சிற்பி (சிவசரவணபவன்)

From Tamil Wiki
Revision as of 11:20, 7 December 2022 by Jeyamohan (talk | contribs)
சிற்பி
சிற்பி

சிற்பி சிவசரவணபவன் ( 28 பெப்ரவரி 1933 - 9 நவம்பர் 2015 ) இலங்கைத் தமிழ் எழுத்தாளர், இதழாளர். இலங்கையின் தொடக்ககாலச் சிற்றிதழான கலைச்செல்வியின் ஆசிரியர்.

பிறப்பு கல்வி

சிவசரவணபவன் 28 பெப்ரவரி 1933 ல் யாழ்ப்பாண மாவட்டம் காரைநகரில் சிவசுப்பிரமணியக் குருக்கள், சௌந்தராம்பாள் இணையருக்குப் பிறந்தார். கந்தரோடை தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், ஸ்கந்தவரோதயா கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் கற்று பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ் மொழிக்கான ராஜா சேதுபதி தங்கப் பதக்கத்தைப் பெற்றார்

தனிவாழ்க்கை

சிவசரவணபவன் யாழ்ப்பாணம் திருநெல்வேலி செங்குந்த இந்துக் கல்லூரியில் ஆசிரியராகவும், உசன் இராமநாதன் மகா வித்தியாலயம், யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம் ஆகியவற்றில் அதிபராகவும் பணியாற்றினார்.

இதழியல்

சிவசரவணபவன் 1953 இல் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் கற்கும்போது செலையூர் மன்றம் வெளியிட்ட இளந்தமிழன் என்ற இதழின் ஆசிரியராக பணியாற்றினார்

கலைச்செல்வி இதழின் ஆசிரியராக எட்டாண்டுகள் (1958 -1966) பணியாற்றினார். கலைச்செல்வி ஈழ இலக்கியத்தில் வளர்ச்சியை உருவாக்கிய இதழாகக் கருதப்படுகிறது.

இலக்கியம்

சிவசரவணபவன் திருவல்லிக்கேணி அவ்வை தமிழ்ச்சங்கத்தினர் நடத்திய கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்றார். சிற்பி என தனக்கு புனைபெயர் சூட்டிக்கொண்டார். அவரது முதற் சிறுகதையான மலர்ந்த காதல் 1952 இல் சுதந்திரன் இதழில் வெளியானது

1955 ல் உதயம் இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் மறுமணம் என்ற சிறுகதை முதற்பரிசு பெற்றது. தமிழ்நாட்டு இதழ்களான கல்கி, மஞ்சரி, புதுமை, கலைமகள், தீபம் ஆகியவற்றில் எழுதினார்

பன்னிரு ஈழத்து எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து 1958 ல் ஈழத்துச் சிறுகதைகள் என்னும் சிறுகதைத் தொகுப்பைக் கந்தரோடைத் தமிழருவிப் பதிப்பகம் மூலம் வெளியிட்டார். ஈழத்து எழுத்தாளர்களின் சிறுகதைகளின் முதல் தொகுதி இது

விருதுகள்

  • யாழ் இலக்கிய வட்டம் – இலங்கை இலங்கைப் பேரவை விருது 2008-2009 ( நினைவுகள் மடிவதில்லை)
  • எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது 2011

நூல்கள்

சிறுகதை
  • நிலவும் நினைவும்
  • சத்திய தரிசனம்
  • நினைவுகள் மடிவதில்லை
நாவல்
  • உனக்காகக் கண்ணே
  • சிந்தனைக் கண்ணீர்
  • அன்பின் குரல்