being created

அந்தகக்கவி வீரராகவ முதலியார்

From Tamil Wiki

அந்தகக்கவி வீரராகவ முதலியார் 15-ஆம் நூற்றாண்டில் தொண்டை நாட்டில் வாழ்ந்த புலவர். கண்பார்வை அற்றதால் அந்தகக்கவி என அழைக்கப்பட்டார். சிலேடைச் சுவை நிறந்த தனிப்பாடல்களுக்காகப் புகழ் பெற்றவர். சந்திரவாணன் கோவை, திருவாரூருலா, சேயூர்க்கலம்பகம், சேயூர்முருகன்பிள்ளைத்தமிழ் போன்ற நூல்களை இயற்றினார். ஈழத்து அரசன் பரராசசிங்கரால் புகழ்ந்து பாடப்பட்டவர்.

வாழ்க்கை குறிப்பு

வீரராகவ முதலியார் செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள பூதூரில் வேளாண் குலத்தில் வடுகநாதர் என்பவருக்குப் பிறந்தார். பிறவியிலேயே பார்வையற்றவர். செவி வழியாக தமிழ் இலக்கிய இலக்கணங்களைப் பாடம் கேட்டார்.

இலக்கிய வாழ்க்கை

வீரராகவ முதலியார் பல புரவலர்களையும் அரசர்களையும் பாடிப் பரிசில் பெற்று வாழ்க்கையை நடத்தினார். சிலேடை நயத்துடனும் நகைச்சுவையாகவும் பாடல்கள் புனைந்தார். சோழ நாட்டிற்குச் சென்று சில காலம் தங்கினார். அதன்பின் ஈழத்திற்குச் சென்று பரராஜசேகரன் எனும் மன்னனின் அவைக்குச் சென்று பாடல்கள் பாடி, பரிசில் பெற்றுத் திரும்பினார். கந்தபுராணம் எழுதிய கச்சியப்ப சிவாச்சாரியாரின் சமகாலத்தவர். பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, உலா ஆகிய சிற்றிலக்கிய வகைமைகளில் நூல்கள் இயற்றினார். திருவாரூரில் கோயில் கொண்ட தியாகேசரின் பெயரில் 'திருவாரூர் உலா' வும் கயத்தாற்றின் அரசன் பெயரில் 'கயத்தாற்றரசன் உலா' வும் பாடினார். பல தனிப்பாடல்கள் புனைந்தார். கடிதங்கள்போல் எழுதப்படும் சீட்டுக்கவிகளும் புனைந்தார். அரியிலூரில் உள்ள கிருஷ்ண ஒப்பிலாத மழவராயர் என்னும் ஜமீந்தாரைப் பாடி பரிசில் பெற்றார் என்று உ.வே. சாமிநாதையர்'என் சரித்திரம்' நூலில் குறிப்பிடுகிறார்.தனிப்பாடல் திரட்டு (110 புலவர்கள் பாடிய 1113 பாடல்களைக் கொண்ட நூல்) என்னும் நூலில் அந்தகக்கவி வீரராகவ முதலியாரின் 37 தனிப்பாடல்கள் இடம்பெறுகின்றன.


படைப்புகள்

  • திருக்கழுக்குன்றப் புராணம்
  • திருக்கழுக்குன்ற மாலை
  • சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ்
  • திருவாரூர் உலா
  • சந்திரவாணன் கோவை
  • கயத்தாற்றரசன் உலா
  • கீழ்வேளூர் உலா
  • திருவேங்கடக் கலம்பகம்
  • திருக்கண்ணமங்கைமாலை
  • திருவேங்கடமுடையான் பஞ்சரத்தினம்
  • வரதராசர் பஞ்சரத்தினம்
  • பெருந்தேவியார் பஞ்சரத்தினம்

உசாத்துணை

இலக்கியச்சித்திரம்-இனிய பிள்ளைத்தமிழ், மீனாட்சி பாலகணேஷ், வல்லமை







🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.