங்களை திரும்பப் பெற்றதாக ஐதீகம்.

ஈசான்ய லிங்கம் (வட கிழக்கு)

ஈசான்ய திசைக்கு அதிபதி ஈசானன். ஸ்ரீ ருத்ரரின் அம்சமுள்ளவன். அவன் பூஜித்த லிங்கமே ஈசான லிங்கம். அன்னை பார்வதி தேவி கிரிவலம் வருகையில், வடகிழக்குப் பகுதியான ஈசான்ய திசைக்கு வந்தபோது, சிவபெருமான்,  ரிஷப வாகனத்தில் அன்னைக்கு காட்சி அளித்தார். அன்னைக்கு இடப்பாகம் தந்து அரவணைத்தார்.

ஈசான்ய லிங்கம், கிரிவலப்பாதையின் முடிவில் இடுகாட்டை ஒட்டி அமைந்துள்ளது. இதன் எதிரே ஈசான்ய மடமும், அம்மணி அம்மாளின் சமாதி ஆலயமும் அமைந்துள்ளன. அஷ்ட லிங்க வழிபாட்டில் இதுவே இறுதி லிங்க வழிபாடாகும்.  

கிரிவலப் பாதையில் அஷ்ட லிங்க வரிசையில் சேராத சூரிய லிங்கம், சந்திர லிங்கம் போன்றவையும் உள்ளன. சூரிய தேவனும், சந்திர தேவனும் அண்ணாமலைக்கு வந்து தவம் செய்து வழிபட்ட லிங்கங்களாக இவை கருதப்படுகின்றன.

அஷ்டலிங்க தரிசனப் பலன்கள்

லிங்கத்தின் பெயர் திசை பிரதிஷ்டை செய்தவர் சம்பந்தப்பட்ட நவக்கிரகம் வழிபடுதலால் கிடைக்கும் பலன்கள்
இந்திர லிங்கம் கிழக்கு இந்திரன் சுக்கிரன் நீண்டஆயுள், புகழ், செல்வ வளம்
அக்னி லிங்கம் தென் கிழக்கு அக்னி சூரியன் நோய்களிலிருந்து நிவாரணம்
எம லிங்கம் தெற்கு எமன் செவ்வாய் நீண்ட ஆயுள்
நிருதி லிங்கம் தென்மேற்கு நிருதி ராகு உடல் நலம், செல்வம்,பிள்ளைப்பேறு
வருண லிங்கம் மேற்கு வருணன் சனி நோய்களிலிருந்து நிவாரணம் (குறிப்பாக நீர் சம்பந்தப்பட்ட வியாதிகள்)
வாயு லிங்கம் வடமேற்கு வாயு கேது நோய்களிலிருந்து நிவாரணம் (குறிப்பாக இதயம், நுரையீரல் வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகள்)
குபேரலிங்கம் வடக்கு குபேரன் சுக்கிரன் செல்வம் மற்றும் உன்னதமான வாழ்க்கை
ஈசான்ய லிங்கம் வடகிழக்கு ஈசான்யன் புதன் மன அமைதி, ஞானம்